யார் துரோகிகள் என்பதை தமிழ் மக்கள் இன்று புரிந்துகொண்டுள்ளார்கள் – நல்லூரில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, February 10th, 2019

எமது மக்களை தீரா துயரங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கியவர்கள் துரோகிகளா ? அல்லது அத்தகைய துன்பங்களிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என போராடிய நாம் துரோகிகளா? யார் துரோகிகள் என்பதை வரலாறு நிரூபித்துவருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொக்குவில் கிழக்கு நேதாஜி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பின்போது மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்றிந்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் –

நாம் மக்களின் எதிர்கால நலன்களை முன்னிறுத்தி அவர்களது அரசியல் மற்றும் அபிவிருத்தி சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்ற நோக்குடனேயே எமது அரசியல் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.

அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள் அவலங்களையும் துயரங்களையும் சந்தித்த போதெல்லாம் அவர்களது நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் மத்திய அரசுடன் போராடி வடபகுதி மக்களிடமிருந்து பறிக்கப்படவிருந்த காணி அபகரிப்புகள் , அரசியல் கைதிகள் விடுதலை, அரசியல் பிரதிநிதித்துவ குறைப்பு போன்ற பல உரிமைகளையும் அவர்களுக்கான தேவைப்பாடுகளையும், அபிவிருத்திகளையும் பெற்றுக்கொடுத்து இன்று வடக்கில் தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தவர்கள் நாம்.

ஆனால் தமது அரசியல் சுயநலன்களுக்காக தமிழ் மக்களை பணயம் வைத்து அவர்களது துன்ப துயரங்களை வைத்து அரசியல் நகர்வுகளை செய்து எமது மக்களை நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு கொண்டுவந்தவர்கள்  இன்று தம்மை உத்தமர்கள் என காட்டிக் கொண்டு மக்களிடம் தேர்தல் அரசியல் செய்து வருகின்றனர்.

நாம் ஒருபோதும் தேர்தல் அரசியல் செய்தது கிடையாது. இனியும் அவ்வாறான ஒரு அரசியலை செய்யவும் போவது கிடையாது. ஆனால் எமது மக்கள் தாம் இன்றுவரை அனுபவிக்கும் துன்ப துயரங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்ற தெளிவு கொண்டு வருங்காலத்திலாவது எமது கரங்களுக்கு தமது அரசியல் அதிகார பலத்தை தருவார்களேயானால் நாம் மக்கள் படுகின்ற அவலங்களுக்கு நிரந்தர தீர்வை மட்டுமல்லாது எமது இனத்தின் அரசியல் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க தயாராக இருக்கின்றோம்.

எமது அரசியல் நகர்வுகளே ஜதார்த்தமானது என மக்கள் உணர்ந்து எமது கட்சியின் பின்னால் அணிதிரள்வதை தடுக்கும் நோக்கிலேயே எமது கட்சி மீதும் என் மீதும் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட அவதூறுகள் பூசப்பட்டு வந்தன. ஆனாலும் அவை ஒவ்வொன்றும் இன்று யாரால் செய்யப்பட்டது என்பதை நீதிமன்றம் வெளிப்படுத்தி வருவதனூடாக நாம் நேர்மையானவர்கள் என்பதை வரலாறு நிரூபித்து வருகின்றது.

அந்தவகையில் தமிழ் மக்களின் இன்றைய அவல வாழ்வுக்கு வழிவகை செய்து அவர்களை நிர்க்கதி நிலைக்கு உள்ளாக்கியவர்கள் மீண்டும் அதே வேலைத்திட்டத்தையே முன்னெடுத்து வருகின்றனர்.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கொண்டு செலுத்துவதற்கு பக்கபலமாக இருந்துகொண்டு அந்த அரசுக்கு மிண்டுகொடுத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவர்களது மூன்றரை வருட ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கான தேவைப்பாடுகள் எதை பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள்?

தம்மை நல்லவர்களாக காட்டிக்கொண்டு மக்கள் நலன்களை செய்பவர்களை துரோகிகளாக்கி தமிழ் மக்களது வாக்குகளை அபகரித்து தமது சுயநலன்களை தக்கவைத்துக் கொண்டதை தவிர  அவர்களால் எதை செய்ய முடிந்தது?

ஆனால் நாம் அவ்வாறு மக்களை ஏமாற்றியது கிடையாது. எமது கட்சிக்கு உறுதிமிக்க ஒரு கொள்கை உண்டு. அந்த நேரிய கொள்கையிலிருந்து நாம் மாறியதும் கிடையாது இனியும் மாறப்போவதும் கிடையாது. எமது மக்கள் நிரந்தரமான ஒளிமயமான வாழ்க்கயை வாழ நாம் என்றும் அவர்களுக்காக உழைக்கத் தாயாராக இருக்கின்றோம். அதற்கான அரசியல் பலத்தை தமிழ் மக்கள் எமக்கு வழங்குவார்களேயானால் வெகு விரைவில் இந்த நிலையை உருவாக்கிக் காட்ட எம்மால் முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன், மற்றும் கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் இழப்பீட்டுக் கொடுப்பனவுக...
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில்...
கிளிநொச்சி மக்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – காசோலைகளும் வழங்கிவைப்பு!