காணிகள் விடுவிப்பு – எழுத்தளவில் – பேச்சளவில் மாத்திரம் இருப்பதில் பயனில்லை! எமது மக்கள் குடியேற ஏதுவாக இருக்க வேண்டும்!  டக்ளஸ் தேவானந்தா

Friday, April 22nd, 2016

விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் வடக்கில் படையினர் வசமிருந்த எமது மக்களுக்குச் சொந்தமான  காணி, நிலங்களில் எமது மக்கள் மீளக் குடியமர்வதற்கு ஏதுவாக அவற்றைப் பார்க்கச் செல்லக்கூட இயலாத நிலை காணப்படுவதாக எமது மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே, மேற்படி காணி, நிலங்கள் விடுவிக்கப்பட்டதாக எழுத்துமூலமாக, வாய்ப்பேச்சுக்கள் மூலமாக அறிவிப்பதில் எவ்விதப் பயனுமில்லை. நடைமுறையில் அக் காணி, நிலங்கள் விடுவிக்கப்பட்டு, எமது மக்கள் அப் பகுதிகளுக்குச் சென்றுவரக்கூடிய ஏற்பாடுகள் தேவை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.ப.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், விடுவிக்கப்படுகின்ற எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களை சென்று பார்வையிடுவதற்கும், அவற்றைத் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபடுவதற்கும் உகந்த சூழல்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கானி, நிலங்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிப்புகளை உரியவர்கள் விடுவிக்கும் நிலையில் எமது மக்கள் பல வருடங்களுக்குப் பின்னர் தங்களது காணி, நிலங்களை பார்க்கச் செல்ல மிகுந்த ஆவலுடன் இருப்பது யதார்த்தமாகும். எனவே, அதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்துவிட்டே இவ்வாறான அறிவிப்புக்கள் விடுக்கப்பட வேண்டும் என்பதையும் உரியவர்கள் அவதானத்தில் கொண்டு செயற்பட வேண்டும். விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டால் எமது மக்களுக்கு அங்கு செல்லக்கூடிய சூழல் உறுதிபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த காணி, நிலங்கள் எமது மக்களதே அன்றி, எமது மக்களுக்காக வேறு எவரிடமிருந்தும் பறிக்கப்பட்டவை அல்ல என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த அரசு முன்வர வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: