ஊடகங்கள் கண்ணாடி போன்று பிரதிபலித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான தீர்வை எட்டுவேன்– டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Sunday, July 28th, 2019

ஊடகங்கள் கண்ணாடி போன்று பிரதிபலித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினையில் கணிசமானவற்றுக்கு தீர்வை எட்டிக்காட்டுவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஊடகங்கள் உண்மைத்தன்மையுடன் உள்ளதை உள்ளபடி வெளிக்கொண்டு வருவதுடன் மக்களுக்கு சரியான வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும். அதேபோன்று உள்ளதை உள்ளபடி என்கின்ற போது குறிப்பாக கண்ணாடி போன்று செயற்பட வேண்டும். அதாவது சம்பவங்களையோ அல்லது செயற்பாடுகளை உள்ளபடி எடுத்துக் கூறாது இருட்டடிப்பு அவதூறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் அச்சு ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் ஆயுத அழுத்தங்களுக்கு உட்பட்டு எமது கட்சி மீது பல்வேறு அவதூறான செய்திகளை வெளியிட்டிருந்தன. அதற்கான மறுப்பறிக்கைகள் எம்மால் வெளியிடப்பட்ட போதும் அவை வெளிக்கொண்டுவராது மறைக்கப்பட்டிருந்தன.

அதன் காரணமாகவே மக்கள் பல உண்மை நிலைமைகளை அறிந்துகொள் முடியாதிருந்தது. இது  எமக்கு மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கும் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவை உருவாக்கியிருந்தது. இன்றும் இந்த இருட்டடிப்புக்கள் தொடர்வதாகவே தெரிகின்றது.

இந்த நிலைமை மாறி ஊடகங்கள் உண்மைகளை உள்ளதை உள்ளவாறு மக்களிடம் எடுத்துச் சொன்னால் நிச்சயமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கு கணிசமான தீர்வு பெற்றுக் கொடுக்க என்னால் முடியும். அதற்கு ஊடகங்கள் உண்மை நிலையையும் கள நிலையையும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: