கடந்த அரசின் அடிப்படைவாத மதகுருமார்களுக்கு பாடம் புகட்டியே இந்நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இந்த ஆட்சிக்க மிகப்பெரும் பலத்தை வழங்கியுள்ளனர் – அமைச்சர் டக்ளஸ்!

Thursday, October 22nd, 2020

20 வது திருத்தச் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி காலகட்டத்தின்போது, இந்த நாட்டிலே 1983ஆம் ஆண்டு ஜூலைக் கலவரம், அளுத்கமை கலவரம், ஜிந்தோட்டைக் கலவரம், கண்டி – திகன கலவரம் போன்ற சம்பவங்கள் நடந்தேறியிருந்தன என்பது உண்மை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியல்லாத காலங்களில் 1958 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், கடந்த நல்லாட்சியின் போது நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடமிருந்து குறைக்கப்பட்டு, பிரதமருக்கு வழங்கப்பட்டிருந்த காலகட்டத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருந்த சகோதர முஸ்லிம் மக்களுக்கு எதிரான கண்டி – திகன – அம்பாறைத் தாக்குதல்கள், குறிப்பட்ட பேரினவாத பெரும்பாண்மை மதகுருமாரது சகோதர முஸ்லிம் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்கள் மற்றும் செயற்பாடுகள், இந்த நாட்டு வரலாற்றில் 1983 ஜூலை கலவரத்திற்குப் பின்னர் பெரும் மோசமான வடுவை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பவை பெரும் எடுப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத்தகைய செயற்பாடுகள் மூலமாக சகோதர முஸ்லிம் மக்களது பொருளாதாரம் பாரியளவில் அழிக்கப்பட்டிருந்தது.

சகோதர முஸ்லிம் மக்களது ஆடைகள்கூட கேலிக்குறியதாகவும், கேள்விக்குறியதாகவும் ஆக்கப்பட்டு, அம் மக்கள் வீடுகளில் காய்கறி நறுக்கிய கத்திகள்கூட சுற்றிவளைக்கப்பட்டு, பிடிக்கப்பட்டு, ஊடகங்களில் பயங்கரவாத ஆயுதங்களாக சித்தரிக்கப்பட்டன.

இத்தகைய பெரும்பான்மை பேரினவாத மதகுருமார்களது அடிப்படைவாத போக்குகள் தொடர்பில் சிந்தித்து செயலாற்றிய பெரும்பான்மை இன மக்கள், அத்தகைய அடிப்படைவாத மதகுருமார்களுக்கு கடந்த பொதுத் தேர்தலில் பாடம் புகட்டியே, இந்த ஆட்சியைக் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதிலிருந்து, இந்நாட்டு மக்கள் ஓர் இனவாத ஆட்சிக்கு ஆணை வழங்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகின்றது என்பதையும் இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts: