சித்திரை புத்தாண்டின் வரவில் தேசமெங்கும் புது மகிழ்வு பூக்கட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, April 13th, 2021

பிறந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டின் வரவில் சகல மக்களின்மனங்கள் தோறும், வரலாற்று வாழ்விடங்கள் தோறும் புது மகிழ்வு பூக்கட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா விடுத்துள்ள சித்திரைப்புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நான் கூறும் எமது மக்களின் புது மகிழ்வென்பது தத்தமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் சகல மக்களும் சரிநிகர் சமன் என்ற சமத்துவ உரிமைகளோடு தலை நிமிர்வுடன் வாழ்வதேயாகும்.

அரசியலுரிமை, அபிவிருத்தி, அன்றாட வாழ்வியல் உரிமை என எமது மக்கள் விரும்பும் எழிலார்ந்த வாழ்வை உருவாக்க சகல அரசியல் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புகளும் யதார்த்த பூர்வமான செயல் முறைக்கு முன்வர வேண்டும்.

அரசியலுரிமை என ஒரு புறமும்,. அபிவிருத்தி என இன்னொரு புறமும் மட்டற்ற வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வழங்குவதால் எமது மக்கள் தொடர்ந்தும் திக்கற்று நிற்கும் துயர் நிலையே நீடித்து வருகிறது.

ஆகவே, எமதிரு கண்களாக விளங்கும் அரசியலுமையும், அபிவிருத்தியும் இணைந்த எமது மக்களின் இலட்சியக்கனவுகள் ஈடேற வேண்டும். எமது மக்களின் சகல இழப்புகளுக்குமான பரிகாரம் தேடும் துயர் துடைப்புகள் துரிதமாக நிகழ வேண்டும்.

வறுமையற்ற வாழ்வு நோக்கி நிமிர்ந்தெழுந்து சகல மக்களும் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திடும் சூழல் நிலவ வேண்டும்.சமகால சூழலில் சரியான திசைவழி நோக்கி பயணிப்பதன் உடாக  எமது மக்கள் எண்ணிய எதிர்கால இலட்சியங்களை எட்டிவிட முடியும்.

இந்த ஆழ்மன நம்பிக்கையோடு சித்திரை புத்தாண்டை கொண்டாடி மகிழும் சகல மக்களுக்கும் எனது அறிவார்ந்த வழிகாட்டலுடன் வாழ்த்துக்களையும் கூறுகின்றேன் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, தேசிய நல்லிணக்க சிந்தனை செயற்பாடுகளை சகல தரப்பு மக்களும் பலப்படுத்துவதே ஒளி வீசும் உயரிய வாழ்விற்கு உரமிடும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சைவத்திற்கும் தமிழுக்கும் வாழ்நாள் முழுவதும் பெரும் தொண்டாற்றிய பெருமகனார் சிற்சபேசக் குருக்கள் அனுத...
ஆட்சி மாற்றங்களை உருவாக்குவதில் இருக்கின்ற அக்கறை தமிழ் மக்களின் அரசியலுரிமை விடயத்திலும் இருக்க வேண...
நிந்தவூர் பிரதேசத்திற்கு அச்சறுத்தலை ஏற்படுத்தும் கடலரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை - அமைச்சர் டக...