புதிய அரசியலமைப்பை மகாநாயக்கர்கள் எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே காரணம் – சாடுகிறார் டக்ளஸ் எம்.பி

Monday, July 10th, 2017

புதிய அரசியலமைப்பு தொடர்பான இலங்கையிலுள்ள 3 பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே உருவாக்கிக் கொடுத்துள்ளது. ஜனாதிபதியை சந்தித்து நிலைமையை விளக்கியிருந்தாலும், சிங்கள மக்கள் மத்தியில் இந்த எதிர்ப்பலை இருந்து கொண்டே இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. இவ்வாறு வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்கும் வேலையை கூட்டமைப்பு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அவர் வழங்கிய செவ்வி முழுமையாகக் கீழே தரப்பட்டுள்ளது.

கேள்வி:

இலங்கையின் முக்கிய மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இலங்கைக்கு புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்புத் திருத்தமோ தேவையில்லை என்று கூறியிருக்கின்றார்கள். அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அரசியலமைப்புக்கு  ஆலோசனை தெரிவிக்கும் குழுவின் தலைவராகயிருக்கும் நிமல் சிறிபாலடி சில்வா கூட புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்ற போக்கிலேயே செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில் புதிய அரசியலமைப்பு சாத்தியப்படுமா?

பதில்:

நாங்கள் ஆரம்பத்திலிருந்து சொல்லிவருவது என்னவென்றால் நடைமுறைச் சாத்தியமான 13ஆம் திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்துதான் நாங்கள் முன்னேறிச் செல்லலாமே ஒழிய இல்லாத ஒன்றைக் கொண்டுவருவது என்பது மிகவும் கடினமாகும். அத்துடன் எந்தவொரு புதிய அரசாங்கமும் ஆட்சிக்கு வந்து முதல் ஆறு மாத காலம் அல்லது ஒரு வருடத்திற்குள் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

இந்த அரசாங்கம் ஆட்சி அமைக்கும் போது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணங்கியும் பிணங்கியுமே ஆட்சியமைத்திருக்கின்றன. அந்த 100 நாள் வேலைத்திட்டத்திலேயே பல விடயங்களுக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி ஒருவர் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் அந்த விடயம் வருகின்றது. இந்த விடயம் வருகின்றது என்று சிலவற்றை பொதுவாக சொல்லிவிட்டார். அது தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. இதுவே மகாநாயக்க தேரர்கள் அரசியலமைப்பு பற்றி தமது எதிர்ப்பை வெளியிட ஏதுவான நிலையை உருவாக்கிவிட்டது. அத்துடன் நிமால் சிறிபால டி சில்வா தாம் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தயார் என்று கூறியிருக்கின்றார். அதுதான் ஆரம்பமாக இருக்க முடியும் அதே நேரத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தமது நிலைப்பாடு என்று சிலவற்றை தெரிவித்துள்ளது. ஆனால் ஐ.தே.க அவ்வாறு எதையும் தெரிவிக்காத போதிலும் கூட பெரும்பான்மையினர் எடுக்கும் முடிவுக்கு தாம் ஆதரவு வழங்குவது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. ஆகவே ஏன் இந்த 13ஆம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது. அதை விடுத்து இந்த மேற்குறிப்பிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது சுயலாபத்திற்காகவும், இதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் இல்லாத ஊருக்கு வழிகாட்டுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

கேள்வி:

மொத்தத்தில் புதிய அரசியலமைப்பு நடைமுறை சாத்தியமா?

பதில்:

13ஆம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை விட புதிய அரசியலமைப்பு நடைமுறை சாத்தியமாக இருந்தால் அதை ஆதரிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

கேள்வி:

மகாநாயக்க தேரர்களின் கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வன்மையாகக் கண்டித்துள்ளார். அதேவேளை மகாநாயக்கர்களின் கருத்துக்கு ஜே.வி.பி ஆதரவு தெரிவித்துள்ளதே?

பதில்:

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே இது எல்லாவற்றிற்கும் காரணம். அத்துடன் சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் அதில் மக்களுக்கு அனுகூலங்கள் நிறைந்திருக்கின்றன என்ற நிலைப்பாட்டுடன் அதை அணுகியவர்களாய் நாம் காணப்பட்டோம். அதேபோன்று மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் என்ற பேரிலும் ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்போ அதைப் புறக்கணித்துவிட்டது. அது காலத்தை இழுத்தடிக்கும் செயல் என்று காரணம் சொல்லியது. ஆனால் அதிலும் ஈ.பி.டி.பி பங்கெடுத்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான களமாகவே அதைப் பார்த்தது. அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமா, இல்லையா என்று பார்ப்பதை விட இதற்கு ஒரு முயற்சி எடுக்கப்பட்டால் ஈ.பி.டி.பியின் பங்களிப்பும் ஆதரவும் அதில் இருக்க வேண்டும் என்றே ஈ.பி.டி.பி எதிர்பார்த்தது. அத்துடன் இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தை விட புதிய அரசியலமைப்பு சிறந்த விடயங்களைக் கொண்டிருந்தால் அதற்கும் ஆதரவு வழங்குவோம். அத்துடன் அது சாத்தியப்படுமா என்ற அரைமனதுடன் இல்லாமல் நிச்சயமாக சாத்தியப்படும் என்ற நம்பிக்கையுடன் அதை நாங்கள் அணுகுவோம்.

கேள்வி:

அண்மைக்காலத்தில் வடமாகாண சபை அமைச்சர்களின் இழுபறிகள் சம்பந்தமாக என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் புதைந்து மறைந்திருந்த அழுக்குகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது வெளிவர ஆரம்பித்து விட்டன. மாகாண சபை என்பது ஒரு பொன்னான வாய்ப்பாகும். அது விடுதலைப் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களின் தியாகம் மற்றும் போராட்டங்களுக்கூடாகவும் மக்களுடைய அர்ப்பணிப்பினூடாகவும் தான் கிடைக்கப்பெற்றது. துரதிஸ்டவசமாக வடக்கு கிழக்கில் அதை தமிழ் தலைமைகள் சரியாகக் பயன்படுத்தவில்லை. அதற்கான சூழலும் கடந்து போய்விட்டது. அதன்பிறகு யுத்தத்தின் பின்னரும் அரியதொரு வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது. அதையும் ஒழுங்காகப் பயன்படுத்துவது போலத் தெரியவில்லை. வெறும் அரசியல் நோக்கில் வாய்ப்புக் கிடைத்தவுடன் அதை மக்களுக்காகப் பயன்படுத்தாமல் தமக்கெப் பயன்படுத்துகின்றனர். அத்துடன் வடமாகாண சபை முறையில் பிரச்சினை இல்லை. அதைப் பயன்படுத்துபவர்களில் தான் பிரச்சினை உள்ளது. அதாவது மாகாண சபைக்க வழங்கப்பட்ட அதிகாரங்கள் போதாது என்று கூறியவர்கள் தான் அங்கு அதிகாரத் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுகிறார்கள்.

கேள்வி:

நீங்கள் அமைச்சராகவிருந்த காலகட்டத்தில் எமது மக்களுக்கென தொழில்வாய்ப்புக்கு எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொண்டீர்கள்?

பதில்:

எக்கச்சக்கமாக அளவிட்டுச் சொல்ல முடியாதளவிற்கு கணிசமானோருக்கு என்னலான வேலைவாய்ப்புக்களை வழங்கியுள்ளேன். நாங்கள் அந்தக் காலக்கட்டத்தில் அரசாங்கத்தைக் குறை கூறவில்லை. அரசாங்கத்துடன் வெற்றிகரமாக இணக்க அரசியல் நடத்தினோம். ஆனால் இன்று கூட்டமைப்பினர் அதிகம் வளைந்து கொடுக்கின்றார்கள். இருந்தம் ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.

கேள்வி:

வடமாகாணசபைக்கு மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய வளங்கள் காணப்படுகின்றன அல்லவா?

பதில்:

ஆம் ஆனால் கரைப்பவன் கரைத்தால் தான் கல்லும் கரையும். இங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியல் அல்ல கூனல் அரசியல் நடத்துவதாலேயே கூனிப்போய் இருக்கின்றார்கள். நாங்கள் இணக்க அரசியல் நடத்திய போது கட்சியை பலப்படுத்த வேண்டும் அல்லது எமது இலாபத்தை அதிகரிக்க வேண்டும் என்று அரசியலில் ஈடுபடவில்லை. மாறாக அச்சுவெலி கைத் தொழிற் பேட்டையை மீள புனரமைத்து அங்கு பல நிறுவனங்கள் வருவதற்கும், எமது மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைப்பதற்கம் வழிவகை செய்தோம். அத்துடன் ஆனையிறவு உப்பளத்தில் மீள்புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு குறைந்தது 4,000 பேருக்காவது வேலைவாய்ப்பு கிடைக்க முயற்சிகளை மேற்கொண்டோம். கணனித் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை அமைத்து அதன் மூலமும் வேலைவாய்ப்புக்களை வழங்கினோம். இவற்றை செய்வதற்கான விருப்பமும் ஆற்றலும் எம்மிடம் இருந்ததால் தான் இவற்றை எம்மால் சாதிக்க முடிந்தது. மேலும் சமுர்த்தியை மீள வழங்கினோம். வீதிகள், ரயில் பாதைகளை நிர்மாணித்தது போன்ற பல்வேறு உட்கட்டுமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.

அரசாங்கம் தான், அதைக் கொண்டு நடத்துவிக்கும் வல்லமை எம்மில் தான் காணப்பட வேண்டும். அதற்க ஒரு வழியைக் காட்ட வேண்டும். இன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் தான் மகாநாயக்க தேரர்களின் தலையீடு அரசியலமைப்பில் காணப்படுகின்றது. தமது சுயலாப அரசியலுக்காக தென்னிலங்கை மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் அச்சத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.

ஐக்கிய இலங்கை என்ற ஒன்றை நாங்கள் உருவாக்கிவிட்டால் எமது பிரச்சினைகளை நாம்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவி, மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவர் பதவிகள், சர்வதேச நாடுகளில் இரகசியப் பேச்சுவார்த்தைகள் போன்றவற்றை இவர்களால் பெற்றுக்கொள்ள முடியுமென்றால் மக்களுக்கு ஏன் வேலைவாய்ப்பை இவர்களால் வழங்க முடியாது?

நாங்கள் அரசாங்கத்தில் இருந்த போது நாம் ஒன்றும் மந்திரத்தால் மாங்காய் பறிக்கவில்லை. கடின முயற்சியெடுத்தோம் அதிகம் பிரயாசப் பட்டோம். அதனால்தான் அன்றைக்கு எல்லாம் சாத்தியமாகியது. ஆனால் கூட்டமைப்பு மக்களுக்காக எதையும் செய்யாததால் அதற்க தமிழ் மக்கள் மத்தியில் தற்போது அதிகளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் மக்கள் பார்க்கும் இடத்திலெல்லாம் கூட்டமைப்பை எதிர்க்கத் தலைப்பட்டுவிட்டார்கள்.

கேள்வி:

தொழில்வாய்ப்புக்கள் போதியளவில் இல்லாததால் தான் வடக்கில் வன்முறைக் கலாசாரம், வாள்வெட்டுக் கலாசாரம் போன்றவை தலைதூக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றதே?

பதில்:

ஆம், அவர்கள் மக்கள் எதிர்பார்த்த நம்பிக்கையான எதிர்காலத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை. அந்த எதிர்காலத்தினுள் தான் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக முன்னேற்றம், கலாசாரம் போன்ற எல்லாம் அடங்கியிருக்கின்றன. ஆரம்பத்தில் துலா மிதித்து தோட்டம் செய்து கல்விக்க முக்கியத்துவம் கொடுத்த எமது சமூகம் தற்போது சீரழிந்து கொண்டிருப்பதற்க அரசியல் தலைமையே காரணம். இன்றைக்கு வடமாகாணம் கல்வியில் பின்தங்கியிருப்பதற்கு மாகாண கல்வி அமைச்சரின் செயற்பாடுகளே காரணமாகும். ஊழல்  மோசடிக்காரர்கள் ஆட்சி நடத்தினால் சமூகம் எவ்வாறான பின்னடைவை எதிர்நோக்கும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணமாகும்.

நாங்கள் யுத்தகாலத்தில் ஆளுநருடன் இணைந்து வடமாகாண சபையை நடத்தினோம். அக் காலத்தில் கல்வி நடவடிக்கைகள் உயர்வடைந்து கல்வித்தரம் அதிகரித்தது. சமூகம் நல்ல நிலைக்கு வந்தது. ஆனால் இன்று என்ன நடக்கின்றது. கல்வியிலும் சரி வேறெந்த நடவடிக்கைகளிலும் சரி வடக்கு மாகாணம் பின்தங்கியுள்ளது. இதற்கு அரசியல் தலைமைகளே பொறுப்புக்கூற வேண்டும்.

நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் நடத்துகின்றோம் என்று கூறியவர்கள் தற்போது அரசாங்கத்திடம் கூனல் அரசியல் நடத்துவதால் எமது சமூகமும் கூனிக் குறுகிப் போய்க் கொண்டிருக்கின்றது. அத்துடன் கூட்டுறவும் சிதைவடைந்துள்ளது. பொருத்து வீட்டுத் திட்டத்தை கொண்டு வந்தபோது அதையும் எதிர்த்தார்கள். தானம் கொடுத்த மாட்டின் பல்லைப்பிடித்துப் பார்த்த கதையாகிப் போய்விட்டது.

நாங்கள் மழையில் நனைபவர்களுக்கும், வெயிலில் காய்பவர்களுக்குமே வீட்டைக் கேட்டோம். ஆனால் அவர்கள் அதை எதிர்த்தார்கள். செய்வதும் இல்லை செய்பவர்களை செய்ய விடுவதுமில்லை. 21 இலட்சத்திற்கு இரண்டு வீடுகள் கட்டலாம். அதைப் பணமாகத் தரும்படி சில வேலையில்லா  அரசியல்வாதிகள் அரசாங்கத்திடம் கேட்கின்றார்கள். அரசாங்கத்திடம் உண்மையில் நிதியில்லை. பொருத்து வீடுகள் வெளிநாடு ஒன்றிடம் இருந்து 20 வருடகால கடனடிப்படையிலேயே நிர்மாணித்துக் கொடுக்கத் திட்டமிடப்பட்டிருக்கின்றது. மக்களின் வாழ்க்கை முறையை உயர்த்தும் திட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு முட்டுக் கட்டையாகவே இருந்ரு வருகின்றது.

இரணைமடு நீர்த்திட்டத்தை கொண்டு வந்த போதும் அதை தடுத்தார்கள்.  பொருளாதார மத்திய நிலையம் கொண்டு வர ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் அதனையம் தடுத்தார்கள். ஏனென்றால் புண் ஆறிவிட்டால் மருந்து தேவைப்படாது. அது போன்று மக்கள் நல்ல வாழ்க்கைத் தரத்தை எய்திவிட்டால் தம்மை மறந்து விடுவார்கள் என்று அவர்கள் திட்டமிட்டு தடுத்து நிறுத்துகின்றனர்.

Untitled-1 copy

(நன்றி வீரகேசரி)

Related posts: