வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, July 17th, 2018

இன்று சட்ட ரீதியிலாகப் பிரிக்கப்பட்டிருப்பினும் கூட ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுயாட்சிக்காகவே நாங்கள் கடந்த காலங்களில் பாரிய அர்ப்பணிப்புகளுடன் போராடி வந்திருக்கின்றோம். அந்தப் போராட்டமானது இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபை உருவாக்கம் பெற்றதுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்திருந்த வன்முறைகளுக்கும் எமக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும், சிங்கப்பூர் குடியரசிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய சபை ஒத்திவைப்பின் போதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இன்றும்கூட இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களையே நாங்கள் விரும்புகின்றோம். முஸ்லிம் மக்களதும் பூரணமான விருப்புகளை இதற்காக நாங்கள் வென்றெடுக்க வேண்டியிருக்கின்றது. அதற்காக நிறையவே உழைக்க வேண்டியிருக்கின்றது.

இருப்பினும், இன்று நிர்வாக ரீதியில் பிரிந்திருந்தாலும் வடக்கும் கிழக்கும் எமது பூர்வீகமான வாழ்விடங்கள் என்ற பற்றுடனேயே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக, வடக்கு, கிழக்கு மாகாணங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்க்காதீர்கள், நாட்டின் ஏனைய பகுதிகளை தாரை வார்த்துக் கொடுங்கள் என நான் கூறுவதாக எவரும் அர்த்தம் கொள்ளக்கூடாது.

திருகோணமலையாகட்டும், அம்பாந்தோட்டையாகட்டும், மொனராலையாகட்டும், காலியாகட்டும், கொழும்பாகட்டும் – இந்த நாட்டில் சுய உற்பத்தித் துறைகளை மேம்படுத்தாமலும், புதிய ஏற்றுமதிக்கான புதிய தொழிற்துறைகளை உருவாக்காமலும், வெறும் இறக்குமதிகளை மாத்திரம் நினைவில் வைத்துக் கொண்டு, இந்த நாட்டின் சொத்துக்களை விற்பது, வெளிநாட்டுக் கடன் பெறுவது என்கின்ற கனவுகளில் இருந்து கொண்டு மாத்திரம் செயற்படாதீர்கள் என்றே வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts: