அசமந்தப் போக்கினால் சந்தர்ப்பங்கள் தவறவிடப்படுகின்றன – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Friday, May 27th, 2022

கிடைக்கின்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி, இருப்பதை பாதுகாத்துக் கொண்டு, மேலும் முன்னோக்கி நகர வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்சி செயற்பாட்டாளர்களின் அசமந்தமான செயற்பாடுகள் காரணமாக, சந்தர்ப்பங்கள் தவறவிடப்படும் நிலை அவ்வப்போது ஏற்படுவதாகவும் ஆதங்கம் வெளியிட்டார்.

கிளிநொச்சி மாவட்ட ஈ. பி.டி.பி. அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன்  இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய காலச் சூழலை நாம் எதிர்கொண்டுள்ள  நிலையில், கட்சிச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் வினைத் திறனான செயற்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தாராளமான உர வகைகள் கிடைக்கும் வகையில், தமிழகத்தில் இருந்து காங்கேசன் துறை ஊடாக பசளைகளை எடுத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்னும் இரண்டு வாரங்களில் முதற் கட்ட உர வகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி,  விவசாய மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள கிளிநொச்சியில் விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாய நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கு கட்சி செயற்பாட்டாளர்கள் முயற்சிக்க வேணாடும்” என்று தெரிவித்தார்.

அதேபோன்று, அரசாங்கத்தின் திட்டங்களையும் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று, அவற்றின் மூலம் நன்மைகளை பெற்றுக்கொடுக்கின்ற வேலைத் திட்டத்தினையும் கட்சிச் செயற்பாட்டாளர்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தார்

000

Related posts: