“சுரக்ச” காப்புறுதிக்கு காப்புறுதி இல்லை – ஊழலே மிஞ்சி இருக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 18th, 2019

பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு என மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் ஒரு காப்புறுதித் திட்டம் ‘சுரக்சா” – அதாவது பாதுகாப்பு என்ற பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அது தொடர்பில் அண்மைக்காலமாக சில பிரச்சினைகள் எழுப்பப்பட்டு வந்தன.

100 மில்லியன் ரூபா நிதி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் மூலமாக கல்வி அமைச்சருக்கோ அல்லது கல்வி அமைச்சுக்கோ வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்கு தற்போது விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிய வருகின்றது. அதன் ஒரு கட்ட விசாரணைகளின் பிரகாரம், மேற்படி காப்புறுதித் திட்டத்தின் முதற் கட்டம் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக செயற்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் அதை ஜே. டீ. போடா (J. D. BODA) எனும் தரகு நிறுவனத்தின் ஊடாக மீள் காப்புறுதி செய்துள்ளதாகவும், இந்த தரகு நிறுவனமே இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு கொமிசன் தொகையினை வழங்கியதாகவும், இந்தத் தொகையானது மீள் காப்புறுதி தவணைகள் மூன்றுக்கென செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதில் ஒரு தவணைக் கொடுப்பனவிற்கான எழுத்து மூல ஆவணங்கள் தவிர ஏனைய இரண்டு தவணைகளுக்கான கொடுப்பனவு தொடர்பிலான எழுத்து மூல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அது காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் நிதிப் பிரிவே அறியும் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் தொடர்வதாகவும் அறியக் கிடைக்கின்றது.

அதேநேரம், மேற்படி காப்புறுதித் திட்டத்தின் பயனாளிகளான மாணவ, மாணவிகளின் விபரங்களைத் திரட்டியுள்ளதிலும் தகுந்த வழிமுறைகள் பேணப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது.

இங்கே கூறப்படுகின்ற ஜே. டீ. போடா (J. D. BODA) என்ற தரகு நிறுவனம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருந்த நிறுவனம் என்றும் கூறப்படுகின்றது. அதாவது, ஸ்ட்ரெடிஜிக் இன்சூரன்ஸ் பிரோக்கர்ஸ்; (Strategic Insurance Brokers) நிறுவனம் DSP/00007/2018 ன் கீழ் ஜே. டீ. போடா (J. D. BODA) நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கின்போது இந்த நிறுவனத்திற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதன் பின்னர் இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டதாகவும், மேற்படி நிறுவனம் இலங்கையில் மீள் காப்புறுதி தரகு தாரராக செயற்படுவது அல்லது அதற்கென முன்னிற்பது தடை என அந்த இடைக்காலத் தடை உத்தரவில் கூறப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.

எனவே, முன்வைக்கப்படுகின்ற திட்டங்கள் யாவும் ஏதோ வகையில் அதன் பயனாளிகள் எனக் குறிப்பிடப்படுவோருக்கு எவ்விதமான பயனையும் வழங்காமலேயே இருந்து வருவதையும், அவை ஒரு குறிப்பிட்ட சாராருக்கு பல்வேறு முறைகேடுகளுக்கு வழியவே வாய்ப்புகளை வழங்கி  வருவதையமே காணக் கூடியதாக இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2000ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழான கட்டளைகள் – மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான மூன்று அறிவித்தல்கள் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts: