‘காலத்தை வென்ற மக்கள் நேய’ வரவு – செலவுத் திட்டம் கடற்றொழில் துறைக்கும் ஒரு பலமான தைரியத்தை தந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, December 7th, 2021

என்னிடம் சவால்மிக்க பாரிய பொறுப்பொன்று ஒப்படைககப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2019 ஆம் ஆண்டு தனது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு எமது மக்களால் ஒப்படைக்கப்பட்ட அப் பாரிய பொறுப்பின் சவால்களை வென்று கொண்டே, எமது நாட்டின் முன்னேற்றத்திற்கென மிகச் சரியான நோக்குடன், தைரியமாக செயற்பட்டு வருகின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமைத்துவத்தில், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘காலத்தை வென்ற மக்கள் நேய’ வரவு – செலவுத் திட்டமானது, அனைத்துத் துறைகளையும் சேர்த்தே கடற்றொழில் துறைக்கெனவும் ஒரு பலமான தைரியத்தை தந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் கழு நிலை விவாதத்தில் இன்றையதினம் கடற்றொழில் அமைச்சு அதொடர்பான விவாதம் இடம்பெற்றது. அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் கடற்றொழில் சார்ந்து முன்வைக்கப்பட்டிருந்த 16 இலக்குகளை செயற்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு அமைவாக, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்முதல் செப்ரெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் கடற்கரையை அண்டியதான கடற்பரப்பில் 129,600 மெற்றிக் தொன், ஆழ்கடலில் 115,315 மெற்றிக் தொன் என 244, 915 மெற்றிக் தொன் மற்றும், நன்னீர் வேளாண்மையில் 76,660 மெற்றிக் தொன் என மொத்தம் 321,575 மெற்றிக் தொன் மீனின அறுவடையினை நாம் எட்டியுள்ளோம். ஒரு மாதத்திற்கான தனிநபர் மீனின நுகர்வை 36.7 வீதமாக உயர்த்தி, அனைத்து மீனின ஏற்றுமதியின் மூலம் 43,106.1 மில்லியன் ரூபாவினை தேசிய பொருளாதாரத்தில் உள்ளடக்கியுள்ளோம்.

மீன் வகை மற்றும் மீன் வகை சார்ந்த உற்பத்திகளின் இறக்குமதியினை நாம் கட்டுப்படுத்தியுள்ள போதிலும், தேசிய அளவில் கிடைக்காத, நுகர்வுத் தேவைகளுக்கு அவசியமான சில மீன்வகை மற்றும்; மீன் வகை சார்ந்த உற்பத்திகளின் இறக்குமதிக்கென இக் காலப் பகுதிக்குள் 78,808.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எமது தேசிய உற்பத்தியின் மேம்பாடு கருதி, இறக்குமதி தொடர்பில் நாம் மிகவும் அவதானமாக செயற்பட்டு வருவதுடன், தேசிய அளவில் கிடைக்காத மீன் வகை மற்றும் மீனின உற்பத்திகளை மாத்திரம் தேவை கருதி இறக்குமதி செய்வது மற்றும் தேசிய ரீதியில் மீனின அறுவடையில் பற்றாக்குறைகள் நிலவுகின்ற காலகட்டங்களில் குறிப்பாக மார்ச்  முதற்கொண்டு ஜூன் மாதக் காலப்பகுதியில், அக்காலப் பகுதியிலும், ஏனைய காலப் பகுதிகளிலும் நுகர்வோருக்கும், உற்பத்தியாளர்களுக்கும் இடையில் நியாயமான விலையினைப் பேணும் நோக்கில் தேவையான மீனினங்கள் மற்றும் மீன் சார்ந்த உற்பத்திகளை வரையறைக்கு உட்பட்டு இறக்குமதி செய்வது குறித்தும், உரிய தரப்புகளுடன் கலந்துரையாடி, நாம் மீளாய்வுகளை மேற்கொண்டு, வருகின்றோம் என்பதையும் இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

இதே காலப்பகுதியில் அலங்கார மீன்கள் ஏற்றுமதியின் மூலம் 2,754.1 மில்லியன் ரூபா அந்நியச் செலாவணியை நாம் பெற்றுள்ளோம். செவனபிட்டிய பகுதியில் அலங்கார மீன்கள் கருத்தரிப்பு நிலையமொன்றை அமைத்துள்ளதுடன்,  பங்கதெனிய பகுதியிலும் இத்தகையதொரு நிலையத்தை நிர்மாணித்து வருகின்றோம்.

மேலும், அலங்கார கடல் தாவரங்கள் செய்கையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதிக்குள் 26,910 தாவரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதியின் மூலம் 5.40 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளன. அவ்வாறே, 1,069.80 மெற்றிக் தொன் உவர் நீர் இறால் உற்பத்தியில் 1,874.60 மில்லியன் ரூபாவும், 57.38 மெற்றிக் தொன் நன்னீர் இறால் உற்பத்தியில் 156.94 மில்லியன் ரூபாவும் பெறப்பட்டுள்ளன.

கடற்றொழில் சார்ந்த மக்களை பலப்படுத்துகின்ற வேலைத் திட்டத்தின் கீழ், 05 வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், புதிதாக கடற்றொழிலை ஆரம்பித்துள்ள கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நவீன படகுகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்களை வழங்குகின்ற வேலைத் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட சீநோர் நிறுவனத்துடன் இணைந்து 04 மாதிரி படகுகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அவை தொடர்பிலான ஏனைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறிய பரிமாண கடற்றொழில் படகுகளின் அறுவடையின் பின்னரான பாதிப்புகளை குறைக்கும் வகையில், மீன் பெட்டிகள் வழங்கும் நடவடிக்கையும், அனைத்து கடற்றொழில் பகுதிகளும் உள்ளடங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடல் சார் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்தி இளைஞர், யுவதிகளுக்கென கடற்றொழில் தொடர்பிலான தொழில்நுட்ப மற்றும் பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது 04 பயிற்சித் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதுடன், இதற்கென மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 75 பேர் இதுவரையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வட இலங்கை சமாதான நீதிவான் சங்கத்தினர் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
புங்குடுதீவு தெற்கு மண்காடு பகுதி மீன்பிடி இறங்குதுறை விரைவில் புனரமைக்கபடும் - அமைச்சர் டக்ளஸ் உறுத...
பம்பலப்பிட்டியில் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தி...

நாம் மத்திய அரசுடன் இணைந்து அரசியல் அதிகாரத்தில் இருந்தது மக்களது நலன் சார்ந்த தேவைகளுக்காகவே – டக்ள...
மட்டக்களப்பு கம்பஸ் மீதான குற்றச்சாட்டுக்கள்: யாருடைய தவறு, யாருக்கு பொறுப்பு? - டக்ளஸ் எம்.பி. கேள்...
வசாவிளான் குட்டியப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைய விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...