தமிழ் பேசும் மக்களின் அரசியல் சமூக பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் வழிதிறந்து விடவேண்டும் – புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016

இம்முறை வரவு – செலவுத் திட்டத்திலும் மக்கள் மீதான நேரடி மற்றும் மறைமுக வரிகள் அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது. இது எமது மக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகரிப்பதாகவே உள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படாத சில கட்டண உயர்வுகளையும் நாட்டில் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக, நீருக்கான கட்டண உயர்வை இங்கு சுட்டிக்காட்ட முடியும். அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் இவ்வாறான வரி அதிகரிப்புக்களை மேற்கொள்வதானது எமது மக்களுக்கு எந்த வகையிலும் பயன் தரப் போவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்

நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் அங்குள்ள பெரும்பாலான மக்களது நிலை மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த நிலையே அங்கு உருவாகியுள்ளது என்பதையும் இங்கு அவதானத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் இருக்கும் குறைகளை நாம் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டுகிறோம்.

அதே வேளை இதில் உள்ள நிறைவான விடயங்களையும் நாம் இதய சுத்தியோடு வரவேற்கின்றோம்.

தமிழ், முஸ்லிம் மலையக மக்கள் மட்டுமன்றி எமது சகோதர சிங்கள மக்களும் ஒவ்வொரு வரவு செலவு திட்டங்களாலும் அதி உச்ச பயன்பாட்டை அடைய வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். இதேவேளை  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களுக்கு தேவைகளின் நிமிர்தம் அதி கூடிய நிதியினை ஒதுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

ஆனாலும் கடந்த காலங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்ற வகையில் குறிப்பாக, வட மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் பகுதி திறை சேரிக்கு திரும்பி வந்துள்ளதாக அறிய முடிகின்றது. கடந்த ஆட்சியின் போது  மத்திய அரசே வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு தடையாக உள்ளது என்று குற்றம் கூறினார்கள்.

ஆனாலும், மலர்ந்திருக்கும் புதிய ஆட்சியிலும் தொடர்ந்தும் வட மாகாண சபைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி அந்த மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்த படாமலேயே திறை சேரிக்கு திரும்பி வந்து கொண்டிருகிறது.இதன் உண்மை யாதென கண்டறியப்பட வேண்டும். இது யார் தவறு?.. வட மாகாண சபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடுகளா? அன்றி இன்று மலர்ந்திருக்கும் மத்திய அரசின் தடைகளா?.. இது குறித்து இந்த சபையில் ஒரு விவாதம் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.எது உண்மை? எது பொய்?.. என்பது எமக்கு தெரியும். ஆனாலும் எமது மக்களுக்கும் அந்த உண்மை தெரிந்தாக வேண்டும்.தமிழ் பேசும் மக்களின் அரசியல் சமூக பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் வழிதிறந்து விடவேண்டும் என்பதே எமது விருப்பம்.

ஆனாலும் அது நிறைவேறக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பதே சுயலாப தமிழ் அரசியல் கட்சிகளின் நோக்காக இருந்து வருகின்றது. தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை தீராப்பிரச்சினையாக்கி அதில் தங்களது பதவி நாற்கலி சுகங்களை அனுபவிப்பதே போலித்தமிழ் தேசிய வாதிகளின் விருப்பங்களாகும்.

அன்று அடுத்த பொங்கலுக்குத் தமிழீழம் என்றார்கள்;. அடுத்த மே தினம் சுதந்திர தமிழீழத்தில் என்றார்கள். இன்று 2016 நடுப்பகுதியில் தீர்வு கிடைக்கும் என்றார்கள். பின்பு 2016 கடைசியில் என்றார்கள். பின்பு அது கணிப்பு என்றார்கள். தற்போது 2017 தீபாவளிக்கு என்கிறார்கள். அதாவது இன்று கடன் இல்லை என்று கடைகளுக்கு முன்னால் அறிவிப்புப் பலகை வைப்பதுபோல. இந்தப் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து அதனது 100 நாட்கள் வேலைத்திட்டத்தினுள் தீர்ப்பதற்கான முயற்சிகளை, போலித் தமிழ்த் தேசியம் பேசி மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை அபகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்திருக்க வேண்டும்.

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் முதல் ஆறுமாதம் அல்லது குறைந்தது ஒரு வருடத்திற்குள் பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். அல்லது அது ஆறிய கஞ்சி பழம் கஞ்சி ஆகிவிடும். அரசுக்குப் புதிய பிரச்சினைகள் வந்து அரசியல் இலக்குத் திசை திருப்பப்பட்டு விடும் என்றார்.

023

Related posts:


வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களுக்கான தீர்வு என்ன? : டக்ளஸ் தேவானந்தாவின் கேள்விக்கு அமைச...
எமது மாணவர்களுக்குச் சென்றடையக்கூடியதான கல்வி வாய்ப்புக்கள் சிதைக்கப்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ...
கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேம்படுத்துவார் – நாடாளுமன்ற உறுப்பினர்...