அசௌகரியங்களை எதிர்கொ ள்ளும் மக்களுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுத்தரவேண்டும் – ஆளுநரிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, June 13th, 2017

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தீவகம் உள்ளிட்ட குடாநாட்டு மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்திசெய்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயுடனான சந்திப்பின்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

வடமாகாண ஆளுநரின் செயலகத்தில் மேற்படி சந்திப்பபு இன்றையதினம் (13) இடம்பெற்றது. இதன்போது உள்ளூராட்சி மன்றங்களினால் வீதியோரங்களிலும் இதர பகுதிகளிலுமுள்ள குப்பை கூழங்கள் உரிய முறையில் அகற்றப்படாத நிலையில் அதனால் பரவக்கூடிய டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் தாக்கங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் தீவகம் உள்ளிட்ட குடாநாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் மக்கள் எதிர்கொண்டுவரும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அதனடிப்படையில் குடிநீர் தேவையை நிவர்த்திசெய்யும் முகமாக அவசியமாக தேவையான நடவடிக்கைகள் குறித்தும்  இங்கு விஷேடகவனம் செலுத்தப்பட்டு விரிவாக ஆராயப்பட்டது.

இதனிடையே மாகாணத்தின் கல்வி நிலையை மேலும் முன்னேற்றும் வகையில் செயற்படுத்தவேண்டிய நடவடிக்கைகள், சங்கிலியன் பூங்காவை நவீன முறையில் சுற்றுமதில் அமைத்து அழகுபடுத்துவது, ஆசிரியர்களின் இடமாற்றம் , ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவை வழங்குதல், வெற்றிடங்கள் நிரப்பப்படாதுள்ள பதவிநிலை உத்தியோகத்தர்களை உள்வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

இதன்போது  டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தாம் துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி  விரைவான நடவடிக்கைகள்  முன்னெடுப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்ததுடன் குறித்த விடயங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தனது செயலாளர் இளங்கோவனிடம் பணிப்புரை வழங்கினார்.

வடக்கு மாகாண சபை அதிகார துஷ்பிரயோகம் ஊழல் மோசடிகளால் செயலற்று இருப்பதனாலும் உள்ளூராட்சி சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளதாலும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதால் அவ்விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலத்தப்படவேண்டும் என்பதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

இச்சந்திப்பில் செயலாளர் நாயகத்துடன் அவரது இணைப்பாளர்களான சிந்தன். ராஜ்குமார், கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின் மற்றும் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் குகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts: