உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓர் இடைக்கால ஏற்பாடாக 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம்! – டக்ளஸ் தேவானந்தா
Tuesday, April 5th, 2016
65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் வீடுகள் தொடர்பில் சாதக மற்றும் பாதகமான கருத்துக்கள் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், எமது மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஓர் இடைக்கால ஏற்பாடாக அவ் வீட்டுத் திட்டத்தை எமது மக்கள் ஏற்றுக் கொள்ள முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்திருக்கும் செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த காலத்தில் நாம் ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது, இந்திய அரசுடன் கதைத்து இந்திய வீடமைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தோம். அந்த வகையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் இந்த 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை இன்னும் தரமானதாக – எமது மக்களின் வாழ்க்கை முறைமைக்கு ஏற்றவாறு, காற்றோட்டம் கூடிய வசதிகளுடன், எமது மக்களின் எதிபார்ப்புகளுக்கு அமைய சிறப்பாக முன்னெடுத்திருக்க முடியும். இதனை, தற்போதைய அரசை தாங்கள்தான் கொண்டு வந்தோம் எனக் கூறிக்கொண்டு, இந்த அரசுடன் இணக்க அரசியல் நடத்துபவர்கள் செய்திருக்க வேண்டும். ஆனாலும், அவர்களுக்கு எமது மக்கள் குறித்து எதுவித அக்கறையும் இல்லை என்பதையே அவர்களது செயற்பாடுகள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன.
தற்போது அமைக்கப்படவுள்ள இத் திட்டத்தின் வீடுகளை ஓர் இடைக்கால ஏற்பாடாக உடனடி தேவைகளுக்கு உட்பட்டிருக்கும் எமது மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், இவ் வீடுகளைப் பெறாமல் இத் திட்டம் நிராகரிக்ப்படுமானால் இதற்கு மாற்றீடாக ஒரு திட்டம் எமக்குக் கிடைக்கப்போவதில்லை. தவிர, இப்போதைக்கு நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் தற்போதைக்கு வேறொரு வீட்டுத் திட்டமும் உடனடி யாக சாத்தியமில்லை என்றே தெரிகிறது. இறுதியில் இரணைமடு நீர் வழங்கல் திட்டத்திற்கு ஏற்பட்ட நிலைமைதான் இதற்கும் ஏற்படும். அன்று இரணைமடு நீர் வழங்கல் திட்டத்தை எதிர்த்து அதனை முன்னெடுக்க விடாமல் தடுத்து நின்ற தமிழ்த் தலைமைகளால் இன்று வரை எமது மக்களின் குடி நீர்ப் பிரச்சினையை தீர்க்க நடைமுறை சாத்தியமான ஒரு திட்டத்தைக் கொண்டுவர இயலாதுள்ளதை எமது மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அவ்வாறானதொரு நிலைமை இவ் வீட்டுத் திட்டத்திற்கும் ஏற்பட்டு, அதனால் கிடைக்கக்கூடிய பயன்கள் எமது மக்களுக்குக் கிட்டாது போகக் கூடாது. எனவே, இதனை தற்போது ஏற்றுக் கொள்வதே சிறந்ததாகும். பின்னர், நாங்கள் அரசியல் ரீதியிலான பலத்தைப் பெறுகின்ற நிலையில் ஒரு நிரந்தர வீட்டுத் திட்டத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
|
|
|


