உசுப்பேத்தல் முயற்சிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகக் குரல் எழுப்பும் தகுதி  டக்ளஸ் எம்.பிக்கு உண்டு !

Wednesday, December 20th, 2017

தருணம் பார்த்திருங்கள் காலம் வெகு தொலைவில் இல்லை என்று முதலமைச்சர் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தமிழ் இளைஞர்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டபோதே அது உசார்படுத்தலா அல்லது உசுப்பேத்தலா என்ற கேள்வி எழத் தவறவில்லை.

அதே காலகட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் யாம்ப்பாண மாவட்டத்தின் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அதை ஒட்டி ஒரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். அவர் இந்தக் கருத்தை எதேச்சையாக வெளியிட்டிருந்தாரா அல்லது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பதிலடியாகச் சொன்னாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவரது கருத்து வெளியான சமய சந்தர்ப்பம் முதல்வருக்கான பதில் போன்றே அமைந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்புகளில் மத்திய அரசைப் போன்றே மாகாண அரசினாலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். இதற்கு எதிராக எமது இளைஞர், யுவதிகள் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்த முயற்சிகள் மற்றும் போராட்டங்கள் மத்திய அரசைப் போன்றே மாகாண அரசினாலும் புறந்தள்ளப்பட்டு வந்துள்ளமையைக் காணக்கூடியதாக இருந்தது. சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக மீண்டும் எமது இளைஞர்கள், யுவதிகளைத் தூண்டிவிட்டு அதன் மூலமாக குளிர்காய முயலாமல் இன்றைய மத்திய மற்றும் மாகாண ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் வடக்கு மாகாண இளைஞர், யுவதிகளின் முக்கிய பிரச்சினையாகவுள்ள வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா எம்.பி கூறியிருக்கின்றார் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்தக் கூற்றுத் தொடர்பில் அதில் பொதிந்துள்ள அம்சங்கள் சம்பந்தமாக சில விடயங்களைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமானது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யுத்தத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட இளம் சமூகத்தைக் கொண்ட நம் மத்தியில் தான் வடமாகாணத் தமிழர்கள் மத்தியில் தான் வேலை வாய்ப்பின்மை மிக மோசமாகவும் பெரும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் விவகாரமாகவும் உள்ளது. ஆகையால் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அதனைச் சுட்டிக்காட்டி விவகாரமாக்கி தீர்க்க முயல்வது டக்ளஸ் எம்.பி.யின் கடமையும் பொறுப்புமாகின்றது.

இந்தக் கூற்றில் அவர் குறிப்பிட்டவை போல இளைஞர், யுவதிகளைத் தூண்டிவிடும் அவலத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுள் அவரும் ஒருவர். நமது முன்னைய மிதவாதத் தமிழர்கள் ஆற்றிய உணர்ச்சியூட்டும் உரைகளுக்கு எடுபட்டு ஆயுதம் தூக்கிச் சென்று லெபனான் பயிற்சிக்கு புறப்பட்ட முதல் ஓரிரு தமிழ்ப் போராளிகளுள் அவரும் ஒருவர். யுத்தம் முடிந்து தீர்வுக்கு முயற்சிகள் நடக்கையில் உசுபேத்தல் முயற்சிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகக் குரல் எழுப்பும் பொறுப்பு அவருக்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

அடுத்து அவர் கிளப்பியுள்ள வேலை வாய்ப்புப் பிரச்சினையும் அதைத் தீர்ப்பதில் தற்போதைய மத்திய, மாகாண அரசுகள் காட்டிவரும் மெத்தனப் போக்குப் பற்றிய குற்றச்சாட்டும் அதுவும் கூட மறுக்கப்பட முடியாத பல உண்மைகள் பொதிந்த கூற்றுத் தான்.

நமது மாகாண அரசும் தற்போதைய மத்திய அரசும் இவ்விடயத்தில் காத்திரமாகச் செயற்படவேயில்லை என்ற பெறுபேற்று உண்மையைப் பெற்றுக் கொண்டேயாக வேண்டும்.

அத்தோடு அக் குற்றச்சாட்டை முன்வைக்கும் உரிமை, தகைமை அவருக்கு உண்டு. ஏனெனில் யுத்தம் நடந்த காலத்திலும் பின்னரும் முன்னைய அரசுகளுடன் அவர் சேர்ந்திருந்த போது தமிழர் தரப்பினால் துரோகியாக அவர் வையப்பட்ட சமயத்தில் கூட வடக்கு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தார தம்மியம் பார்க்காமல் வேலை வாய்ப்புகளைத் தேடிக் கொடுப்பதில் முன்னின்று செயற்பட்ட அரசியல்வாதி அவரே. அண்மைக்கால வடக்கு அரசியல் தலைவர்களின் இடையே தமிழ் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தவர் என்ற வரிசையில் முன்னிலை டக்ளஸ் தேவானந்தாவுக்கு தான். எதற்காக எப்படி எந்த வழியில் அதை அவர் பெற்றுக் கொடுத்தார் என்பதை விட அந்த வரிசையில் முன்னிற்பவர் அவர் என்பது தான் முக்கியமானது.

ஆகையால் அந்த விடயம் குறித்து வேலையில்லாப் பிரச்சினை பற்றி விசனம் தெரிவித்து அதனை முன்னிலைப்படுத்தி குரல் எழுப்பும் தகுதியும் அவருக்கு உண்டு என்று கூறுவது சரியானதே.

ஆனால் இப்போதைய தேர்தல் உள்ளூராட்சிசபைக்கானதாகும். இந்த விடயத்தில் அவரது கட்சியும் அவரது கட்சி நிர்வகித்த சபைகளும் குறிப்பாக யாழ்.மாநகரசபையும் எப்படிச் செயற்பட்டன என்ற பரிசீலனையே சோதனையே ஆய்வே இப்போது முக்கியமாகும். அதுவே இன்றைய நிலையில் பேசு பொருளாக அமைய வேண்டும்.

Related posts:


அதிகாரத்தை தாருங்கள் : நான் உங்கள் எதிர்காலத்ததை வென்றெடுத்துத் தருவேன் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!...
கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை - விவேகம் அற்ற வீரம் ஏற்படுத்...
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 10 நாள்களில் 10 ஆயிரம் கட்டில்கள் திட்டம் - வடக்கு மாகாண சுகாதாரப் பணிப...