கோரிக்கைகள் நியாயமானதாகவும் மனித நேயம் மிக்கதாகவும் இருப்பதே எனது வெற்றியின் இரகசியம் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, June 22nd, 2018

மக்கள் நலன் சார்ந்த எனது கோரிக்கைகள் நியாயமானதாகவும் மனித நேயம் மிக்கதாகவும்  இருப்பதுடன் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்துவதாகவும் அமைந்திருப்பதே எனது வெற்றியின் இரகசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் நடைபெற்ற அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கொடிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்ததாலும் மக்கள் சுதந்திரமாக போக்குவரத்துச் செய்யமுடியாமல் அடைபட்டிருந்த அக்கால கட்டத்தில் மருத்துவ மனைகள் கூட சீராக இயங்க முடியாத நிலைமை இருந்தது. போதுமான வைத்தியர்கள் கடமையில் இருக்காமையும் தேவையான மருந்துகள் வைத்தியசாலைகளில் இல்லாமலும் கொழும்பிலிருந்து மருந்துப் பொருட்களை பாதுகாப்பாக வடக்கு நோக்கி அனுப்பிவைக்க முடியாமலும் ஒரு யுகம் இந்த நாட்டில் இருந்ததை யாரும் மறக்க முடியாது.

காயப்பட்டவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளைப் பெற முடியவில்லை. பெண்கள் சிறுவர்கள் வயோதிபர்கள் தேவையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வழி இல்லாமலும் தவித்தார்கள். அவ்வாறான ஒரு சூழலில் நானும் எனது தோழர்களும் உயிரைப் பணயம் வைத்து அவலத்தில் சிக்கியிருந்த மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் கொண்டு சேர்ப்பதில் ஈடுபட்டிருந்தோம். அதுபோல் கடற்படையின் உதவியைப் பெற்றுக்கொண்டு மேலதிக சிகிச்சை தேவையாக இருந்த நோயாளிகளை கொழும்புக்கு பாதுகாப்பாக அழைத்து வந்து அவர்களுக்கு உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுப்பதில் முடியுமான பங்களிப்பைச் செய்திருக்கின்றோம்.

அவ்வாறான ஆபத்தான கால கட்டத்தில் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு மனிதாபிமான உதவிகளைச் செய்து தந்தவர்களில் காலஞ்சென்ற ரேணுகா ஹேரத் அவர்கள் முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கின்றார்.

பொதுவாகவே நான் எமது மக்கள் சார்ந்து முன்வைக்கும் கோரிக்கைகளை நீண்டகாலமாக  யுத்த அழிவுகளுக்கும் ஆயுத அடக்குமுறைக்கும் முகம் கொடுத்த மக்களின் கோரிக்கையாக ஏற்றுக்கொண்டு அதை வழமையான நடைமுறைகளுக்கு அமையவும் விஷேட ஏற்பாடுகளுக்கும் அமையவுமே இந்த நாட்டின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் சக அமைச்சர்களும் நிறைவேற்றித் தந்திருக்கின்றார்கள்.

இன்றும் அவ்வாறான ஒரு புரிதலே இருந்து வருகின்றது. மக்கள் நலன் சார்ந்த எனது கோரிக்கைகள், நியாயமானதாகவும் மனித நேயம் மிக்கதாகவுமே  இருப்பதுடன் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்துவதாகவுமே அமைந்திருப்பதே எனது வெற்றியின் இரகசியமாகும்.

அந்தவகையில் இந்த நாட்டின் அனைத்து மக்களையும் நேசிக்கின்றவராகவும் தற்துணிவோடு சரியான தீர்மானங்களை எடுக்கும் முற்போக்குச் சிந்தனையாளராகவும் இருந்து மறைந்த கௌரவ ரேணுகா ஹேரத் அவர்களின் ஆத்மா சாந்திபெறட்டும் என்று கூறி அவரை நினைவு கூருகின்றேன்.

Related posts:

உங்கள் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை விரைவாக பெற்றுத்தர முயற்சிக்கின்றேன் - தீவகபகுதி  தேசிய எழுச்சி மா...
வடக்கு கிழக்கில் சுதேச மருத்துவத்துறையை மேம்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!
உள்ளூர் உற்பத்திகளை பாதிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்க கூடாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல...