உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, June 7th, 2018

உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால், குளம் உடைப்பெடுக்காமல், ஏற்படவிருந்த பாரிய ஆபத்து நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடு செய்யும் வகையில் நட்டஈடுகளை வழங்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களிடமே இவ்வாறு செயலாளர் நாயகம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது –

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள உன்னிச்சைக்குளத்தின் அதிக நீர் காரணமாக அதன் வான் கதவுகள் கடந்த மாதம் 25ஆம் திகதி அதிகாலை திறந்துவிடப்பட்டதனால், இந்த போகத்தில் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 800 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரமாக சுமார் 6000 ஏக்கர் நெற் செய்கைப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 10 கோடி ரூபா வரையில் நட்டமேற்பட்டுள்ளதாக அப் பகுதி விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி குளத்தின் நீர் மட்ட அதிகரிப்பு தொடர்பில் கடந்த மாதம் 19, 20, 21ஆம் திகதிகளில் பொறுப்பு வாய்ந்தவர்களால் நீர்ப்பாசனத் திட்ட அதிகாரிகளிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அதனை அவதானத்தில் கொள்ளாமல், 23ஆம் திகதி மேற்படி குளத்தின் ஆபத்தான நிலை உணர்த்தப்பட்ட நிலையில், 24ஆம் திகதி ஆறு அங்குல நீர் திறந்துவிடப்படுமென நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளினால் கூறப்பட்டு, 25ஆம் திகதி அதிகாiலை 15 கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால்தான் மேற்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்படி வான் கதவுகள் திறக்கப்பட்தன் பின்னர் அப்பகுதியில் நீர்ப்பாசன அதிகாரிகள் எவருமே இருக்கவில்லை என்றும், எனவே, இந்த செயற்பாடானது அதிகாரிகளின் அசமந்தப் போக்கு காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேற்படி குளத்தில் நீர் மட்டம் உயருகின்றபோது, அதன் நீரை வெளியேற்றுவதற்கு உரிய வடிச்சல் ஆறு இல்லாததன் காரணமாகவே இத்தகைய நிலைமை ஏற்படுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் ஒரு முறைப்பாடு முன்வைக்கப்படுகின்றது.

அந்தவகையில்  –
1. குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால், குளம் உடைப்பெடுக்காமல், ஏற்படவிருந்த பாரிய ஆபத்து நிலை தவிர்க்கப்பட்டுள்ளது எனினும், இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடு செய்யும் வகையில் நட்டஈடுகளை வழங்க முடியுமா?

2. வான் கதவுகள் திறப்பு காரணமாக ஏற்பட்டுள்ள விவசாய மக்களின் பாதிப்புகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அதிகாரிகளது கனயீனங்கள் காரணமாக இருப்பின், அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?

3. குளத்தில் உயர்வடையும் நீரை பாதுகாப்பான முறையில் வெளியேற்ற ஏதுவாக வடிச்சல் ஆற்றை அமைப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேற்படி நிலைமையினை ஆராய்ந்து, குறித்த கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களிடம் எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Untitled-1 copy

Related posts:

அரசியல் தீர்வானது தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும் - சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் டக்ளஸ்...
நவீன வசதிகளுடன் கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் - டக்ளஸ் தேவானந்தா...
கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுபடுத்தப்பட வேண்டும்...