கள்ளுக்கு வரி அறவீடு என்பது யாரை ஏமாற்றுவதற்காக யார் மேற்கொள்கின்ற ஏற்பாடு? – டக்ளஸ் எம்பி கேள்வி!

Friday, March 23rd, 2018

செறிவு கூடிய மற்றும் சட்டவிரோத மது பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பியருக்கான வரி தளர்ப்பு செய்யப்பட்டது. இப்போது, செறிவு கூடிய மற்றும் சட்டவிரோத மது பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு எனக் கூறப்பட்டு, பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற கள்ளுக்கு வரி அறவிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த இரண்டு ஏற்பாடுகளுக்கிடையிலும் முரண்பாடுகள் இருப்பதை நீங்கள் உணரவில்லையா? இது யாரை ஏமாற்றுவதற்காக, யார் மேற்கொள்கின்ற ஏற்பாடுகள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் மதுவரி தொடர்பிலான விஷேட சட்டமூலங்கள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

பனை மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற கள் தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதன்போது, ‘செறிவு கூடிய மது பாவனை நாட்டில் அதிகரித்துள்ளது’ என்றும்,  ‘நேரடி மற்றும் சட்டவிரோத மது பாவனையைக் கட்டப்படுத்தும் நோக்கிலேயே பனை, தென்னை ஆகியனவை மீதான கள் உற்பத்திக்கு வரி அறவிடவுள்ளோம’; என்றும், கித்துள் மரத்திலிருந்து கள் உற்பத்தி செய்வதற்கு மாத்திரம் சலுகை வழங்கவுள்ளோம்’ என்றும் இலங்கையில் சட்டவிரோத மது பாவனை அதிகரித்துள்ளது’ என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் அவர்கள் சபையில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.

செறிவு கூடிய மற்றும் சட்டவிரோத மது பாவனையை குறைப்பதற்கு என்று கூறியே கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் பியருக்கான வரி தளர்ப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில், செறிவு கூடிய மற்றும் சட்டவிரோத மது பானங்களின் பாவனை அதிகரித்திருப்பதாகவே நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கின்றார். ஆக, பியர் விலை குறைந்தும், செறிவு கூடிய மதுபானங்களின் பாவனை குறையவில்லை என்பதை அவர் ஒப்புக் கொள்கின்றார். இந்த நிலையில், பியர் விலைக் குறைப்பானது, தோல்வியானதொரு ஏற்பாடு என்பது தெரிய வருவதுடன், இதன் மூலமாக பயனடைவோர் யார்? என்ற கேள்வி எழுகின்றது.

செறிவு கூடிய மற்றும் சட்டவிரோத மது பானங்களின் பாவனை அதகரித்துள்ளதெனில், பனைக்கும், தென்னைக்குமான கள் உற்பத்தி வரியினை விதிப்பதன் ஊடாக செறிவு கூடிய மற்றும் சட்டவிரோதமான மது பானங்களின் பாவனையைக் குறகை;க முடியுமா?

இத்தகைய செயற்பாடுகளுக்கும், புகையிலை உற்பத்தியினை தடை செய்யப் போவதாகக் கூறிக் கொண்டு, வெளிநாட்டு சிகரெட் வகைகளுக்கு அனுமதியளிக்கும் செயற்பாடுகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது? எனக் கேட்க விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: