கிராஞ்சி கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம்!
Saturday, May 8th, 2021
கடற்றொழில் செயற்பாடுகளை பாதிக்கும் வகையில் கடற்றொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் முரண்பாடுகள் பக்கச்சார்பற்ற முறையில நீதியாக தீர்த்து வைக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கிளிநொச்சி, கிராஞ்சி கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் இன்று (08.05.2021) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பான குறித்த கலந்துரையாடலில், கிராஞ்சிக் கிராமத்தில் அமைந்துள்ள இறங்குதுறைகளுக்கு மின்சார இணைப்புக்களை ஏற்படுத்தல், இறங்கு துறைகளை ஆழப்படுத்துதல் மற்றும் பிரதான வீதியில் இருந்து கிராஞ்சி கிராமத்திற்கான வீதியை புனரமைத்தல் போன்ற கோரிக்கைகள் பிரதேச மக்களினால் கடற்றொழில் அமைச்சரிடம் முனவைக்கப்பட்டன.
குறித்த விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மேலும், கிராஞ்சி கடல் பிரதேசத்தில் சிறுதொழிலில் ஈடுபடுகின்ற பிரதேசத்தில் சிலரினால் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்ட விவகாரத்தினை நியாயமான முறையில் தீர்த்து வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதிதாக கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்தவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


