கடந்தகால படிப்பினைகளை அனுபவமாகக் கொண்டு எதிர்காலத்தை சுபீட்சமானதாக கட்டியெழுப்புவோம் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 18th, 2017

விளையாட்டின் மூலமே சமூகத்தின் ஒற்றுமையை பலப்படுத்த முடியும் என்பதுடன் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் தொடரப்படவேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை அல்வாய் வடக்கு நக்கீரன் சனசமூக நிலையத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் வருடாந்த விளையாட்டு நிகழ்வு ஆகியவற்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

விளையாட்டின் மூலம் சமூகத்தில் பாரிய முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தமுடியும். அதுமட்டுமன்றி இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தமுடியும் என்று நான் நம்புகின்றேன்.

நீண்டகாலமாக நக்கீரன் சனசக நிலையத்தோடும் விளையாட்டுக் கழகத்தோடும் நெருங்கிய தொடர்பு எனக்கு இருக்கின்றது. நக்கீரன் சனசமூக நிலையம் கடந்த 69 ஆண்டுகளாக பல்வேறுபட்ட சமூகப்பணிகளினூடாக சமூக விழுமியங்களை பாதுகாத்து பலப்படுத்துவதில் முன்னின்று செயற்பட்டுவருகின்றது.

குறிப்பாக நக்கீரன் விளையாட்டுக் கழகம் வருடம்தோறும் தீபாவளித் தினத்தன்று சமூகமட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி அதனூடாக சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தி பாதுகாத்து தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றி வருகின்றது.

அந்தவகையில் சனசமூக நிலையத்திற்கும் விளையாட்டுக் கழகத்திற்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இங்கு வருகைதந்திருக்கும்போது இங்குள்ள வீதிகள் பல மிக நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் இருக்கின்ற அதேவேளை இங்கு வாழ்ந்துவரும் மக்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைப்பாடுகளுடன் வாழ்ந்துவருவதையும் அவதானிக்க முடிகின்றது.

கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்ற அரிய பல வாய்ப்புக்களை கடந்தகால தவறான தமிழ் அரசியல் தலைமைகள் உரியமுறைப்படி முன்னெடுக்காததால் மக்களுக்கான தேவைகள் பல உரியமுறையில் இதுவரையில் பூர்த்திசெய்யப்படாத நிலைமையே காணப்படுகின்றது.

இதன்காரணமாக தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களிலேயே பின்தள்ளப்பட்டுள்ள நிலையில் பல்வேறு வசதியினங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றனர். மக்களை உசுப்பேற்றி உணர்ச்சியூட்டி வாக்குகளை அபகரிக்கும் சுயலாப தமிழ் அரசியல் வாதிகளே மக்களது வாழ்வியல் பின்னடைவுகளுக்கு காரணகர்த்தாக்களாக உள்ளனர்.

இருந்தபோதிலும் குறைந்த அரசியல் பலத்தோடு இருக்கும் நாம் கிடைத்த வாய்ப்புக்களினூடாக மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களையும் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்த சாதித்துக்காட்டியுள்ளோம்.

ஆனால் மக்களின் வாக்குகளை அபகரித்து மாகாணசபையையும் நாடாளுமன்ற கதிரைகளையும் அபகரித்துக் கொண்டவர்களால் எமது மக்கள் தொடர்ச்சியாகவே ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா கடந்தகால படிப்பினைகளை தமது அனுபவங்களாக கொண்டு எதிர்காலங்களில் சரியான அரசியல் தலைமைகளை தெரிவுசெய்யவேண்டும். இதனூடாகவே விளையாட்டுத்துறை மட்டுமல்லாது கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி மேம்பாட்டை காணமுடியும் என்றும் தெரிவித்தார்.

முன்பதாக அல்வாய் வடக்கு குச்சம் ஞானவைரவர் கோவில் முன்றலிலிருந்து பாண்ட் வாத்திய இசை அணிவகுப்புடன் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகள் நிகழ்விடத்திற்கு அழைத்துவரப்பட்டனர். ஆரம்ப நிகழ்வுகளைத்தொடர்ந்து மைதானத்தில் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அல்வாய் வடக்கு நக்கீரன் சனசமூக நிலையத்தினதும் விளையாட்டுக் களகத்தின் வளர்ச்சிக்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பாரியளவிலான நிதிப்பங்களிப்பை வழங்கிவருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் அழைக்கப்பட்டிருந்த சிறப்பு அதிதிகள் பலரும் உடனிருந்தனர்.

Related posts:

பனை மரத்திலிருந்து கள் இறக்கத்தடை உடனடியாக நீக்கப்படும் : டக்ளஸ் எம்.பி. யிடம்உறுதியளித்தார் ஜனாதிபத...
தமிழ் மக்களின் பல கோரிக்கைகளுடன் இந்தியா செல்கின்றேன் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
கடற்றொழிலாளர் விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் என்னால் கதையளக்க முடியாது - நாடாளுமன்றில் அமைச்சர் டக...