இனங்களுக்கிடையிலான பகைமைகள் இல்லா தொழிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

எமது நாட்டில் இனங்களுக்கு இடையிலான பகைமைகள் இல்லாதொழிக்கப்பட்டு அனைத்து மக்களும் ஒரு புரிந்துணர்வுடன் நிரந்தர அரசியல் தீர்வு பெற்று வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதனை முன்னிறுத்தியே நாம் எமது அரசியல் பணிகளை மேற்கொண்டு பல வெற்றிகளை கண்டிருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச வட்டார நிர்வாக உறுப்பினர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
தமிழ் மக்கள் தாம் இலங்கையர்களாகவும், தமிழர்களாக இருப்பதற்கான உணர்வுகளுடன் இருந்ததை முன்னாள் தமிழ்த் தலைவர்களும், சிங்களத் தலைவர்களும் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளாததன் விளைவாகவே எமது நாடு அழிவுயுத்தத்தை சந்திக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தோடு நாம் தேசிய அரசியல் நீரோட்டத்திற்கு வந்தபோது, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கி முன்னேற முடியும் என்று நம்பினோம். அதையே எமது மக்களிடம் எடுத்துச்சொல்லி வந்துள்ளோம்.
கடந்தகாலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற குறைந்த அரசியல்ப் பலத்தனூடாக மக்கள் நலன்சார்ந்த பல திட்டங்களை முன்னெடுத்து சாதித்துக் காட்டியுள்ளோம்.
அந்தவகையில் மக்கள் எமது கட்சி மீது வைத்துள்ள நம்பிக்கை ஒருபோதும் வீண்போகமாட்டாது எனக் கூறிய டக்ளஸ் தேவானந்தா எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்பதே எமது நோக்காகும் என்றும் தெரிவித்தார்.
தேசியம்பேசிய தமிழ்த் தேசியவாதிகளின் கைகளில் வடக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வடமாகாணத்தின் கல்வி நிலை பாரிய விழ்ச்சி கண்டிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே எதிர்காலத்தில் கடந்தகால அனுபவங்களை படிப்பினையாக கொண்டு மக்கள் தமக்கான அரசியல் தலைமைகளை தெரிவுசெய்வதனூடாகவே கல்வி விளையாட்டு சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றங்களைக் காணமுடியும் என்றும் தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிகாமம் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் வலிகாமம் மேற்கு நிர்வாக செயலாளர் செல்வக்குமார், வலிகாமம் தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்டன்ஜோண்சன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|