தக்க தருணத்தில் நான் கூறிய தீர்க்கதரிசனமே இன்று வென்றிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Saturday, July 1st, 2023

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எமது அரசாங்கம் ஒரு தெளிவான கொள்கையை முன்னெடுத்து வருகின்றது. எமது ஜனாதிபதி இந்த நாட்டினையும், நாட்டு மக்களையும் ஓர் இக்கட்டான சூழ் நிலையிலிருந்து மீட்பதற்காக முன்வந்தவர். எனவே, அவர் ஒரு திட்டத்தை முன்னெடுக்கின்றபோது, இந்த நாட்டையும், இந்த நாட்டு மக்களையும் ஒரு போதும் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மேற்கொள்ள உத்தேசித்துள்ள தேசிய கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பிலான நாடாளுடன்றில்  நடைபெறும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இந்த நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது நாட்டில் நிலவிய மிக மோசமான பிரச்சினைகள் அதாவது – அரகலய வன்முறைப் போராட்டங்கள். எரிபொருள் தட்டுப்பாடு, அதற்கான வரிசைகள், மின்சாரத் தடைகள், உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள் தட்டுப்பாடு, போசாக்கின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அவர் குறுகிய காலத்திற்குள் எட்டியிருக்கிறார்.

எமது நாடு அவலத்தில் தத்தளித்த வேளை நானும் சிலரைப்போல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க எத்தனித்திருக்கலாம். குறுகிய அரசியல் இலாப நோக்கில் குழப்பங்களை தூண்டி விட்டிருக்கலாம். எனக்கென்ன எதுவும் நடக்கட்டும் என்று சுத்த சுயலாப நோக்கில் சும்மா இருந்திருக்கலாம். தீராப்பிரச்சினையாக இதுவும் இருந்து விட்டு போகட்டுமே என்று மக்களின் அவலங்களை வைத்து அரசியல் கபட நாடங்களை நடத்தியிருக்கலாம். அப்படியெல்லாம் நான் செய்யப்போவதில்லை என்பதே வரலாற்று உண்மை. தக்க தருணத்தில் நான் கூறிய தீர்க்கதரிசனமே இன்று வென்றிருக்கிறது.

திக்கற்று நிற்கும் மக்களுக்கு திசைகாட்டி செல்லும் வல்லமை யாருக்கு உண்டென்று நான் கூறினேனோ அவரே நாட்டின் ஜனாதிபதியாக இருந்து நாட்டை மீட்டெடுத்து வருகின்றார்.

தேசிய கடன் மறுசீரமைப்பினை மேற்கொண்டால் நாட்டிலுள்ள வங்கிகள் பாதிக்கப்படும் என்றும், வங்கிக் கணக்கு வைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவை பாதிக்கப்படும் என்றும் பல்வேறு ஊகங்கள் எதிர்த் தரப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஊகங்களுக்கு அண்மையில் மத்திய வங்கியின் ஆளுநர் பதில் அளித்திருக்கின்றார். அதாவது, தேசிய கடன் மறுசீரமைப்பின் மூலம், வங்கிக் கட்டமைப்போ, ஊழியர் சேமலாப நிதியமோ, ஊழியர் நம்பிக்கை நிதியமோ பாதிக்கப்பட மாட்டாது என அவர் விளக்கமளித்துள்ளார்

இந்த நாட்டின் எதிர்கால முன்னேற்றம் சார்ந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதில் இந்த அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில்தான் நாம் இந்த தேசிய கடன் மறுசீரமைப்பினையும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

இதேநேரம்  எமது ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்து வருகின்ற திட்டங்கள் தொடர்பில் உலக நாடுகளே பாராட்டி வருகின்றன. உலக பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச அரங்கில் உரையாற்றுவதற்கு எமது ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்ற நிலையில், அவரது ஆளுமை பற்றி இங்கு வேறேதும் கூறத் தேவையில்லை என நினைக்கின்றேன்.

இந்த நாடு இருக்கின்ற நிலையில், அதைத் தாங்கிக் கொண்டு, வழி நடாத்தக்கூடிய சர்வலோக நிவாரணியாக எமது ஜனாதிபதி அவர்கள் திகழ்கின்றார் என்றே கூற வேண்டும் னவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வடக்கில் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழிலை மேற்கொள்ள வழிசமைத்துக் கொடுத்தவர்கள் நாம் - பாஷையூரில...
வவுனியா தினச் சந்தை செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க உதவுங்கள் - அமைச்சர் டக்ளஸிடம் வியாபாரிகள் கோரிக்கை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பனம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவ...