வடக்கின் அபிவிருத்தி குறித்து என்னிடம் கேள்வி கேட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவருக்கும் அருகதை கிடையாது – டக்ளஸ் தேவானந்தா

Friday, April 22nd, 2016
வடக்கின் அபிவிருத்தி குறித்தும் தமிழ் மக்களது வாழ்வாதார மேம்பாடுகள் குறித்தும் பேசுவதற்கான தகுதி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவருக்கும் கிடையாது. அத்துடன் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே நாம் இணக்க அரசியலை நடத்தினோமே தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பினர் போன்று தனிநபர் பெருமைக்காகவும் பதவிகளை எடுத்துக்கொள்வதற்காகவும் இணக்க அரசியலை நடத்தவில்லை. இதுதான் எமது இணக்க அரசியலுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரது இணக்க அரசியலுக்கும் இடையிலான வேறுபாடு – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அண்மையில் வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலப்பகுதியில் வடமாகாணத்தில் எத்தகைய செயற்பாடுகளை செய்திருந்தார் என கேள்வியெழுப்பியிருந்தார். அவரது கேள்வி தொடர்பாக ஊடகங்களுக்கு பதிலளிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது –
வடக்கின் அபிவிருத்தி குறித்து என்னிடம்; கேள்வி எழுப்புவதற்கு அவருக்குத் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பது கேள்விக்குறியான விடயம். ஆனால், எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அமைச்சராகவோ அல்லது அரசியல் பதவிகளில் இருந்தபோது எங்களது அரசியல் பலத்திற்கு ஏற்ற வகையில் முடிந்தளவிற்கு பல விடயங்களை நாம் செய்து காட்டியிருக்கின்றோம்.
வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக நாம் பெரிய பட்டியலையே போடலாம். அதாவது நித்திரை கொள்பவனை எழுப்ப முடியும் ஆனால் நித்திரை கொள்வது போல நடிப்பவனை எழுப்ப முடியாது. அந்த வகையில் அவர்கள் தங்களுடைய பலவீனங்களை, குறைபாடுகளை, செயலற்ற தனங்களை மூடி மறைப்பதற்காக அவர்கள் இவ்வாறான கதைகளை வெளியிடுகின்றனர்.
மேலும் தமிழ் மக்களுக்கு இந்தியாவிலிருந்து 50,000 வீட்டுத்திட்டத்தைக் கொண்டு வந்ததும் வடமாகாணத்திற்கு புகையிரதத்தைக் கொண்டு வந்ததும் 1978ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழக சமூகத்தால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுவந்த பொறியியல் பீடத்தை 2013ஆம் ஆண்டு கிளிநொச்சி அறிவியல் நகரில் உருவாக்கிக்கொடுத்தது யார்? அத்துடன்  பெருந்தெருக்கள் செப்பனிட்டது குடாநாடு முழுவதும் 24 மணிநேர மின்சார சேவைகளை வழங்கியது குடாநாட்டின் அதிகளவான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கியது என எமது பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.
அத்துடன் நாங்கள் மக்களது பிரச்சினைகளை தீர்த்துவைக்கவே இணக்க அரசியலை நடத்தி வருகின்றோம். தவிர, தனிநபர் பெருமைக்காகவும் பதவியை எடுத்துக் கொள்வதற்காகவும் நாங்கள் இணக்க அரசியலை நடத்தவில்லை. இதுதான் எமது இணக்க அரசியலுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரது இணக்க அரசியலுக்கும் இடையிலான வேறுபாடு.
மேலும் வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படும்  இடத்தினை வவுனியாவில் அமைப்பதென ஒருசாராரும், ஓமந்தையில் அமைப்பதென ஒருசாராரும் கூறிவரும் நிலையில் உங்களது நிலைப்பாடு உள்ளது என கேட்டதற்கு – பொருளாதார மத்திய நிலையம் அமைப்படும்போது அதற்குப் பொருத்தமான மத்திய இடமாக அது இருக்கவேண்டும். அந்தவகையில் அதற்கு மையமாக இருப்பது ஓமந்தையாகத்தான் இருக்கின்றது. ஓமந்தையில் அதற்குரிய வாய்ப்புகள் இருக்குமானால் அங்கு ஆரம்பிப்பதனூடாகத்தான் அதை வடமாகாணத்திற்கு ஒரு மத்திய நிலையமாக அமைக்க முடியும். அதைத் தனியொரு தரப்பினர் மாத்திரம் தீர்மானிக்காது சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானிப்பதுதான் பொருத்தமாகும்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் வாய்ப்புகள் கிடைக்கின்ற போது அதைத் தட்டிக்கழிப்பதும், பின்பு அந்த வாய்ப்புகளை இழந்த நிலையில், அரசுகள் ஏமாற்றிவிட்டது என்று கதைப்பதும்தான் அவர்களது வழமை. இதில் அப்படியான நிலைமை வந்துவிடக்கூடாது.65,000 வீட்டுத்திட்டத்தில் கூட அதே நிலைமைதான் தோன்றுகின்றது. அது போல இரணைமடுக் குடிநீரை கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கும் யாழ். மாவட்ட மக்களுக்கும் பங்கிடுவதற்காக கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு விவசாயத்திற்கும் அவர்களது பாவனைக்கும்; தேவையான நீரைக் கொடுத்து, எஞ்சிய நீரை யாழ். மாவட்ட மக்களுக்குக் கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாம் இவர்களது சுயலாப அரசியலால் அடிபட்டுப் போய்விட்டது.
அப்படியான நிலைமை இந்தப் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதிலும் ஏற்பட்டுவிடக் கூடாது. ஆகையால், பிரதமர் அவர்கள் சம்பந்தப்பட்ட சகலரையும் அழைத்துக் கலந்துரையாடி ஒரு பொது இணக்கப்பட்டிற்கு வருவதுதான் சரியாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன் என தெரிவித்தார்.

Related posts:


அனுமதியளிக்கப்பட்ட மீன்பிடித் தொழிலை எவரும் தடுக்கமுடியாது : விரைவில் உரிய நடவடிக்கை - செயலாளர் நாயக...
வீழ்ச்சியடைந்துவரும் தமிழ்த் தேசியம் பேசும் சுயலாப அரசியல்வாதிகளின் நிலையை எவராலும் இனித் தூக்கி நிற...
மக்கள் தமது நலன்களுக்காகவே என்னை தொடர்ச்சியாக நாடாளுமன்றம் அனுப்பி வருகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் சுட...