சவால்களை வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் – புத்தாண்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Monday, January 3rd, 2022

கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றதைப் போன்று எதிர்காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு சவால்களில் வெற்றியடைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை புதிய ஆண்டில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“இந்த வருடத்தில் நாம் எல்லோரும் இணைந்து கடந்த வருடத்தைப் போலவே, எமது அமைச்சின் பொறுப்புக்களையும் – கடமைகளையும் விரைந்து செயற்படுத்த வேண்டும்.

இதன்மூலம், எம்மத்தியில் காணப்படுகின்ற சவால்களை வெற்றிகொள்வது மாத்திரமன்றி, எமது பயணத்தில் எதிர்கொள்ளுகின்ற சவால்களையும் வெற்றி கொள்ள வேண்டும்.

எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எமக்கு சிறந்த இராஜாங்க அமைச்சரும், அமைச்சின் செயலாளரும், இராஜாங்க அமைச்சின் செயலாளரும், பணிப்பாளர் நாயகமும் ஏனைய அதிகாரிகளும் கிடைத்துள்ளனர்.

எனவே எமது பொறுப்புக்களை முன்னெடுப்பதில் எவ்வித சிரமும் இருக்காது என நினைக்கிறேன்.

எமது ஜனாதிபதி அவர்களது சபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக, ஜனாதிபதி அவர்களின் தலைமையில் பிரதமர் அவர்களின் வழிகாட்டலில், நிதி அமைச்சர் அவர்களின் பக்கத் துணையுடன் எமது  பொறுப்புக்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

அந்தவகையில் இதுவரை காலமும் இந்த அமைச்சை முன்னெடுப்பதற்கு நீங்கள் அனைவரும் வழங்கி வரும் ஒத்துழைப்பினை நான் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.

அதேபோல்,  தங்கு தடைகளற்ற உங்களது மக்கள் நலன் சார்ந்த சுதந்திரமான பணிகளுக்கு எனது ஒத்துழைப்புக்கள் தொடர்ந்து கிடைக்கும்” என்று தெரிவித்தார்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க,  இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜெயந்த சந்திரசோம, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா,  கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோருடன் திணைக்களங்களின் தலைவர்கள், பணிப்பாளர் நாயகங்கள், மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: