கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தென் பகுதிக்கு நேரடி விஜயம் – குறைபாடுகளை தீர்த்து வைக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை!

Saturday, June 10th, 2023

தென்பகுதி மீன்பிடித் துறைமுகங்களுக்கான  கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்ததுடன்  அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துமாறும்  அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தென் பகுதியில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகங்களான கிரிந்த,  அம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில, கலமெட்டிய, ரெக்காவ, தங்காலை, மாவெல்ல, கந்தர, பேருவளை ஆகிய மீன்பிடித் துறைமுகங்களின் நிலைமைகளை நேரில் ஆராய்ந்தற்காக கடற்றொழில் அமைச்சரினால் நேற்று (09.06.2023) மேற்கொள்ளப்பட்ட குறித்த விஜயத்தின்போது பல்வேறு விடயங்கள் கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக, மீன்பிடித் துறைமுகப் பகுதிகளில் மணல் அகழப்பட வேண்டுமெனவும் மணல் அரிப்பைத் தடுப்பதற்கான கல் அணைகள் அமைப்பது,  மலசலகூட வசதிகள் உட்பட்ட அத்தியாவசிய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் போன்ற கோரிக்கைகள் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.

மேலும், சில துறைமுகங்களில் மணல் குவிந்து காணப்படுவதால், ஆழ்கடல் பலநாள் மீன்பிடிப் படகுகள் கரைக்கு வரமுடியாத நிலையில் அவை தரைதட்டுவதாகவும் இதன் காரணமாக அப்படகுகள் வேறு துறைமுகங்களில் நிறுத்தி வைப்பதாகவும், அதனால் அப்பகுதி மீனவர்களுடன் முரண்பட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் கடற்றொழிலாளர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

கடற்றொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்ற அமைச்சர், கடற்றொழில் அமைச்சினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள  ஆழப்படுத்தும் பணிகளை விரைவு படுத்தி முடிக்குமாறும், சில துறைமுகங்களினுள் நீண்ட காலமாகப் பயன்பாடு இல்லாமல் இருக்கும் பழுதடைந்துள்ள படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விரைவில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கெள்ளப்படும் எனவும்  உறுதியளித்தார்.

இதேவேளை, கிரிந்த மீன்பிடித்துறைமுகத்தில் படகுகளுக்கு எரிபொருள் நிரப்பும் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பணியாளர்கள்  தாமதமாக கடமைக்கு வருவதால் எரிபொருளுக்காக நீண்ட நேரத்தை செலவிடுவதாகவும், இதனால் தொழிலுக்குச் செல்வதில் தாமதப்படுவதாகவும் அமைச்சரிடம் முறையிட்டப்பட்டது. இதுதொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் சம்பந்தப்பட்ட உத்தியோகஸ்தர்களுடன் உரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

இதன்போது சில  நிகழ்வுகளிலும்  கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தங்காலை கடற்றொழில் சங்கத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலவச மண்ணெண்ணெய் வழங்கும் நிகழ்வில்  கலந்துகொண்டு, சம்பிரதாயபூர்வமாக 15 பேருக்கான மண்ணெண்ணெய் அனுமதி கூப்பன்களை வழங்கிவைத்தார்.

மிரிஜ்ஜவில பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர்,  பிரதேச கடற்றொழிலாளர்களினால் இறங்குதுறை அமைக்க வேண்டும் என அடையாளம் காட்டப்பட பகுதியையும்  பார்வையிட்டார்.

அமைச்சரின் தென் பகுதிக்கான கண்காணிப்பு விஜயத்தின்போது அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க, இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ஜனக முதலிகே, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.வி. உபுல் உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

000

Related posts:

எமது மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது வலுவான நிலைப்பாடு - நெடுந்தீவில...
ஊழலில் முன்னேற்றம்: வளர்ச்சில் வீழ்ச்சி - இதுவே நாட்டின் இன்றைய நிலை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
யாழ் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் நியமனம் - கிளிநொச்சியின் பதில் தலைவராகவும் செய...

குப்பைகள் தொடர்பில்கூட கொள்கைத் திட்டம்இல்லாதமையே அனர்த்தத்திற்கு காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் டக்...
கொழும்பு துறைமுகத்தினை பார்வையிட்ட இரணைதீவு மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!
மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக முன்னின்று செயற்படுவேன். - உடப்பு மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ...