உயிர் நீத்தோரை மட்டுமன்றி, உயிர்வாழப்  போராடுபவர்களையும் நினைத்துப்பார்த்து உதவிட முன்வர வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Monday, May 15th, 2017

எதிர்வரும் 18ஆம் திகதி உயிர்நீத்த எமது உறவினர்களின் நினைவேந்தல் நிகழ்வோடு நின்றுவிடாமல், யுத்தம் காரணமாகப் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு, அப் பாதிப்புகளிலிருந்து இன்னமும் மீள முடியாதிருக்கும் எமது மக்களின் வாழ்க்கை நிலையினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் தமிழர் தரப்பில் அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், யுத்தம் காரணமாக உயிர் நீத்த எமது மக்களை நினைவு கூறுவதற்கு ஏதுவாக நினைவுத் தூபி ஒன்றினை பொருத்தமான இடத்தில் அமைப்பதற்கும், அதற்கென ஒரு பொதுவான தினம் அறிவிக்கப்படுவதற்கும் நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை சமர்ப்பித்துள்ளேன். இம் மாதம் அப் பிரேரணை நாடாளுமன்றத்தில் எடுக்கப்படவுள்ளது. எனது கோரிக்கைக்கு அமைவாக மேற்படி ஏற்பாடுகள் சாத்தியமாக்கப்பட்டால் அது எமது மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அதே நேரம், கடந்தகால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள், பல்வேறு நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர். பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், அங்கவீனமாக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகள், பெற்றோரை இழந்த சிறுவர்கள் என இம் மக்கள் பல்வேறு வகைகளில் தரம் பிரிக்கப்பட்டு பேசப்பட்டு வருகின்றனரே தவிர, இவர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பல்வேறு உதவிகள் இன்னமும் வழங்கப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. புலம் பெயர்ந்த உறவுகள் இம் மக்களுக்கு இயன்றவரையில் உதவிகளை அனுப்பி வைப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், அவை இம் மக்களுக்குப் போய்ச் சேருகின்றனவா என்பது தொடர்பில் கேள்விகள் உண்டு.

இம் மக்களின் வாழ்வாதாரங்கள் உயர்த்தப்பட வேண்டும். தொடரந்தும் இம் மக்கள் நிவாரணங்களை நம்பியே வாழ முடியாது. எனவே, அதற்கேற்ற வகையிலான நிரந்தர ஏற்பாடுகளை மேற்கொள்வது அரசியல் அதிகாரங்களைப் பெற்றிருக்கும் தமிழ்த் தரப்பினரின் பொறுப்பாகும். எனினும், இப் பொறுப்பினை உணராதவர்களாகவே அரசியல் அதிகாரமிக்கத் தமிழ்த் தரப்பினர் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். இது பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகவே கருதப்பட வேண்டியது.

உயிர் நீத்த உறவுகள் நினைவு கூறப்படுவதுடன், உயிரோடிருந்து, உயிர் வாழ்வதற்காக  நாளாந்தம் பல்வேறு போராட்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற எமது மக்கள் தொடர்பிலும் நினைத்துப் பார்த்து, இம் மக்கள் தங்களது வாழ்க்கை நிலையினை  மேம்படுத்திக் கொள்வதற்கு இயன்ற உதவிகளை வழங்குவதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வரி விதிப்புகளும், பொருட்களின் விலையேற்றமும் மனித வளத்தை நாட்டைவிட்டு வெளியேற்றுகிறது – நாடாளுமன்றில...
கடலட்டை பண்ணைகள் மூலம் 7 ஆயிரத்து 700 மில்லியன் ரூபா வருமானம் - அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!
அமைச்சர் பவித்ராவுடன் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை எடுங்கள் - அதிகாரிகளுக்கு அம...