காணி விடுவிப்பில் அரசின் செயற்பாடு மந்தமானது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, July 18th, 2018

கடந்த காலங்களில் எமது மக்களின் சொந்த காணி, நிலங்களில் சுமார் 18 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணி, நிலங்களை, கட்டிடங்களை விடுவிப்பதற்கு எங்களால் இயலுமாக இருந்;தது. அந்த செயற்பாட்டினை இந்த அரசாங்கமும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற போதிலும், அண்மைக்காலமாக அதிலொரு மந்த கதி தொடர்வதையே காணக்கூடியதாக இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி திருத்தச் சட்டமூலம், காணி பாரதீனப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

யுத்தம் முடிவுற்றதன் பின்னர் 2010 ஆம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதி முதற்கொண்டு, 2014ஆம் ஆண்டு வரையில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணி, நிலங்களை வலிகாமம் வடக்கில் விடுவித்திருந்தோம். இந்த அரசு ஆட்சிபீடமேறியதன் பின்னர் வலிகாமம் வடக்கில் இதுவரையில் 3,789 ஏக்கர் காணி, நிலங்களே விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அந்த வகையில் பார்க்கின்றபோது, வலிகாமம் வடக்கில் இன்னமும் எமது மக்களின் காணி, நிலங்களில் சுமார் 3,656 ஏக்கர் காணி, நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிய வருகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தற்போது படையினர் வசமுள்ள எமது மக்களின் சொந்த காணி, நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்ற போதிலும், அவை எமது மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்காத வகையில் சுழற்சி முறையிலான கையகப் படு;த்தல்கள் இடம்பெற்று வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அதாவது, படையினர் வசமிடமிருந்து விடுவிக்கப்படுகின்ற எமது மக்களின் காணி, நிலங்களை வனத்துறையினர் மீளப் பிடித்துக் கொள்வதும், பின்னர் அவர்களிடமிருந்து  விடுவித்துக் கொண்டால் அந்த  காணி, நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பிடித்து, வேலி அடைப்பதும், அவர்களிடம் இருந்தும் விடுவித்துக் கொண்டால், பின்னர், தொல் பொருள் திணைக்களத்தினர் அதனைப் பிடித்து அடைத்து வைப்பதும் என சுழற்சி முறையில் இந்த நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளை நீங்கள் அனுமதித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றே தெரிய வருகின்றது. அப்படி இல்லை! நீங்கள் இவற்றை எல்லாம் அனுமதிக்கவில்லை என்றால், மேற்படி அரச திணைக்களங்கள் அரசாங்கத்தைப் புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக செயற்படுகின்றனவா? என்ற கேள்வியே எழுகின்றது.

மேலும், காணி வங்கி ஒன்றைக் கொண்டு வரப் போவதாகக் கூறுகிறீர்கள். அதுவும் கொண்டு வரப்பட்டால் எமது மக்களிடம் இன்று இருக்கின்ற அற்ப, சொற்ப காணி, நிலங்களும் பறிபோய் விடுகின்றதும், மீளக் கிடைக்கப் பெற வேண்டிய காணி, நிலங்கள் கிடைக்கப்பெறாமல் போய் விடுகின்றதுமான அபாய நிலைமை உருவாகலாம் என்றே தோன்றுகின்றது.

ஒரு பக்கத்தில் இப்படி எல்லாம் செயற்படுகின்ற நீங்கள் இன்னமும் தேசிய நல்லிணக்கம் பற்றி பேசிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்ட கூறவிரும்புகின்றேன்.

Related posts:

தேசிய நல்லிணக்கம் என்னும் விதையை  மாணவர்களிடையே விதைக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா...
வடக்கு - கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வேண்டும் - பிரதமரிடம் ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி: இறால் அறுடைக்கான அனுமதிக்கான அனுமதிகளை வழங்கியது ...