சிறந்த மாகாண சபை விரைவில் வடக்கில் உருவாகும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

எமக்கான அரசியல் உரிமைகள் தொடர்பிலான தீர்வுகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாக கூறுகின்றார்கள். இந்த அரசின் முக்கிய அமைச்சர்கள், அரசியல் தீர்வு தொடர்பான விடயம் இலகுவானதல்ல என்று கூறுகிறார்கள். எனவே அரசியல் தீர்விற்கான புதிய ஏற்பாடுகள் இந்த நாட்டில் சாத்தியமில்லாத நிலையில், ஓர் ஆரம்பக் கட்டமாக மாகாண சபை முறைமையை முழுமையாக ஆரம்பிப்பதில் இருந்து தொடங்கி, படிப்படியாக மேலதிக அதிகாரங்கள் பெற்று, எமக்கான அரசியல் உரிமைகளை நாமே பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்த முடியும்.
எனவே, அத்தகையதொரு மாகாண சபையினை வடக்கு மாகாணத்தில் உருவாக்க வேண்டும் என்ற எமது கனவுகள் நனவாக்கப்படுகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்றே நம்புகின்றோம். இந்த நம்பிக்கையினை எமது மக்கள் பலப்படுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில்தான் மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்தும் இருக்கின்றோம்.
தற்போதைய நிலையில் மூன்று மாகாண சபைகள் கலைக்கப்பட்ட நிலையிலும், இன்னும் சில மாதங்களில் மேலும் மூன்று மாகாண சபைகள் கலைக்கப்பட வேண்டிய நிலையிலும் உள்ளன. அந்தவகையில், இந்த ஆறு மாகாணங்களுக்கும் சேர்த்து ஒரே தடவையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுவும் காலம் தாழ்த்தப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
மாகாண சபைத் தேர்தலை நடத்;த வேண்டும் என்கின்றபோது, எந்த முறையில் நடத்துவது? என்ற பிரச்சினையே இன்று இழுபறி நிலையில் இருக்கின்றது. இந்த இழுபறி நிலையே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமைக்கும் இழுபறி நிலையாக இருக்கின்றது.
எங்களைப் பொறுத்தவரையில் எந்த முறையில் நடத்தினாலும் நாம் அதற்கு முகங் கொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம். ஆனால், புதிய முறையில் நடத்துவதற்கான தொகுதிகள் எல்லை நிர்ணயமானது சிறுபான்மைக் கட்சிகளுக்கோ – சிறு கட்சிகளுக்கோ பாதகமாக அமையுமெனில், அது தொடர்பில் ஆராயப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
இந்தத் திருத்தங்களை மேற்கொண்டு, அதற்குரிய அணுகுமுறைகளுக்குச் சென்று, இந்தப் புதிய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது தாமதமாகுமானால், பழைய முறைமைத் திருத்தஞ் செய்து மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த முன்வர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகள் நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|