ஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Tuesday, July 9th, 2019

எமது வாழ்க்கையில் மறக்க இயலாத கறுப்பு ஜூலை ஏற்பட்டு, 36 ஆண்டுகள் சென்றுவிட்டுள்ள நிலையில், அன்று எமது மக்களது மனங்களில் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆற்றப்படாமலும், பரிகாரங்கள் காணப்படாமலும், மேலும், மேலும் ரணங்களை ஏற்படுத்தியும், இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் கசப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகின்ற தொடர் காலகட்டங்களில் 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையின் புகை மண்டலம் இன்னமும் அகலாதிருக்கின்ற நிலையில், ஜூலைக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் வெள்ளை அடித்தாலும், சிகப்பினை அடித்தாலும் கறுப்பு ஜூலையை கழுவுவதற்கு உங்களது கரங்களில் சுத்தம் போதாது என்றே எமது மக்கள் கருதுகின்றனர்

நீங்கள் சாலைக்கு வெள்ளை அடிப்பது, ஜூலைக்கு வெள்ளை அடிப்பது என்றில்லாமல், எமது மக்களின் வாழ்க்கைக்கு எப்போது வெள்ளை அடிக்கப் போகின்றீர்கள்? என்ற கேள்வியே இன்று எமது மக்கள் முன்பாக இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் குறைநிரப்பு மதிப்பீடு, தீவிர பொறுப்பு முகாமைத்துவ சட்டத்தின் கீழான பிரேரணை மற்றும் உற்பத்தி வரி விஷேட ஏற்பாடுகளின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது மக்கள் இருளில் இருக்கின்றனர். அந்த இருள் எமது மக்கள் ஒவ்வொருவரதும் மனங்களில் குடிகொண்டிருக்கின்றது. இந்த இருளை அகற்ற எமது மக்கள் இரவு – பகலாக அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். நிம்மதி தேடி கோவில்களுக்கு போக எண்ணினாலும், முதலில் அந்தக் கோவில்கள் பறிபோய்விட்டனவா? அல்லது இருக்கின்றனவா? என உறுதிப்படுத்திக் கொண்டு, அங்கே போக வேண்டிய நிலை இன்று எமது மக்களுக்கு உருவாகியிருக்கிறது.

இன்று இருக்கின்ற கோவில்கள்கூட நாளை அபகரிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் எமது மக்கள் மத்தியில் இப்போது ஏற்பட்டிருக்கின்றது. கறுப்பு ஜூலையில் தென் பகுதிகளிலிருந்து அடித்து விரட்டப்பட்ட எமது மக்கள் நீங்கள் சொல்கின்ற இந்த வெள்ளை ஜூலையாகின்ற நிலையில், இப்போது இருக்கின்ற அவர்களது சொந்தக் காணி, நிலங்களிலிருந்தும் துரத்தப்படுவார்களோ என்ற அச்ச நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற காலங்களை அண்டியதாக எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு காலக் கெடுக்களை வழங்கிக் கொண்டிருப்பதற்கு நாங்கள் எமது மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள் அல்லர் என்பதையும் தெரிவித்து, எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறத்த விரும்புகின்றேன்.

அதேநேரம், ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாதிருக்கின்ற நிலையில், எமது மக்களை மீண்டும், மீண்டும் பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடாதீர்கள் என்பதையும் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:

பூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்: நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...
கூட்டமைப்பினரால் அதிகாரப் பரவலாக்கக்தை கொண்டுவர முடியாமற் போனது ஏன்? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!
கிழக்கிற்கான ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினரை இணைத்துக் கொள்ள இணக்கம்: அமைச்சர் டக்ளஸின் முயற்சிக...

உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓர் இடைக்கால ஏற்பாடாக  65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளல...
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில்...
சுயலாப அரசியல்வாதிகளுக்கு உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் மகிழ்ச்சியே – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!