அணுகுமுறைகளே எமக்கான உரிமையையும் தீர்வுகளையும் வென்றெடுத்து தரும் – கட்சியின் தோழர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

எமது மக்களுக்கு அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளால் காலாகாலமாக வெற்றிகண்டுவருவது அரசியல் கட்சிகளே அன்றி எமது மக்கள் இன்றுவரை வெற்றிகாணவில்லை. இந்த துயரம் மிக்க வரலாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் போராடிவருகின்றோம். அந்த வரலாற்று பதிவை வென்றெடுக்க மக்களிடம் மிகச் சிறந்த சந்தர்ப்பம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதை மக்கள் இம்முறை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை தன்னிடம் உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் வவுனியா, கிளிநொச்சி, மன்னார் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகப் பொறுப்பாளர்கள் உதவி நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் அவர் தெரிவிக்கையில் –
தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அரசியல் பரபரப்புக்கள் சூடுபிடித்துள்ளது. அதிகளவான கட்சிகள் தமது பிரதிநிதியை வேட்பாளராக முன்னிறுத்தியிருந்தாலும் முக்கிய போட்டியாக பொதுஜன பெரமுன கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுக்கிடையேதான் அதிக போட்டி இருக்க வாய்ப்புள்ளது. இதில் தென்னிலங்கை அரசியல் நிலைமைகளை பார்க்கும் போது பொதுஜன பெரமுனவின் பக்கம் தான் வெற்றி அதிகம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
கடந்தகால கசப்பான அனுபவங்களின் பாடங்களையும் எதிர்காலத்தின் ஜதார்த்தங்களையும் தூர நோக்காகக் கொண்டுதான் நாம் எமது மக்களுக்கான அரசியல் முன்நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தொடர்ச்சியாக தமிழ் மக்களை தலைமைதாங்குவதாக கூறி ஏமாற்றிவரும் சுயநல அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்படும் எமது மக்களும் அவர்களது அபிலாஷைகளும் இம்முறையேனும் வெற்றிபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
உரிமை போராட்டத்திலும் சரி ஜனநாயக அரசியலிலும் சரி ஒரு கொள்கை இருக்கவேண்டியது அவசியமாகும். எம்மைப் போன்று விமர்சனங்களுக்கு அப்பால் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனிடமும் கொள்கையும் வேலைத்திட்டமும் இருந்தது. ஏனைய தரப்பினர் அனைவரும் தத்தமது சுயநலன்களுக்கே அவற்றை முன்னெடுத்தனர். அந்தவகையில் எமது கட்சிக்கென்றொரு கொள்கை வேலைத்திட்டமும் உண்டு. அதை திறம்பட முன்னெடுத்துச் செல்லும் சிறந்த அனுபவம் மிக்க தலைமைத்துவமும் எம்மிடம் உள்ளது.
கடந்த காலங்களில் நாம் அதிகாரத்தில் இருந்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நாம் கொண்டிருந்த நல்லுறவு காரணமாக மக்கள் எமக்கு வழங்கியிருந்த குறைந்தளவான அரசியல் அதிகாரங்களை கொண்டு எமது மக்களுக்கு எண்ணிலடங்கா சேவைகளையும் தீர்வுகளையும் எம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்திருந்தது.
அண்மைக்காலங்களில் கூட கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தத்தமது தேவைகளுக்கான சுயநலன்களாக மாற்றியமைத்துக் கொண்டதால் எமது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தோல்விகளையே சந்திக்க நேர்ந்தது.
ஆனால் நாம் அவ்வாறு ஒருபோது எமக்கு வாக்களித்த, எம்மை நம்பிய மக்களை ஏமாற்றியது கிடையாது. தேர்தல்களில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றாது ஒதுங்கியதும் கிடையாது. இதனால்தான் வெல்ல இருக்கும் வேட்பாளரது வெற்றியில் எமது மக்களது பங்களிப்பும் அவசியம் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
எம்மீது எமக்கு நம்பிக்கை உண்டு. அரசுகள் மீது நாம் ஒருபோதும் பழிபோடவும் மாட்டோம். அந்தவகையில்தான் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிறுத்தியுள்ள வேட்பாளரை ஆதிகரிக்குமாறு நான் எமது மக்கிளிடம் கோரியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|