‘இரண்டாவது பண்டாரநாயக்க’அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, March 24th, 2017

அரசியல் என்பது எமது மக்களின் நலன்களை கருதியதாகவே இருக்க வேண்டுமே அன்றி, அது, எமது தனிப்பட்ட சுய நலன்களுக்கானதாக இருக்கக்கூடாது.

மக்களது வாக்ககளைப் பெற்று அரசியல் பதவிகளுக்கு வருகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களை அப் பதவிகளில் அமர்த்திய மக்களை மறந்து விடுகின்ற நிலைமைகளை நாம் பெரும்பாலும் காணக்கூடியதாக இருக்கின்ற ஒரு நிலையில், அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள், அவருக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றாமல், அம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய வகையிலும், அதே நேரம் அவர் இந்த நாட்டின் பிரதமராக பதவியேற்றிருந்த காலத்தில் இந்த நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடியவராகவும் தனது அரசியல் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டவராகத் திகழ்ந்தார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள் பற்றிய அனுதாபப் பிரேரணை இன்று கொண்டுவரபபட்ட நிலையில், அதில் கலந்து கொண்டு உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவிக்கையில், அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள் அரசியலை முன்னிறுத்தி பிழைப்பு நடத்த முற்படாமல், அதனை ஒரு மக்கள் பணியாகக் கருதி இறுதிவரை செயற்பட்டு வந்ததன் காரணமாகவே இன்றும்கூட தென்பகுதி மக்களிடையே போற்றத்தக்க ஒரு தலைவராக அவர் மதிக்கப்படுகின்றார்.

அந்த வகையில் அன்னாரது கொள்கை வழியைப் பின்பற்றி அவரது புதல்வர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க அவர்களும் மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள் எதையும் வெளிப்படையாகப் பேசுகின்ற பண்பினை நிறையவே பெற்றிருந்தவர். நேரம் தவறாத அவரது பணிகள் பலரையும் கவர்ந்த ஒரு குண இயல்பு என்றே கருதுகின்றேன்.

எமது நாட்டு அரசியலில் தனித்துவமானதொரு முத்திரையைப் பதித்துள்ள அமரர் பிலிப் குணவர்தன அவர்களது கொள்கைவழி ஏற்று, தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள், அக்கால கட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணியின் சிறந்த மேடைப் பேச்சாளராகத் திகழ்ந்தவர்.

1960ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, மக்கள் ஐக்கிய முன்னணி கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஹொரன தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு அன்னார் 5110 மேலதிக வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

1962ம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்ட அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள், 1965ம் ஆண்டு அக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் ஹொரன தொகுதியில் வெற்றி பெற்றார். அன்று முதல் அன்னார் மரணமெய்தும்வரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைவிட்டு வெளியேறாமல், தொடர்ந்தும் அதே கட்சியிலேயே தன்னை இணைத்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பதவிகளுக்காகவோ அல்லது தனிப்பட்ட சுயநலன்களுக்காகவோ ஒரு போதும் அவர் தனது கட்சிக் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் துணிந்து செயற்பட்ட தலைவராக சிங்கள மக்களிடையே போற்றப்படும் நிலைக்கு உயர்ந்தவர்.

‘இரண்டாவது பண்டாரநாயக்க’ என்றும் ‘ஹொரன பொடி புத்தா’ என்றும் ஹொரன மக்களிடையே பிரபலம் பெற்றிருந்த அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள், தனது அரசியல் வாழ்க்கையில் பிரதி நீதி அமைச்சராக, பெருந்தோட்டத்துறை அமைச்சராக, நீதி அமைச்சராக, பொது நிர்வாக, உள்@ராட்சி, மாகாண சபைகள் அமைச்சராக, உள்நாட்டலுவல்கள் அமைச்சராக, விவசாய அமைச்சராக, பிரதி பாதுகாப்பு அமைச்சராக, நாடாளுமன்ற அவைத் தலைவராக, பிரதமராக, சிரே~;ட அமைச்சராக என பல்வேறு பதவிகளை வகித்தவர். இலங்கை வரலாற்றில் பதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த பெருமையும் அவரையே சாரும். அந்த அளவுக்கு அவர் நம்பிக்கைப் பெற்ற ஒரு தலைவராகத் திகழ்ந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எமது நாட்டிலே இடம்பெற்றிருந்த பயங்கரவாதப் பிரச்சினைகள் வேறு, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் வேறு என, நாம் ஆரம்பந்தொட்டு வலியுறுத்தி வந்த நிலைப்பாடு தொடர்பில் தெளிவு கொண்டிருந்த அமரர் விக்கிரமநாயக்க அவர்கள், எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் எமது நடைமுறை சாத்தியமான செயற்பாடுகளுக்கு எப்போதும் உதவிகளை வழங்கியவராகவும், அதனை ஊக்கவித்தவராகவுமே செயற்பட்டிருந்தார் என்பதை இந்த சபையிலே கூறிவைக்க விரும்புகின்றேன்.

கிராமத்து புதல்வனாகவே தனது வாழ்க்கையை முன்னெடுத்திருந்த அன்னார், சிங்கள,மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சியினைப் பெற்றிருந்ததுடன், தமிழ் மொழியிலும் புரிந்துக் கொள்ளக்கூடிய ஆற்றலினைக் கொண்டிருந்தார். அந்த வகையில், அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் பண்பு அவரிடம் காணப்பட்டது.

நாடாளுமன்ற ஜனநாயக ரீதியிலான அரசியல் வழிமுறைக்குள் பிரவேசித்திருந்த எமது ஆரம்ப கால கட்டங்களில் எமக்கு உறுதுணையாக இருந்து செயற்பட்ட தென் பகுதி தலைவர்களில் அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்களும் குறிப்பிடத்தக்கவர். அவர் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றிருந்தபோதும், பிரதமராகப் பதவி வகித்தபோதும், அந்தந்த காலப்பகுதிகளில் எமது கோரிக்கைகளுக்கு அமைவாக பல்வேறு உதவிகளை எமது மக்களது நலன் கருதி மேற்கொண்டு, எமக்கு பக்கபலமாக செயற்பட்டிருந்தார்.

இன்று, அன்னாரது சுய நலன் சாராத அந்த அரசியல் பயணத்தை அவரது புதல்வர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் முன்னெடுத்து வருவது போற்றத்தக்கதொரு அம்சமாகும். அந்த வகையில் அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள் விட்டுச் சென்ற அரசியல் இடைவெளியை கௌரவ விதுர விக்கிரமநாயக்க அவர்கள் நிரப்புவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்களது நாமம் நிச்சயமாக, எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானப் பதிவாக காலத்தால் அழியாதிருக்கும் எனத் தெரிவித்துக் கொண்டு, அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது புதல்வரும், அரசியல் வாரிசுமாகிய கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க உட்பட்ட அன்னாரது குடும்பத்தினருடனும், உறவினர்கள், நண்பர்களுடனும், களுத்தறை மாவட்ட மக்கள் உட்பட இந்த நாட்டு மக்களுடனும், சக அரசியல் தலைவர்களுடனும் இணைந்து நானும் துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

களுத்துறை கன்னங்கர பாடசாலை தமிழ்ப் பிரிவின் இன்றைய நிலை கவலைக்கிடமானது - டக்ளஸ் தேவானந்தா சபையில் தெ...
பிரித்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியும் மலையக மக்களின் உழைப்புச் சுரண்டல் நிறுத்தப்படவில்லை – நாட...
வடக்கில் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்வு: பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!