பத்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உதயமானது புதிய முன்னணி 

Thursday, May 5th, 2016

புதிய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் அபிவிருத்தி ஏனைய பிரச்சனைகள் சரியாக அணுகப்படவில்லை. அதை சரியாக அணுகுவதும், அதற்காக குரல் கொடுப்பதும், ஜனநாயகத் தன்மையுடைய மாற்று தலைமைத்துவத்தை வழங்குவதுமே நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியின் நோக்கமாகும் என்று முன்னணியின் ஊடகப் பேச்சாளர் பிரபாகணேசன் அவர்கள் தெரிவித்தார்.

பத்து தமிழ் அமைப்புக்கள் ஒன்று கூடி பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணியாக செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளன. அதன் அடிப்படையில், ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணியின் அங்குரார்ப்பண நிகழ்வும், ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வும் பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் அமைந்துள்ள த ஓசன் ஹொட்டலில் நேற்றுக் காலை பத்து மணிக்கு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமது ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணியின் நோக்கங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே திரு. பிரபாகணேசன் அவர்கள் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை அரசு மற்றும் சர்வதேச நாடுகளுக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகளையும், நியாயத்தையும் தெளிவு படுத்துவதும், அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கவும் சாத்தியமான எல்லா வழிமுறைகளையும் பிரயோகிப்பதும், தமிழ் மக்களிடையே உருவாக்கப்பட்டுள்ள ஏகப்பிரதிநிதித்துவ கருத்துருவாக்கத்தை மறுதலித்து, பன்மைத்துவ சிந்தனைகளும், ஜனநாயக விருப்பங்களும் இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதும், தமிழ் மக்களிடையே யதார்த்தச் சிந்தனையாளர்களும், நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறை மீது நம்பிக்கை கொண்டவர்களும் இருக்கின்றார்கள் என்பதை தெளிவுபடுத்துவதும் இன்று அங்குரார்ப்பணம் செய்துள்ள ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியின் இலக்குகளாகும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியின் நோக்கங்களை கூறும்போது, தமிழ் மக்களின் முன்னுரிமைக்குரிபய பிரச்சனைகளான, அரசியல் உரிமைப் பிரச்சனை, காணாமல் போனோர் விவகாரம், காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போன்றவற்றுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதும், அதற்காக வெகுஜன விழிப்புணர்வு வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதும், வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் சம உரிமைக்காவும், உழைப்புக்கேற்ற ஊதியத்திற்காகவும், இனத்துவ பாகுபாட்டுக்கு எதிராகவும், வாழ்வியல் புறக்கணிப்புக்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதும், நியாயங்களைப் பெற்றுக் கொடுக்க போராடுவதுமாகும். என்று குறிப்பிட்ட திரு. பிரபாகணேசன் அவர்கள், இந்த உயரிய இலட்சியங்களை வென்றெடுக்க ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளாக இருக்கும் பத்துக் கட்சிகளும் தம்மை அர்ப்பணித்து உழைக்க இணங்கியிருக்கின்றார்கள் என்று கூறியதுடன் இதற்கு குறிப்பாக ஊடகங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திரு. பிரபாகணேசன் அவர்கள், ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணியின் நோக்கத்தையும், வேலைத்திட்டத்தையும் ஏற்றுக் கொண்டு எந்தக் கட்சியோ, அமைப்போ தம்மை இந்த முன்னணியோடு இணைத்துக் கொள்ள முன்வருவார்களேயானால், அத்தகையவர்களையும் இணைத்துக் கொண்டு எனது இலக்கு நோக்கிச் செல்வோம் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். திரு. ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர். திரு. குமரகுருபரன், சிறீ ரெலோ கட்சியின் தலைவர். திரு. உதயராசா, ஈழ புரட்சி அமைப்பின் தலைவர். திரு. இ.பிரபாகரன், ஈழ விடுதலை  அமைப்பின் தலைவர். திரு. ந. சந்திரமோகன், தமிழ் மக்கள் அமைப்பின் தலைவர். திரு. ம. ஈசன், ஜனநாயகப் போராளிகள் கட்சி, சர்வதேச இந்துமத குருமார் அமைப்பின் தலைவர். திரு பாபு சர்மா குருக்கள், ஜனநாயகத்துக்கான மறுசீரமைப்பு அமைப்பின் தலைவர். திரு. சி. சிந்தன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு. டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts:

போலித் தேசியம் பேசி பாவமன்னிப்பு கேட்கிறார் சிவாஜிலிங்கம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சாட்டையடி!
ஏற்றுமதிப் பொருட்களை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையே யாழ்.ராணி விசேட ரயில் சேவை இன்று காலைமுதல...