தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழர் தரப்புக்களை ஒன்றிணைப்பேன் – நாடாளு மன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 19th, 2018

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இனி வரும் காலத்தில் தமிழர் தரப்பில் இருந்து தவறுகள் ஏதும் நடக்காது என்றே நான் நம்புகிறேன். இது குறித்து நான் விரைவில் தமிழர் தரப்பில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் ஒன்று பட்ட உடன்பாட்டுக்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுக்க தீர்மானித்திருக்கிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் இறுதி வரைவு தொடர்பான விவாதத்தில் இன்றையதினம் கலந்துகொண்ட உரையாற்றுiகியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் –

அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பால், தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை என்ற பொது உடன்பாடில்  அனைத்து தமிழ் கட்சி தலைமைகளோடும் நான் பேசவும் தயாராக இருக்கின்றேன். இலங்கைத்தீவின் இறைமைக்கு எதிராக நான் எதையும் கேட்கவில்லை. ஆனாலும்,.. அந்த இறைமைகள் தமிழ் பேசும் மக்களுக்கும் பகிரப்பட வேண்டும் என்பதையே  நான் கேட்கிறேன்.

பகிரப்படும் இறைமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதையும், அதில் மத்திய அரசின் தலையீடுகள் தவிக்கப்பட வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

மத்தியில் கூட்டாட்சி!  மாநிலத்தில் சுயாட்சி!! இதுவே எங்கள் அரசியல் கோட்பாடு. அதை அடைவதற்கு நாம் தெரிவு செய்திருக்கும் வழிமுறை என்பது உங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ஒன்றாகும்.

13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல் படுத்தி, அதை மேலும் பலப்படுத்தி அதிலிருந்து முன்னோக்கி செல்வதே எமது விருப்பமாகும். இதுவே நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறையும் ஆகும். நான் கூறும் இந்த வழிமுறை ஊடாக இலங்கை தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் திசை நோக்கி நாம் செல்ல முடியும். தமிழர் தரப்பில் இருந்து இன்று உரிமைக்கு குரல் கொடுக்கும் நாம் அரசின் உறவுக்கு கரம் கொடுக்கவும் தயாராகவே இருக்கின்றோம்.இது வரலாறு எமக்கு கற்றுததந்த பாடங்கள். இந்த அணுகு முறை அடுத்து வரும் சந்ததிக்கு தெரியாமல் போகலாம்.

ஆகவே,., வரலாற்று அனுபங்களின் ஊடாக நாம் எடுத்திருக்கும் எமது நிலைப்பாடு எமது காலத்திலேயே வெற்றியாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இனி வரும் தமிழ் பேசும் சந்ததி போதிய அனுபவமின்றி வேறு விதமாக சிந்திக்கும். மறுபடியும் எமது மண்ணில் இனக்குரோதங்களுக்கும் இன முரண்பாடுகளுக்கும் வித்திட்டு விடும்.

நீண்ட நெடிய அனுபவம் மிக்க எமது காலத்திலேயே இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு சுலபமாக தீர்வு காணும் வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டும்.

தென்னிலங்கை அரசியல் தலைமைகளோ அன்றி தமிழ் பேசும் அரசியல் தலைமைகளோ இந்த தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை அடுத்த சந்ததிக்கு சுமத்திவிட்டு சென்று விடுவது மாபெரும் வராலற்று தவறாகும். இந்த தலைமுறையிலேயே நாம் அனைவரும் ஒன்று பட்டு தீர்வு காண வேண்டும்.  சமாதானப்புறாக்களை கையிலேந்தி நாம் வந்தவர்கள். எங்கள் கைளில் உரிமைகளை தந்து கைகுலுக்கி கொள்ளுங்கள்.

Related posts: