இரு மொழிக் கொள்கை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, April 2nd, 2019

தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த நாட்டின் அரச நிர்வாக வியூகமானது அதற்கான ஒத்துழைப்பினை கடுகளவும் வழங்காத நிலைமைக்குள் அமைச்சர் அவர்களது முயற்சிகள் போதியளவு வெற்றி பெறாத நிலைமைகளையே காணக் கூடியதாக இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேசிய ஒருமைப்பாடு என்பது அதற்கான முயற்சிகள் ஒரு பக்கத்தில் பாரியளவு செலவுகளை மேற்கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், மறுபக்கத்தில் இந்த அரசின் செயற்பாடுகளும், அரச நிறுவனங்களின் செயற்பாடுகளும் தமிழ் பேசுகின்ற மக்கள் மத்தியில் உணர்வு ரீதியிலானதும், உரிமை ரீதியிலானதுமான வெறுப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தேசிய ஒருமைப்பாடு என்பது ஒரு பேசு பொருளாக மட்டுமே வெறுமனே உதட்டளவிலான உச்சரிப்பாகவே தொடரும் நிலைமையைக் காண்கின்றோம்.

அமைச்சர் அவர்கள் ஏற்கனவே அரச படிவங்களை தமிழ் மொழியிலே மொழிபெயர்க்கின்ற ஒரு பணியை மேற்கொண்டதாகத் தெரிவித்திருந்தார். அதற்குரிய அலுவலர்களும் நியமிக்கப்படுவார்கள் எனக் கூறியிருந்தார். என்றாலும், பெரும்பாலான அரச நிறுவனங்களில் அப்படியான செயற்பாடுகளை நடைமுறையில் இன்னமும் காணக் கூடியதாக இல்லை.

எனவே, தேசிய நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு எனக் கதைக்கின்றபோது, இரு மொழி அமுலாக்கல் என்பது அதனது அடிப்படையாக இருப்பதை அவதானத்தில் கொண்டு, இந்தச் செயற்பாடுகளை மேற்கொள்வதோடு, பொதுவாக அரச பணியாளர்களிடையே இந்த இரு மொழிக் கொள்கை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து ஒரு பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும். அதனை ஒரு தவிர்க்க முடியாத தொழில் ரீதியிலான ஒழுங்கு ஏற்பாடாகவும் மேற்கொள்ளல் வேண்டும்.

Related posts:

வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: ஆட்சி ஏறியவுடன் 30 ஆயிரம் பேருக்கு நியமனம் – கோட்டபய ராஜ...
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாயின்அதனை மனிதாபிமான ரீதியாக அணுக வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியு...
எரிபொருள் விலையேற்றத்தினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் அமை...