எமது பிரச்சினைகளை சர்வதேச அளவீடுகளைக்கொண்டு அளக்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
Saturday, July 8th, 2017
எமது பிரச்சினைகள் அனைத்தையும் நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டையே நாம் கொண்டிருக்கின்றோம். இதனை அடியொட்டியதாகவே எனது கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.
எமது பிரச்சினைகளுக்கு சர்வதேச அளவுகோள்களைக் கொண்டு அளவீடுகள் செய்யப்படுவதோ அல்லது சர்வதேசத்தைக் கொண்டுதான் எமது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதோ இன்றைய நிலையில் இந்த நாட்டுக்கு ஆரோக்கியமானதாக அமையாது. கடந்த காலங்களிலும் எமது பிரச்சினைகளில் சர்வதேசமானது எமக்கு சாதகமான முறைகளில் அல்லாது பெரும்பாலும் எமக்குப் பாதகமான முறைகளிலேயே செய்றபட்டிருந்த விதம் குறித்து பலரும் அறிந்தீர்பீர்கள். எனினும், எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் அனைவரும் நம்பிக்கையுடையவர்களாக செயற்பட வேண்டியது அவசியமாகும். இனங்களுக்கிடையில் நம்பிக்கை அற்றுப் போன நிலையிலேயே எமது நாடு கடந்த காலங்களில் பல்வேறு அனர்த்தங்களைச் சந்தித்து வந்துள்ளதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இந்த நாடு மத சார்பற்ற ஒரு நாடாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எம்மிடம் இருக்கின்றது. இடதுசாரிக் கொள்கையினை நாம் ஏற்று வருவதால் இத்தகையதொரு நிலைப்பாட்டினை நாம் கொண்டிருக்கின்றோம் என்பதை நானிங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இருப்பினும், எமது நாட்டில் பெரும்பான்மையின மக்களின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு உள்ளது. ஆனாலும், இந்த நாட்டில் இன சமத்துவம் என்பது பேணப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம். அதேபோன்று ஒவ்வொரு மதத்தினரும் ஏனைய மதத்தவர்களது மத உணர்வுகளையும் மதிக்க முன்வர வேண்டும்.
Related posts:
|
|
|


