உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க கூட்டு ஒப்பந்தம் தடையா? –  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, September 19th, 2018

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில், எமது மக்களது பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக்கி நீடித்து வைத்திருப்பதிலேயே தங்களது அரசியல் தங்கியிருப்பதாக எண்ணுகின்ற சுயலாப தமிழ் அரசியல் வாதிகளைப் போல், இந்த மலையக மக்களையும் அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்காமல் வைத்திருப்பதிலேயே தங்களுக்கான இலாபங்கள் தங்கியிருப்பதாக தற்போதைய பெருந்தோட்டத்துறை நிர்வாகங்கள் எண்ணி, செயற்பட்டு வருகின்றன என்றே கூற வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபைகள் மற்றும் இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் தொடர்பிலான சட்டமூலங்கள் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கம்பனிகள் பெருந்தோட்டத்துறையினைப் பொறுப்பேற்றதன் பின்னர், இம் மக்களுக்கென வழங்கப்பட்டு வந்திருந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதுடன், நலன்புரித் தேவைகளுக்கென வழங்கப்பட்டு வந்திருந்த செலவுத் தொகையும் 25 சத வீதத்தால் குறைக்கப்பட்டதாகவும், அபிவிருத்திகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இன்று இம் மக்களின் பூதாகார பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஊதியப் பிரச்சினையானது, ஊதிய அதிகரிப்பிற்கு வழிவிடாத வகையில் கூட்டு ஒப்பந்தம் என்ற போர்வையில் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அண்மையில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மலையக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கில், தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் இதர விடயங்களை ஆராய்ந்து பார்க்கின்றபோது, மலையக தொழிலான மக்களின் நாளாந்த ஊதியம் 1,108 ரூபாவாக இருத்தல் வேண்டும் என, பல்கலைக்கழக ஆய்வு மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், இந்த மலையகத் தொழிலாளர்கள் இந்த ஊதிய மட்டத்தினை எட்டுவார்களா? என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகவே தொடர்கின்றது. 1000 ரூபா வரையிலான ஊதிய உயர்வு கோரி இம் மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அதற்கு இந்த மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் தலைவர்களும் சார்பு நிலைகளைத் தெரிவித்திருந்தனர். இப்போது 750 ரூபா வரையில் நாளாந்த ஊதியம் வழங்குவது தொடர்பில் பேசப்படுகின்றது. ஒரு தரப்பு இவ்வாறு பேசுகின்ற நிலையில், இன்னொரு தரப்பு இதற்கும் சவால் விடுகின்றது. அதாவது, இந்த 750 ரூபாவும் கிடைக்காது என்ற வகையில் சவால் விடப்படுகின்றதாகவே அறிய முடிகின்றது.

இதற்கெல்லாம் காரணம் கூட்டு ஒப்பந்தமே எனக் கூறப்பட்டு, அதற்குரிய பல்வேறு விடயங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 1998ஆம் அஆ;டு மேற்கொள்ளப்பட்ட பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் மொத்த ஒரு நாள் ஊதியமாக 101 ரூபாவும், மேலதிக ஒரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கு 3 ரூபா 75 சதமும்  என வழங்கப்பட்டு வந்தது. இறுதியாக 2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் மொத்த ஒரு நாள் ஊதியம் 730 ரூபாவும், ஒரு கிலோ மேலதிக தேயிலைக் கொழுந்துக்கு 25 ரூபாவும் என வழங்கப்பட்டது. இதன்படி பார்க்கின்றபோது 20 வருடங்களில் – அதாவது 1998 முதல் இன்று வரையில் இம் மக்களுக்கான ஊதியமானது 629 ரூபாவால் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

ஊதியத் தொகை இவ்வாறிருக்க, இந்த மக்களுக்கு வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களே வேலை வழங்கப்படும் நிலை தொடர்கின்றது. வேலைக்குச் சென்றாலும், தொழிலிடப் பகுதிகள் உரிய கவனிப்புகள் இன்றிய நிலையில், காடுகள் அடர்ந்து காணப்படுவதால், இம் மக்கள் பல்வேறு காட்டு விலங்கினங்களின் தாக்குதல்களுக்கு இலக்காகின்ற நிலைமைகள் ஏராளமாகும். குளவிக் கொட்டுதல் என்பது மலையகப் பகுதிகளைப் பொறுத்தவரையில் பாரியதொரு அனர்த்தமாகவே தொடர்கின்றது.

Related posts: