எமது மக்களது பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!

Wednesday, July 24th, 2019

அண்மையில் திடீரென கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஒன்றும் ஏற்பட்டது. உடனேயே பாணின் விலையும் அதிகரிக்கப்படும் எனக் கூறப்பட்டு பின்னர் அது நடைமுறைக்கு வரவில்லை.

கோதுமை மா பாவனைக்குப் பதிலாக தானிய வகைகளின் பாவனை தொடர்பில் ஒவ்வொரு காலகட்டங்களில் சில பிரச்சார எற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன எனினும் குறிப்பாக மலையக மக்களின் பிரதான உணவு என்ற வகையில் கோதுமை மாவிற்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கோதுமை மாவின் விலையேற்றங்கள் மிக முக்கியமாக மலையக மக்களையும் வறிய மக்களையுமே  பாதிக்கின்றன.

மலையக மக்களின் பொருளாதார நிலைமை என்பது தொடர்ந்தும் தேய்பிறையாகவே இருந்து வருகின்றது.

வடக்கே சில தமிழ்த் தரப்பினர் மக்களை ஏமாற்றுவதற்காக புதிய அரசியல் தீர்வு இதோ வரும் அதோ வரும் என நிலவைக் காட்டி சிறு குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதைப் போன்று மலையக மக்களின் ஊதியத்துடன் ஐம்பது ரூபா சேர்த்து வழங்கப்படும் என்ற கதையும் அப்படியே தொடர் கதையாகிவிட்டுள்ள நிலையில் அம் மக்களை மிகவும் பாதிக்கின்ற ஒரு விடயமாகவே மாவின் விலை அதிகரிப்பு அமைந்துவிடுகின்றது.

இப்போது கோதுமை மாவிற்கும் பால் மாவிற்கும் விலை சூத்திரம் கொண்டுவரப்படுமெனக் கூறப்படுகின்றது. விலைச் சூத்திரங்கள் மிக அதிகமாகவே இங்கு உயரப் போகின்றனவே தவிர மிகவும் குறைவாகவே கீழே இறங்குகின்றன என்பதால் கோதுமை மா மற்றும் பால் மா தொடர்பில் உரிய பொறிமுறை அவசியமாகின்றது. அந்தப் பொறிமுறை விலை சூத்திரம் எனில் அது நியாயமானதாகவே அமைதல் அவசியமாகின்றது.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலே இரண்டாவது இடத்தை வகிக்கின்ற எமது மக்களின் வாழ்வாதாரத் துறையான பாலுற்பத்தித் துறையிலும் தற்போது வீழ்ச்சி நிலையே காணப்படுவதாக அறிய முடிகின்றது.

குறிப்பாக அவர்கள் உற்பத்தி செய்கின்ற பாலினை நியாய விலையில் வாங்குவதற்கு எவரும் இல்லாத நிலை காணப்படுவதாகக் கூறப்படுகின்றது என்பதையும் இங்கு தெரிவித்து இத்தகைய எமது மக்களது பிரச்சினைகள் தீருகின்ற நாள் வெகு விரைவில் ஏற்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கம்பனிகள் திருத்தச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் அரசு உரிழய கவனம் செலுத்தவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
கிடைக்கப்பெறுகின்ற வளங்களைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் - முல்லைத்தீவில் டக்ளஸ் தே...
நாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இன்னமும் உ...