இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புக்களை தடுக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள் வலுவானவையாக இருக்கவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 1st, 2016

இயற்கை அனர்த்தங்களின்போது ஏற்படுகின்ற பல்வேறு இழப்புகளைத் தடுக்கும் வகையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலுவுள்ளதாகஎடுக்க முன்வர வேண்டும் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் எனது கருத்துக்களை முன்வைது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

எமது நாட்டைப் பொறுத்த வரையில் கடந்த சுமார் 400 வருட காலகட்டத்தை எடுத்துப் பார்க்கும் போது, பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த அனர்த்தங்கள் யாவும், கால கட்டங்களின் வரிசைப் படியும், இடங்கள் சார்ந்தும், பருவகால வேறுபாடுகளின் அடிப்படையிலும் நிகழ்ந்துள்ளன. இவற்றுக்கான காரணங்கள் பலவாக இருக்கின்றன.

இவ்வாறான அனர்த்தங்களில், 1978ம் வருடம் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி, 2004ல் எமது நாட்டுக் கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி,  2011ல் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மிக அண்மைக் காலத்தில் ஏற்பட்ட அரநாயக்க, புலத்கொகுபிட்டிய மற்றும் கடுகண்ணாவ, மீரியபெத்த பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகள், கடந்த மே மாதம் கொழும்பு, கம்பஹா, புத்தளம் உட்பட வடக்கு பகுதிகளிலும் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள், அவிஸ்ஸாவலை சாலாவ பகுதியில் ஏற்பட்ட இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு என்பன எமது மக்கள் மத்தியில் நீங்கா நிலையில் இருந்து வருகின்றன.

இவ்வாறு எமது நாட்டில் ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தங்கள் பல்வேறு விதமான இழப்புகளையும், கேள்விகளையும் ஏற்படுத்துவதுடன், அவை பலத்த சவால்களையும் எதிர்நோக்கச் கெய்கின்றன என்றே கூறவேண்டும்.

இலங்கையில் காணப்படுகின்ற 103 ஆறுகளில் 10 ஆறுகள் பெரிய ஆறுகளாகக் காணப்படுகின்றன. இந்த பெரிய ஆறுகளைப் பொறுத்தவரையில், களனி கங்கை, ஜின் கங்கை, களு கங்கை, நில்வலா கங்கை மற்றும் மகாவலி கங்கை போன்ற ஆறுகளால் வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், இலங்கையில் அதிகரித்து வருகின்ற சனத்தொகைக்கு ஏற்ற வகையில் மக்கள் வாழக்கூடிய தகுந்த சூழல்கள் இனங்காணப்பட வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறான சூழல்கள் கிட்டாத நிலையில், மக்கள் எங்கேனும் கிடைக்கின்ற இடங்களில் வாழச் செல்கின்ற நிலையிலேயே ஆற்றுக் கரைகளிலும் தங்களுக்கான இருப்பிடங்களையும், தொழில் தளங்களையும் அமைத்துக் கொள்கின்றனர்.

இலங்கையில் ஏற்படுகின்ற தென்மேல் மற்றும் வடகீழ் பருவ கால மழை வீழ்ச்சி காரணமாக ஏற்படும் வெள்ளத்தினால், இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, காலி, அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களும், வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் இலங்கையில் பாதிப்பினை உண்டு பண்ணுகின்ற இன்னுமொரு பிரதான அனர்த்தக் காரணியாக இருப்பது மண்சரிவுகளாகும். மலைப் பகுதிகளில் திட்டமிடாத குடியிருப்புகள், கட்டட நிர்மாணங்கள், பயிர்ச் செய்கைகள் என்பன மேற்கொள்ளப்படுவதால் இவையும் இந்த மண்சரிவுகளுக்குக் காரணமாகி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

பொதுவாக மத்திய, சப்பிரகமுவ மற்றும் தென்மேற்கு மாகாணங்களில் இந்த மண்சரிவு அனர்த்தங்களைக் காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில். பதுளை, நுவரெலியா, காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகாலை போன்ற மாவட்டங்கள் அதிகமாக இந்த மண்சரிவுக்கு உட்படுகின்ற மாவட்டங்களாகக் காணப்படுகின்றன.

எனவே, இவ்வாறான இயற்கை அனர்த்தங்களின்போது ஏற்படுகின்ற பல்வேறு இழப்புகளைத் தடுக்கும் வகையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலுவுள்ளதாகவே எடுக்க முன்வர வேண்டும்.

குறிப்பாக, இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான அறிவித்தல்களை விடுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல், முன்கூட்டியே அவ்வாறான இடங்கள் இனங்காணப்படுகின்றபோது, இயன்றவரையில் அவற்றைத் தடுப்பதற்கோ அல்லது அவற்றிலிருந்து மக்களை – சொத்துக்களைக் காப்பாற்றுவதற்கோ முன்வர வேண்டியது அவசியமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டுமே ஒழிய வெள்ளம் வந்த பின் அணை கட்டுவதால் எவ்விதப் பயனும் இல்லை என்பதையே இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

எனவே, இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து மக்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதில் அதிகாரிகள் மிக முக்கிய பங்கு வகிப்பது அவசியமாகின்ற அதே நேரம் இவர்களுக்கான வசதிகளை இந்த அமைச்சுச் செய்து கொடுக்க வேண்டும்.

ஏனெனில், கடந்த காலங்களில் ஏற்பட்ட பல இயற்கை அனர்த்தங்களின்போது அவற்றுக்கு அதிகாரிகளே காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம் என்பதையும் நாங்கள் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதாவது, மக்களுக்கு உரிய நேரத்தில் சரியான தகவல்களை அதிகாரிகளால் வழங்கப்படவில்லை என்பதே பெரும்பாலான மக்களது குற்றச் சாட்டுகளாக இருந்தன.

குறிப்பாக, ஒவ்வொரு வருடங்களிலும் வடக்கில் – யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக மழை காரணமாக வெள்ள அபாயங்கள் தோன்றுவது வழக்கம். இவ்வாறான காலங்களில் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருப்பதைவிட, இந்த அனர்த்தம் தொடர்ந்தும் ஏற்படுகின்ற நிலையில், குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களே பாதிக்குப்படுகின்ற நிலையில், முன்கூட்டியே சில நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதனை மேற்கொள்ளாமல், தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்கிவிட்டுச் செல்லவே அனைத்து அரசுகளும் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன.இது போல்தான் ஏனைய அனைத்துத் திட்டங்களும் இருக்கின்றனவா? என சந்தேகிக்க வேண்டி ஏற்படுவதும் இயல்பானது என எண்ணுகிறேன்.

Untitled-4 copy

Related posts:

வடக்கின் அபிவிருத்தி குறித்து என்னிடம் கேள்வி கேட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவருக்கும் அருகத...
வலி வடக்கு மீள்குடியேற்றப்பட்ட பகுதி மக்களின் நிலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா களஆய்வு!
அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – டக்ளஸ்...