கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் உரிமைகள் பெறுவதற்கான எமது மக்களின் துணிவின் ஆரம்பம் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, February 17th, 2017
கடந்த பல தேர்தல்களின்போது எமது மக்களுக்கு நடைமுறை சாத்தியப்பாடற்ற பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, எமது மக்களது வாக்குகளை அபகரித்து வந்துள்ளவர்கள், தற்போதைய அரசுடன் இணக்க அரசியல் மேற்கொண்டு, தமக்கான பதவிகள் மற்றும் சுகபோகங்களைப் பெற்று, உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற நிலையில் – இத் தரப்பினரால் ஏமாற்றப்பட்ட மக்கள் தங்களது உரிமைகளை தாங்கள்தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற இறுதி கட்டத்திற்கு வந்து, வீதியில் இறங்கிப் போராடி, அந்தப் போராட்டத்தின் பயனாகவே இன்று அம் மக்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எனில் அது கேப்பாப்புலவு மக்களின் வெற்றியே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், படையினர் வசமுள்ள எமது மக்களின் காணி, நிலங்களை மீட்பது உட்பட எமது மக்கள் தற்போதைய நிலையில் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள பல பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை எல்லாம் முதன்மைப்படுத்தி, எங்களுக்கு வாக்களியுங்கள், நாங்கள் இவை அனைத்தையும் பெற்றுத் தருவோம் என தங்களது தேர்;தல் கால வாக்குறுதிகளில் தொடர்ந்து கூறி வந்தவர்கள், இந்த ஆட்சியை தாங்கள்தான் கொண்டு வந்தோம் என மார்தட்டிக் கொண்டிருப்பவர்கள் எமது மக்களின் துரும்பளவு பிரச்சினை ஒன்றைக்கூட தீர்க்காத நிலையில், ஏமாற்றமும், அதனால் வெறுப்பும், விரக்தியும் அடைந்துள்ள எமது மக்கள் தங்களது பிரச்சினைகளை தாங்கள் போராடியே பெற வேண்டும் என்ற  நிலைக்கு இன்று வந்துள்ளனர்.
கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான ஆட்சியதிகாரத்தில் இருந்த நாங்கள், எமது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் எமது மக்களது பிரச்சினைகளில் பலவற்றை எவ்விதமான ஆரவாரங்கள் – ஆர்ப்பாட்டங்களின்றி தீர்த்து வந்ததனால் மக்களுக்கு இவ்வாறாக வீதிகளில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை. அக் காலகட்டத்தில் நாம், படையினர் தென் பகுதி அமைச்சர்களுக்கே தர மறுத்த சுமார் 700 ஏக்கர் கொண்ட அறிவியல் நகரை மீட்டு அதனை யாழ் பல்கலைக்கழகத்திடமும், வடக்கில் சுமார் 28 ஆயிரம் காணி, நிலங்களை மீட்டு, எமது மக்களிடமும் ஒப்படைத்திருந்தோம்.  எமக்கு மக்கள் எமக்கு மேலும் அரசியல் அதிகாரங்களைத் தொடர்ந்து வழங்கியிருந்தால், இன்று எமது மக்களின் இவ்வாறான பல பிரச்சினைகள் சுமுகமான முறையில் தீர்க்கப்பட்டிருக்கும்.
ஜனநாயக ரீதியிலேயே எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை ஏற்று, ஆயுதப் போராட்டக் களத்தைவிட்டு வந்தவர்களில் நாங்களும் குறிப்பிடத்தக்கவர்கள். அந்த வகையில் கேப்பாப்புலவு மக்களின் ஜனநாயக ரீதியிலான தொடர் போராட்டமானது இன்று அந்த மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து ஒரு நம்பிக்கையை கொண்டு வந்திருக்கிறது. இந்த நம்பிக்கையானது செயல் வடிவம் பெற வேண்டும். பெறும் என நான் நம்புகின்றேன். இந்த நம்பிக்கையைப் பெற்று, தங்களது உரிமைகளை வென்றெடுக்க அம் மக்கள் தொடர் செயற்பாடுகளை இந்த வகையில் முன்னெடுக்க வேண்டும்.
அந்த வகையில் இந்த மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களைப் பெறுகின்ற தருவாயில் அதற்கான காரணகர்த்தாக்கள் தாங்களே எனக் கூறுவதற்கு இந்த அரசியல்வாதிகளுக்கு தார்மீக உரிமை கிடையாது. இந்த மக்களது பிரச்சினைகள் மட்டுமல்ல, இந்த மக்களும் அந்த அரசியல்வாதிகளால் கைவிடப்பட்டவர்களே. இதனை எமது மக்கள் இன்று நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் இப் போராட்டமானது, எமது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான எமது மக்களின் துணிவின் ஆரம்பமாகும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
11-1 - Copy

Related posts:

நீதிமன்றங்களில் போதியளவு தமிழ் மொழி மூலமான நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்  ...
கால நிலை தொடர்பில் விழிப்புடன் இருங்கள் - கடற்றொழிலாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!
இன மத ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தீர்மானங்களை அனுமதிக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ்!