ஆயுதமேந்திய போராட்டத்தின் வெற்றியே மாகாணசபை முறைமை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, August 24th, 2018

இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முற்பட்ட காலமானது இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்கள அரசுகளே இந்த நாட்டை ஆட்சி செய்ததான ஓர் உணர்வே எமக்குள் ஏற்பட்டிருந்தன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டிருந்த பாரபட்சங்கள், ஏமாற்றுதல்கள், புறக்கணிப்புகள், உதாசீன நிலைமைகள் அடிக்கடி திட்டமிடப்பட்ட இனக்கலவரங்கள் என்பன எல்லாம் சேர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையினை தென்பகுதி அரசுகள் தொடர்பில் எமக்குள் ஏற்படுத்தி, இத்தகையதொரு உணர்வினை எமக்குள் வளர்த்திருந்தன.

அத்துடன், தமிழ்த் தரப்பு சுயலாப அரசியல் தலைமைகளின் நடைமுறை சாத்தியமற்ற போக்குகளும், வாய்ப்புகளைத் தவறவிட்ட தவறுகளும், இனவாதத்தினை சமூகத்தில் நிறுவனமயப்படுத்திய உண்ச்சிகளையூட்டும் பேச்சுகளும், அந்த உணர்ச்சிகளிலேயே குளிர்காய்கின்ற அரசியல் நிலைப்பாடுகளும் காரணமாகவும், தேவை ஏற்பட்டிருந்த நிலையில், நாம் ஆயுதம் ஏந்திய ஒரு போராட்டத்தினை நோக்கி நகர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த ஆயுதப் போராட்டத்தை வன்முறைப் போராட்டமாக நாம் ஆரம்பித்திருக்கவில்லை. அதனை இந்த நாட்டு மக்களின் உரிமைப் போராட்டமாகவே முன்னெடுக்க நாம் விரும்பியிருந்தோம். அதற்கென நாம் எதிர்பார்த்திருந்த சிங்கள மற்றும் முஸ்லிம் முற்போக்கு சக்திகளின் ஒத்துழைப்புகள் கிடைக்காத நிலையில், எமக்கு கிடைத்திருந்த ஒரு சில சிங்கள மற்றும் முஸ்லிம் சகோதர மக்களின் உதவிகளுடன் நாம் அந்தப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.

எமது இந்தப் போராட்டத்தின் நோக்கங்களை சகோதர சிங்கள மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டிலிருந்து, சிங்கள மொழி மூலமான ஊடகங்களையும் உருவாக்கி நாம் செயற்பட்டு வந்திருந்தோம்.

இத்தகைய ஆயுதப் போராட்டத்தில் நேரடி பங்களிப்புகளை வழங்கியிருந்த நாம், அந்தப் போராட்டத்தின் பிரதிபலனாகக் கிடைத்த – இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழான, எமது அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் மூலமான – மாகாண சபை முறைமையினை ஏற்று நாம் அந்த ஆயுதப் போராட்டத்தினைக் கைவிட்டு, தேசிய அரசியல் நீரோட்டத்திற்குள் பிரவேசம் கொண்டோம்.

நாம் அன்று எடுத்திருந்த இந்த கொள்கை ரீதியிலான முடிவினை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏனைய தரப்பினரும் அன்றே எடுத்திருந்தால், உரிமைப் போராட்டமாக ஆரம்பித்திருந்த எமது போராட்டமானது ஒரு வன்முறைப் போராட்டமாக மாறி இருக்காது, எமது மக்களில் பாரியளவிலானோர் அழிந்திருக்கவும் மாட்டார்கள். இந்த நாட்டில் பாரிய அழிவுகளும் ஏற்பட்டிருக்காது எனப்தை நான் தொடர்ந்தும் கூறி வருகின்றேன்.

அந்த வகையில், இந்த மாகாண சபை முறைமையானது எமது ஆயுதமேந்தியப் போராட்டத்தின் வெற்றியாகவே கிடைத்தது என்பதையும், இது வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்விற்காகக் கிடைத்த ஒரு முறைமை என்பதையும், இந்த முறைமைக்கு நாட்டு மக்களிடையே – பெரும்பான்மை மக்களிடையே எதிர்ப்புகள் கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் சேர்த்தே இது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

நாடாளுமன்றில் நடைபெற்ற மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகள் நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

காணிகள் விடுவிப்பு - எழுத்தளவில் - பேச்சளவில் மாத்திரம் இருப்பதில் பயனில்லை! எமது மக்கள் குடியேற ஏ...
ஊழலில் முன்னேற்றம்: வளர்ச்சில் வீழ்ச்சி - இதுவே நாட்டின் இன்றைய நிலை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்துகொடுத்த அமைச்சர் டக்...

அதிகளவு அரச ஊழியர்கள் இருந்தும் மக்களது தேவைகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
அரசியல் சுயலாபத்திற்காக நாம் ஒருபோதும் மக்களை தவறாக வழிநடத்தியது கிடையாது  - வவுனியாவில் டக்ளஸ் தேவா...
வாய்ப்புக்களை பயன்படுத்தியிருந்தால் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருப்போம்: அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!