இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தமிழகத்துடன் பேச்சு நடத்துவதே சிறந்தது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

தீரா பிரச்சினையாக இருந்துவரும் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தமிழகத்துடன் பேச்சு நடத்துவதே சிறந்தது. வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் நாட்டுக்குச் சென்று அங்குள்ள அரசியல் தலைவர்களிடம் இந்த பிரச்சினைகள் தொடர்பில் பேச முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை நெடுங்காலமாக தொடர்கின்றது. எம்மைப் பொறுத்தவரை நாம் அதற்காக இரண்டு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். முதலாவது நடவடிக்கை இராஜதந்திர ரீதியில் அதனை முன்னெடுப்பது.
அந்த வகையில் ராஜதந்திர ரீதியாக பல பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு அவை பயனளிக்கவில்லை என்பதை குறிப்பிட வேண்டும்.
இரண்டாவதாக சட்ட நடவடிக்கைகள். அந்த வகையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கைதுகள் இடம்பெற்று வருகின்றன.
இத்தகைய கைது செய்திகள் தமிழ்நாட்டில் பரப்பப்படும் போது அது பிரச்சினைக்குரியதாகின்றது. தமிழ்நாட்டிலுள்ள மீனவர்கள் பாரம்பரியமாக மேற்கொண்டு வரும் தொழில் எனவும் இலங்கை கடற்படையே அவர்களை முறையற்ற விதத்தில் கைது செய்கின்றார்கள் என்றும் அங்குள்ளவர்கள் குற்றச்சாட்டுகிறார்கள்.
அந்த வகையில் வடக்கிலுள்ள கடற்தொழிலாளர்கள் ஒரு குழுவாக தமிழ்நாட்டுக்கு சென்று அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள ஊடகங்களுக்கும் இங்குள்ள உண்மை நிலையை தெளிவுபடுத்த முடியும்.
இந்த செயற்பாட்டிற்கு வடக்கிலுள்ள எம்பிக்கள் சிலர் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். எனினும் சார்ள்ஸ் எம்பி அதற்கு இணக்கம் தெரிவிக்காமல் இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவரை அழைத்து பேசலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அது ஒரு பிரச்சினை இல்லை. எனினும் அடிக்கடி இந்தியத் தூதுவர்கள் மாற்ற மடைந்து செல்வதால் அதில் ஒரு சிக்கல் காணப்படுகிறது. என்றார்.
இதன் போது குறுக்கிட்ட சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்பி –
இலங்கையில் உள்ள இந்திய தூதுவர்கள் மாறினாலும் தமிழ் நாடு போன்ற மாநில அரசாங்கத்துடன் நாம் பேச்சு வார்த்தை நடத்தாமல் இந்தியா என்ற பாரிய அரசாங்கத்துடன் அது தொடர்பில் பேசினால் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே எமது எதிர்பார்ப்பு என்றார்.
அந்த வகையில் முதற்கட்டமாக இலங்கையில் உள்ள இந்திய தூதுவருடன் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் புத்தளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –
கடற்தொழில் அமைச்சர் என்ற வகையில் எழுத்து மூலம் எனக்கு நீங்கள் அதற்கான கோரிக்கையை முன் வைத்தால் நான் நிச்சயம் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வேன் பேச்சுவார்த்தைக்கான திகதியையும் பெற்றுத்தர முடியும் என்று அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|