அமைச்சர் டக்ளஸ் சிறந்த ஒரு தலைவர் – தற்போது இருக்கும் அமைச்சர்களில் அவரே நல்ல அனுபவமும், ஆற்றலும் கொண்டவர் – வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை பாராட்டு!

Monday, September 12th, 2022

நடைமுறைக்கு சாத்தியமாக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தினை நழுவ விடாமல் செய்யக்கூடியவற்றை செய்வோம் என்று தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்று கொண்டிருக்கிறார் என பாராட்டி புகழ்ந்துள்ள வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை  டக்ளஸ் தேவானந்தா தான் மாகாண சபையை விடக்கூடாதென்றும் மாகாண சபையினை வளர்த்தெடுப்போம் எனவும் பல வருடங்களுக்கு முன்னரிருந்து வலியுறுத்தியும் வருகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

டக்ளஸ் தேவானந்தா நடைமுறைச் சாத்தியமாக தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தையும் சரியாக பயன்படுத்திக்கொண்டு செய்யக்கூடியவற்றை செய்துகொண்டு இருக்கிறார். அவர் அரசியலை தனியாக செய்கிறார்.

காலை எழும்பி கடலை சாப்பிட்டு ரெலிபோனை புடிச்சுக்கொண்டு மாலையாகும் மட்டும் இதனைத்தான் அவர் நாளாந்தம் நேரடியாக செய்துகொண்டிருக்கிறார். ஆனால் மற்றவர்களுக்கு பல வேலைகளில் இது ஒரு வேலையாக மட்டுமே இருக்கிறது.

தற்போது இருக்கும் அமைச்சர்களில் டக்ளஸ் தேவானந்தா, நல்ல அனுபவமும், ஆற்றலும் கொண்டவராக இருந்த போதிலும், அவர் செய்யக்கூடியவற்றை செய்வோம் என இருக்கிறார்.

அவர் யார் பிரச்சினைகளோடு சென்றாலும் அதனை செய்துகொடுப்பார். உதாரணமாக எங்களது கிளிநொச்சி பல்கலைக்கழகத்தினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கி 3 பீடங்கள் கட்டி இருக்கிறோம் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.

யுத்தம் இடம்பெற்று இன்று 11 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ”ஆறின கஞ்சி பழங்கஞ்சி போல” எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்று நான் நினைக்கவில்லை.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புது வாழ்வு கொடுக்க வேண்டும், எங்களை நாங்களே ஆட்சி செய்யக்கூடிய பிரதிநிதிகளையும், முதல்வரையும் கொண்டு இயங்க வேண்டும்.

13 ஆவது திருத்தத்தின் படி எங்களுக்கு கிடைத்த உள்ளக சுயாட்சியில் கிடைத்த மாகாண கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், இலங்கையை மீளவும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு மேற்கு நாடுகளிடம் சிறிய மரியாதை ஒன்று இருக்கிறது. என்னவெனில் நல்லதொரு வேலைப்படை. அந்தந்த நாடுகளை கட்டி வளர்ப்பதில் மிகப்பெரிய பங்கு உள்ளது.

இங்கிலாந்தில் இலங்கைத் தமிழர்கள் வைத்தியத்துறையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள், கனடா நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதில் இலங்கைத்தமிழர் மிகச்சிறந்த பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் அரசியலில் இறைமை கொண்ட நாடுகளின் செயற்பாடுகளில் தலை வைக்க முடியாது. அவர்கள் சில அறிவுரைகள் கூறுவார்களே தவிர நேரடியாக தலையிட்டு தீர்வு தர மாட்டார்கள்.

நாடு சுதந்திரமடைந்த பின்னர் அது தா, இது தா, என்று நாங்கள் கேட்கவில்லை. 1948 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வந்த அரசாங்கம் ஏனைய சிறுபான்மை இனத்தவரினை அரவணைத்து போகாமல் சிங்கள, பௌத்தம் என்ற அடிப்படையில் போகும் போது தான் தமிழர்கள் எதிர்வினையாக அது தா, இது தா என்று கேட்டார்களே தவிர நாட்டினை பிரித்து தர கேட்கவில்லை, தமிழர்கள் இனவாதம் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

000

Related posts:

மருதங்கேணியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்படும் கடற்றொழில் நடவடிக்கைக்கு சட்ட ரீதியிலான அனுமத...
வடக்கிற்கான போக்குவரத்தில் போதிய பஸ் வண்டிகள் இணைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!