அரசாங்க ஊழியர்களின் இடமாற்றத்தின்போது அவர்களது குடும்ப நிலைமைகள் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 26th, 2016

அரச ஊழியர்களது இடமாற்றங்களின்போது அவர்கள் முகங்கொடுக்கின்ற ஒரு முக்கியப்  பிரச்சினை – அவர்களது குடும்பங்களை இடமாற்றம் பெறுகின்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது எற்படுகின்றது. பிள்ளைகளின் பாடசாலை வசதிகள் உட்பட பல பிரச்சினைகளுக்கு இவர்கள் முகங்கொடுக்கின்றனர். இது தொடர்பிலும் அதிக அவதானம் எடுக்க வேண்டும் என்று  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் அரச பணிகளுக்கான வெற்றிடங்கள் பல இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்கள் பல இன்னும் நிரப்பப்படாத நிலையில் உள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலே சுமார் 75 கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்களும் கிளிநொச்சி மாவட்டத்திலே 20 வெற்றிடங்களும் முல்லைதீவு மாவட்டத்திலே 48 வெற்றிடங்களும் காணப்படுகின்றன. அண்மையில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிகின்றேன். அதனை விரைவு படுத்த வேண்டும் என்றும்  மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களிலும் முக்கியமான வெற்றிடங்கள் பல நிரப்பப்படாத நிலையே காணப்படுகின்றன.

அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் சுமார் 60 பொது முகாமைத்துவ சேவை உதவியாளர்களுக்கான வெற்றிடங்களும் சுமார் 30 சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களும் சுமார் 20 சாரதிகளுக்கான வெற்றிடங்களும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் காணி தொடர்பிலான மேலதிக அரச அதிபர் திட்ட உதவிப் பணிப்பாளர் நிர்வாக உத்தியோகத்தர்கள் (5) அபிவிருத்தி இணைப்பாளர்கள் (4) மக்கள் முகாமைத்துவ உதவியாளர்கள் (32) போன்ற வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

முல்லைதீவு மாவட்டத்திலே இலங்கை நிர்வாகச் சேவைக்கான 5 வெற்றிடங்களும் திட்டமிடல் சேவைக்கான 7 வெற்றிடங்களும் முகாமைத்துவ உதவியாளர் சேவையில் 64 வெற்றிடங்களும் சாரதிகளுக்கான 3 வெற்றிடங்களும் அலுவலக பணிகள் சேவையில் 5 வெற்றிடங்களும் காணப்படுகின்றன.

எனவே இந்த வெற்றிடங்களையும் விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.  அதே நேரம் பிரதேச செயலகங்களில் தற்போதைய அதிகரித்து வரும் ஆளணித் தேவைகளுக்கேற்ப கட்டிட வசதிகள் போதியதாக இல்லை என்பதால் அவற்றை விஸ்தரிக்க வேண்டியுள்ளன.

அதே போன்று வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கடந்த காலத்தில் பிரதேச செயலகங்களுக்கான புதிய கட்டிடங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றில் மாநாட்டு மண்டபங்கள் அமையப் பெற்றுள்ள போதிலும் அந்த மாநாட்டு மண்டபங்களுக்குத் தேவையான தளபாடங்கள் மற்றும் ஒலி அமைப்புத் தொகுதிகள் போதியளவு காணப்படாத நிலையே உள்ளது. எனவே இவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் முக்கியமாக யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் கஸ்டப் பகுதிகளாகக் காணப்படுகின்ற தீவுப் பகுதிகளுக்கு கடமை நிமித்தம் செல்கின்ற அரச அதிகாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆட்படுகின்ற நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களது தேவைகள் கருதியும் தற்போது நெடுந்தீவுக்கு கடமைகள் நிமித்தம் செல்லும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்ற 2000. 00 ரூபா போக்குவரத்து கொடுப்பனவினை 5000.00 ரூபாவாக உயர்த்துவதற்கும்

அதே நேரம் நயினாதீவு அனலைதீவு மற்றும் எழுவைத்தீவு போன்ற கஸ்டப்பகுதிகளுக்கு கடமைகள் நிமித்தம் செல்லும் அரச அதிகாரிகளுக்கு தற்போது எந்தவொரு கொடுப்பனவுகளும் வழங்கப்படாத நிலையில இவர்களுக்கு குறைந்தபட்சம் மாதாந்தம் 3000.00 ரூபா கொடுப்பனவினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து உதவும்படியும் அரச அதிகாரிகள் இவ்வாறான கஸ்டப் பகுதிகளில் சிறிது காலமாவது தங்களது கடமைகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படியும் கௌரவ அமைச்சரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் ஏற்கனவே சில ஏற்பாடுகள் இருந்ததைப் போன்று நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் விவசாய அபிவிருத்தி ஆராய்ச்சியாளர் சமுர்த்தி உத்தியோகஸ்தர் பெண் சுகாதார அதிகாரி போன்றோர் ஒரே இடத்தில் – ஒரே கூரையின் கீழ் இருந்து சேவையாற்றத்தக்க வகையில் கிராம செயலகங்களை அமைப்பதற்கும்

அதே நேரம் நாடளாவிய ரீதியில் தற்போது 2010ம் ஆண்டு வரையில் கணினிமயப்படுத்தப் பட்டுள்ள பொது மக்களது பிறப்பு இறப்பு திருமண சான்றிதழ்கள் போன்ற அனைத்து தரவுகளையும் அன்றாடம் கணினிமயப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

0004

Related posts:

நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
வாக்குப்பலத்தை கொண்டு வளமான எதிர்காலத்தை உருவாக்குங்கள் - உடையார்கட்டில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
நீர்வேளாண்மை திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் நக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் அமைச்சர் ...

ஈ.பி.டி.பி. இணைந்துள்ள ஆட்சியில் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது: திருமலை மக்கள் முன்னிலையில் அமைச்...
மாகாண சபைகளுக்கு மேலும் வலுச் சேர்க்க வேண்டும் - அரசியலமைப்பு நிபுணர் குழுவிற்கு ஈ.பி.டி.பி பரிந்துர...
மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்...