இயற்கை அனர்த்தங்களின்போது மக்கள்மீதும், இயற்கை மீதும் பழிபோடுவது முறையா?சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Friday, June 9th, 2017
எமது நாட்டிலே வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக தென் பகுதி மக்கள் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுத்து, அந்த இழப்புகளிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட 11 மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்ற வரட்சி காரணமாக 2 இலட்சத்து 43, 683 குடும்பங்களைச் சேர்ந்த 8 இலட்சத்து 49, 752 பேர் கடும் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர் என்றும், இதில் மிக அதிகளவிலான பாதிப்புகளுக்கு உட்பட்ட மக்களாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களே காணப்படுகின்றனர் என்றும், அதாவது, இங்கு 1 இலட்சத்து 86,180 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 53,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளதாகவே தெரிய வருகின்றது. எனவே, இம் மக்களது நிலையினை உடனடி அவதானத்திற்கு உட்படுத்தி, அம் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க கௌரவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அண்மைய இயற்கை அனர்த்தம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், எமது நாட்டின் வரலாற்றைப் பாரக்கின்றபோது, கடந்த சுமார் 400 வருட காலத்திற்குள்ளாக பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வருடங்கள் தோறும் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில், 1978ல் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி, 2004ல் கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி, 2011ல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, 2014ல் இடம்பெற்ற மீரியபெத்தை மண்சரிவு, 2016ல் அரநாயக்க, புலத்கொகுபிட்டிய மற்றும் கடுகண்ணாவ பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகள், 2016ல் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை அழிவுகளுக்குப் பின்னர் அண்மையில் எமது நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களே அதிக அழிவுகளை ஏற்படுத்தியுள்ள இயற்கை அனர்த்தங்களாக கருதப்படுகின்றன.
அந்த வகையில், 1975ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் எமது நாட்டில் சுமார் 24 மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் அந்த அனர்த்தங்களின் போது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியிருந்த நிலையில், அதன் பின்னரான காலங்களில் – தற்போது ஏற்படுகின்றன மண்சரிவு அனர்த்தங்களின்போது ஒரே சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருவதையும், தென்மேல் மற்றும் வடகீழ் பருவ கால மழை காரணமாக ஏற்படுகின்ற வெள்ளத்தினால், இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, காலி, திருகோணமலை, பதுளை, பொலனறுவை, மட்டக்களப்பு, மாத்தளை, மொனராகலை போன்ற மாவட்டங்களுடன் வடக்கில் அனைத்து மாவட்டங்களும் வழமையாகப் பாதிக்கப்பட்டு வருவதையும், தென் பகுதியிலே குறிப்பாக, 1999ஆம் ஆண்டிலிருந்து இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் வெள்ளப் பெருக்கு காரணமாக அதிகப் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன என்பதையும,; நாம் அவதானத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு, அது பாரிய அழிவுகளை கொண்டு தருகின்ற நிலையில், இயற்கை அழிவுகளை தடுத்து நிறுத்த முடியாது எனப் பொதுவாக பழி போட்டுவிட்டு, அல்லது, மக்களை அங்கிருந்து வெளியேறச் சொன்னோம், ஆனால் மக்கள் அதைக் கேட்கவில்லை என மக்கள் மீது பழி போட்டுவிட்டு தப்பித்துக் கொள்வதிலேயே பொறுப்பு வாய்ந்த பலரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைக் காலமாக மேற்படி இயற்கை அழிவுகள் தொடர்வதும், அதன் காரணமாகப் பாரிய உயிர்ச் சேதங்கள் உட்பட பல்வேறு அழிவுகள் ஏற்படுவதும் ஏன்? என்பது குறித்து சிந்தித்து, அந்த அழிவுகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் வகையில் நாம் முன்கூட்டியே என்னென்ன செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம் என்பது பற்றி பொறுப்பானவர்கள் சிந்தித்து செயற்படுவது என்பது பலஹீன நிலையிலேயே உள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.அந்த வகையில் பார்க்கின்றபோது, இயற்கை அனர்த்தங்கள் என்று எமது நாட்டில் கூறப்பட்டு வருகின்ற பல அனர்த்தங்கள் இயற்கையின் கொடையினை வைத்து நாம் செயற்கையாக ஏற்படுத்திக் கொள்கின்ற அனர்த்தங்கள் என்றே கூற வேண்டியுள்ளதையும் இங்கு வலியுறுத்த  விரும்புகின்றேன்.
2014ல் மீரியபெத்தை மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டது. இதற்கு தனி மனித செயற்பாடுகளோ அல்லது இயற்கையோ காரணமல்ல. அங்கு மேற்கொள்ளப்படுகின்ற உமா ஒய திட்டத்தின் பிரதிபலனாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக சுற்றாடல் மற்றும் இயற்கைக் கற்கைகளுக்கான மையம் ஆதாரத்துடன் நிரூபித்திருந்ததை இங்கு அவதானத்தில் கொள்ள வேண்டும்.
எமது நாட்டைப் பொறுத்த வரையில் 103 ஆறுகள் உள்ளன. இவற்றில் 10 ஆறுகளே பெரிய ஆறுகளாக உள்ளன. நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்திட்டங்கள் காரணமாக இந்த ஆறுகளில் பெரும்பாலான ஊற்றுக்களில் சிதைவு நிலைகள் காணப்படுவதுடன், அதிகளவிலான மண் அங்கிருந்து வெட்டி எடுக்கப்படுகின்ற நிலையில், இயற்கiயாகவே அந்த ஆறுகளின் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துகின்ற சதுப்பு நிலங்கள் அழிவுக்கு உட்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, நிலத்திற்கு நீர் உறிஞ்சப்படுகின்ற இடங்களில் எல்லாம் பாரிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு களனி கங்கையைச் சூழவும் இதே நிலைமையினைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில் நிலைபேறு அபிவிருத்தி மதிப்பீட்டுத் திட்டங்களின்றி எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் காரணமாக நீர் இயற்கையாகவே கடலுக்கு வடிந்தோடும் பகுதிகள் மறிக்கப்பட்டுள்ளன. மேலும், அதேபோன்று மறிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிய வருகின்றது. இத்தகைய நிலையில், 103 ஆறுகள் பெருக்கெடுக்கின்றபோது, அவற்றின் நீரை வௌ;வேறு பகுதிகளுக்கு திசை திருப்பக் கூடிய வழிவகைகள் போதியளவில் மேற்கொள்ளப்படாத நிலையில், அந்த நீர் கடலுக்கு வடிந்தோடக்கூடிய வழிகளும் அடைக்கப்படுகின்ற நிலையில், எமது நாட்டில் வெள்ள அனர்த்தம் என்பது தவிர்க்க முடியாது ஒன்றாகியுள்ளது என்றே நான் கருதுகின்றேன்.
இதனால், எமது நாட்டுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தேவையில்லை என்று பொருள் படாது. அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றபோது, அது நிலைபேறு அபிவிருத்தியாக இருக்க வேண்டும். இயற்கையின் ஓட்டத்திற்கான வழிகள் தடைப்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளின் ஊடாக அவை மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதையே நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அத்துடன், இந்த ஆறுகளைப் பொறுத்தவரையில், குப்பைகள் மிக அதிகமாகக் கொட்டப்படுகின்றன. அதிகமான மழை வீழ்ச்சி, மண்சரிவுகள், வெள்ளப் பெருக்கு காரணமாக ஆறுகளின் உற்பகுதிகளில் மண் நிறைந்து மேடுகள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக சிறு மழை பெய்தாலே ஆறுகள் பெருக்கெடுக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே, இந்த விடயத்தையும் நாம் அவதானத்தில் கொண்டு, அதற்கான பரிகாரங்கள் காணப்பட வேண்டியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பது ஓர் அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் நிவாரணங்களைச் சேரித்துக் கொண்டும், அதனை பங்கீடு செய்து கொண்டும் இருக்காமல், அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்பதாக அதற்கான தயார் நிலையிலும்,  அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது அதனது தாக்கத்தைக் குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய தகுதியிலும், பாதிக்கப்படுகின்ற மக்கள் விரைவாக தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு உறுதிப்பாடுகளை எடுக்கக்கூடிய நிலையிலும் இருக்க வேண்டும்.அதைவிடுத்து, இத்தகைய ஒரு அனர்த்தம் ஏற்படுமென்று தாங்கள் அறிந்திருக்கவில்லை எனக் கூறுவது முறையாகாது.
அதே நேரம், அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பது மற்றும் அவசர நிலைமைகளின்போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பில் விசேட அபாய பிரிவு ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது. இது வரவேற்கத்தக்கதொரு விடயம். எனினும், அனர்த்த விடயங்கள் தொடர்பில் ஓர் அமைச்சு செயற்படுகின்ற நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படாமல், அதற்குப் புறம்பாக இப்படியொரு பிரிவு அமைக்கப்பபடுவதானது அந்த அமைச்சின் மீதான நம்பகத் தன்மை இன்மையாலா? என்றொரு கேள்வி எமது மக்களிடையே எழுந்துள்ளதையும் இங்கு அவாதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் போன்றதொரு இயற்கை அனர்த்தம் சில மாதங்களுக்கு முன்பதாக அவுஸ்திரேலிய நாட்டில் இடம்பெற்றது. வெள்ளமும், சூறாவளியும் அங்கு அனர்த்தமாக உருவெடுத்திருந்தன. அந்நாட்டு அரசாங்கம், ஊடகங்களை வெகு அற்புதமாகப் பயன்படுத்தியதன் ஊடாக மேற்படி அனர்த்தத்தில் இருவர் மாத்திரமே உயிரிழந்து பலரும் அதிலிருந்து காப்பாற்றப்பட்டிருந்தனர். அதுவும், வெள்ளத்தில் சிக்கிய பெண்ணொருவர் திடீரென ஏற்பட்டுள்ள இரத்த அழுத்தத்தினாலும், இன்னொரு பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை அறிவுரைகளைப் பின்பற்றாத காரணத்தினாலும் உயிரிழந்துள்ளனர்.
எமது நாட்டைவிட வறுமை நிலை கூடிய பங்களாதேஷ; எவ்வாறு அண்மைய மோரா சூறாவளிக்கு முகங்கொடுத்துள்ளது என்பதையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதன்போது சுமார் 7 மனித உயிர்களே பலியானதாக அறிய முடிகின்றது. அந்த நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற முன் ஆயத்தங்கள் காரணமாகவே இவ்வாறு பாரிய உயிர் மற்றும் ஏனைய சேதங்கள் தவிர்க்கப்படுகின்றன.
ஆனால், எமது நாட்டில் அனர்த்தமொன்று ஏற்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளில் சற்றேனும் ஓர் அனர்த்தம் நிகழும் முன்பதாக ஆயத்த நிலை என்ற ரீதியில் மேற்கொள்ளப்படாத நிலையே காணப்படுகின்றது. மேற்படி அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தின்போது மழைவீழ்ச்சி தொடர்பான துல்லியமான எதிர்வு கூறல்களை வெளியிடுவதற்கு பின்பற்றப்பட்டு வருகின்ற முறைகளில் குறைபாடுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறுகின்றது.
மேற்படி தினத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 100 மில்லி மீற்றர் அல்லது 150 மில்லி மீற்றர் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில,; 500 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. ஆக, மழை வீழ்ச்சியைக் கூட துல்லியமாக அளவிடுவதற்கான முறைமை எமது நாட்டில் இதுவரையில் இல்லை என்பது துரதிஷ;டவசமான நிலைமையாகும்.
பிரதேசங்கள் ரீதியாக 3 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை மழை வீழ்ச்சியை அளவிடுவது வழக்கமென்றுக் கூறப்படுகின்றது. இவ்வாறு பிரதேச ரீதியாக அளவிடப்படும் மழைவீழ்ச்சி குறித்த தகவல்கள் தலைமையகத்துக்கு வருவதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு, காலம் காலமாக அனர்த்தங்களின்போது ஒவ்வொரு காரணங்கள் கூறப்படுகின்றனவே தவிர, அவற்றை நிவர்த்திக்கும் நோக்கில் எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.எமது நாட்டில் இத்தகைய அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது, ஒன்று இயற்கையின் மீது பழியை போடுவது. மற்றது மககள் மீது பழியை போடுவது என்பதுவே வழக்கமாகியுள்ளது.
கொஸ்லந்த – மீரியபெத்த மண்சரிவின்போதும், அரநாயக்க மண்சரிவின்போதும், ஏன் அண்மைக்கால அனர்த்தங்களின்போதும் மக்கள் மீது குற்றஞ்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதை நாம் கண்டிருந்தோம்.அதாவது, அபாய இடங்களிலிருந்து மக்களை வெளியேறச் சொன்னோம். ஆனால், மக்கள் வெளியேறவில்லை என்ற குற்றச்சாட்டு.
அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுப்பதைப் போன்றே, அனர்த்தம் ஏற்படவுள்ள பகுதிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றுவதும் அரசாங்கத்தின் கடமையாகும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். அனர்த்தங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆனால், மக்கள் வெளியேறவில்லை என்றால், அதற்குக் காரணம் மக்களல்ல. ஒரு பகுதியில் அனர்த்தம் ஏற்படுகின்றது என்றால் அங்கிருந்து வெளிNறுகின்ற மக்கள் எங்கு செல்வார்கள்? அவர்களது வாழ்விடங்களுக்கான உறுதிகள் என்ன?  என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். இடப் பெயர்வுகள் குறித்த மிகவும் வேதனைமிக்க அனுபவங்களுக்கு இந்த நாட்டில் நாமே அதிகளவில் முகங்கொடுத்துள்ள மக்கள் என்பதால் அந்த வேதனைகளை என்னால் நன்றாகவே உணர முடியும்.
இதுவரையில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய இழப்பீடுகள் இதுவரையில் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா? வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு, அத் திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா? 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என கிழக்கு மாகாணத்திலே நுரைச்சோலை பகுதியில் அமைக்கப்பட்ட வீடுகள்கூட இதுவரையில் பயனாளிகளுக்கு வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது.
எனவே, நான் இங்கு முன்வைத்துள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் அனைத்துமே இன்று எமது மக்கள் முன்பாக எழுந்திருக்கும் கேள்விகளாகும் என்பதை இங்கு தெரிவித்து, அந்த வகையில் எமது நாட்டில் எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலான திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயற்படுத்த இந்த அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு,
குறிப்பாக எமது அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அனுர பிரியதர்சன யாப்பா அவர்கள், கடந்த 24ஆம் திகதி மெக்சிக்கோவில் நடைபெற்ற அனர்த்தங்களைத் தடுப்பது தொடர்பான மாநாட்டில் ‘இயற்கை அனர்த்தமொன்றின்போது உட்கட்டமைப்புச் சேதங்களைக் குறைத்து, பொருளாதார அழிவுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது’ என்ற தொனிப்பொருளில் உரையாற்றிருப்பதாக அறிய முடிகின்றது. அவரது அந்த உரையில் காணப்படக்கூடிய விடயங்களையும் செயற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


கைத்தொழிற்துறை ஊக்குவிப்பு தொடர்பில் பல முன்மொழிவுகள் : ஆரோக்கியமான நிலை  என்றே கருதுகின்றேன் -  டக்...
கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம் – முல்லைத்தீவில் டக்ளஸ் எம்.பி த...
வடக்கு விவசாயிகளுக்கு விதை உருளைக் கிழங்கு வழங்க நிதி ஒதுக்கீடு - அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு ஜனா...