பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் என்ன செய்கின்றனர்? – தினக்குரல் பத்திரிகை தாயகன்

Sunday, April 10th, 2016

மக்கள் நாடாளுமன்றத்திற்கு தங்களை ஏன் பிரதிநிதிகளாக அனுப்பிவைத்தார்கள்  என்பதை உணர்ந்து  தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கு மக்கள் தமக்கு கொடுத்த உயர்நிலை வாழ்க்கைக்கு பிரதி உபகாரமாகவேனும் அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையாவது நாடாளுமன்ற சிறப்புரிமைகளூடாக நிறைவேற்றிக்கொடுக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும்.

இதில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி மட்டும் விஷேட கூற்றுக்கள் ஊடாக வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்து அதற்கான பதில்களையும், தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்து வருகின்றார் என தினக்குரல் பத்திரிகையின் அரசியல் விவகாரம் பகுதியில் “பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் என்ன செய்கின்றனர்?” என்ற தலைப்பில் பத்தி எத்தாளர்  தாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அக்கட்டுரையின் முழுவடிவும் எமது EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.

பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் என்ன செய்கின்றனர்?

தமிழ் மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகள் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காகவும் தமிழ் அரசியல்வாதிகள் பலரும் பலவித வடிவங்களில் போராடியும் குரல் கொடுத்தும் மேடைகளில் முழக்கமிட்டும் ஊடகங்களில் அறிக்கையிட்டும் வருகின்றனர். இந்நிலையில் வடக்குக் கிழக்கு மற்றும் மலையகம், மேல்மாகாணம் என தமிழ் மக்களினால் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட 29 மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றக் கதிரைகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் சிலர் அமைச்சரவை அமைச்சர்களாகவும், சிலர் இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவிகளை வகிக்கின்றனர்.

நாட்டின் உயர்பீடமாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகள் உரிய வகையில் பேசப்படுகின்றனவா? அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகின்றனவா? தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படுகிறதா என்று பார்த்தால் அங்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வசதி வாய்ப்புகள் இருந்தும், ஏனோ தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இந்த வரலாற்றுக் கடமையிலிருந்து தவறியவர்களாகவே இன்று உள்ளனர்.

ஆனால் இவ்விடயத்தில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளைக் குறைகூறிட முடியாது. அவர்கள் தமது மக்களின் பிரச்சினைகளுக்கு, தமது பிரதேசங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள நாடாளுமன்றத்தை சிறந்த முறையில் பயன்படுத்துகின்றனர்.

நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரையில், உறுப்பினர்களுக்குப் பல்வேறு சிறப்புரிமைகள் உள்ளன. தம்மைத் தெரிவு செய்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை, நியாயங்களைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வசதி வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், மறந்தேனும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இவற்றைத் தமது மக்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. பாராளுமன்ற அமர்வுகளின் போது மனுக்கள் சமர்ப்பண நேரத்தின் போதோ அல்லது வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரத்தின் போதோ அல்லது ஒத்திவைப்புவேளை பிரேரணைகள் தனி உறுப்பினர்களின் பிரேரணைகளின் போதோ தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமது மக்களின் பிரச்சினைகளைச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதில்லை.

தனது மக்களின் நிர்வாக ரீதியான இடர்பாடுகளுக்குப் பரிகாரம் தேட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர் நாடாளுமன்றத்திற்கு அவ்வாறான இடர்பாடுகளை எதிர்கொள்ளும் நபர் தொடர்பான மனுக்களைச் சமர்ப்பிக்க முடியும். அது காணிப் பிரச்சினை, நஷ்டஈட்டுப் பிரச்சினை, ஓய்வூதியப் பிரச்சினை என எதுவாகவும் இருக்க முடியும். அவ்வாறு மனுவைச் சமர்ப்பிக்கும் போது அந்த மனு பரிசீலனைக்காக பொது மனுக்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும்.

அதேபோன்று, வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது பிரதமரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களிடமோ தமது மக்களின் பிரச்சினை அல்லது தமது பிரதேசத்தின் பிரச்சினை அல்லது தனது மாகாணத்தின் பிரச்சினை தொடர்பில் மூன்று வினாக்களை எழுப்ப முடியும். இந்த மூன்று வினாக்களிலும் துணை வினாக்களாக பல வினாக்களை எழுப்ப முடிவதுடன் மேலதிக வினாக்களையும் கேட்க முடியும். இவ்வாறான வினாக்களுக்கு பிரதமரோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரோ பிரதி அமைச்சரோ கண்டிப்பாகப் பதிலளிக்க முடியும். சில வேளைகளில் கால அவகாசம் கோரினாலும் அக்கேள்விக்கு அவர்கள் பதிலளித்தே ஆகவேண்டும். பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட கேள்வியாக இருந்தால் மட்டும் சில வேளைகளில் பதில் வழங்கப்படமாட்டாது.

இதேபோன்றுதான் ஒத்திவைப்பு வேலைப் பிரேரணை நாடாளுமன்ற சபை அமர்வு மீண்டும் அடுத்து வருகின்ற ஒரு திகதியில் சபை ஒத்திவைக்கப்படும் போது கொண்டு வரப்படுவதே சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் எழுதப்படுகின்ற விடயங்கள் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை என அழைக்கப்படும். இது பொது முக்கியத்துவம் வாய்ந்த, அவசரம் கருதிய விடயம் ஒன்றின் மீது குறுகிய அறிவித்தலில் சபையின் கவனத்தைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயன்படுத்தும் முறையாகும்.

இவ்வாறான பிரேரணை சபையில் கொண்டுவரப்படும் போது கொண்டுவரப்படும் விடயம் தொடர்பில் அரசு மற்றும் எதிர்க்கட்சி தரப்பு உறுப்பினர்கள் வாதப் பிரதிவாதங்களைச் செய்து இறுதியில் குறித்த விடயத்திற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரால் பதில் வழங்கப்படும். தனிநபர் பிரேரணையும் இதுபோன்ற ஒன்றுதான். சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரேரிக்கப்படுகின்ற பிரேரணைகள் தனி உறுப்பினர்கள் பிரேரணை என அழைக்கப்படும். பொதுமக்கள் அக்கறையையொட்டிய எவ்விடயம் பற்றியும் எந்தவொரு பிரேரணையையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரேரிக்க முடியும்.

இவ்வகையான பிரேரணைகள் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு அதற்குச் சம்பந்தப்பட்ட அமைச்சரினால் பதிலும் தீர்வுகளும் வழங்கப்படும். கட்சித் தலைவர் ஒருவரினால் 23/2 இன் அடிப்படையில் முன்வைக்கப்படும் விஷேட கூற்றும் மிகமுக்கியமானது. பொதுமக்களின் முக்கியம் கருதிய அவசர தேவைகளுடைய விடயங்கள் தொடர்பில் சபையில் கவனத்திற்குக் கொண்டுவந்து அது தொடர்பான பதிலையும், தீர்வையும் இதன்மூலம் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இதுபோன்ற எந்தவொரு சிறப்புரிமைகளையும், வசதி வாய்ப்புகளையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பயன்படுத்திக்  கொள்வதில்லை. அதிலும் மிகவும் பயனுள்ள வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்வது அரிதிலும் அரிது. ஆனால், இந்த நேரத்தை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நாடாளுமன்ற ஒருநான் அமர்வில் எம்.பிக்களாக உள்ள யாரேனும் ஒருவர் மூன்று கேள்விகளை எழுப்ப முடியும். சிலர் ஒரு கேள்வியுடன் நிறுத்திக் கொள்வர். ஒரு தினத்திற்கு ஆகக் கூடியது எம்.பிக்கள் 15 கேள்விகளைக் கேட்பதற்கான உரிமை உள்ளது. ஆனால், ஒழுங்குப் பத்திரத்தைப் பார்த்தால், அதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை காண முடிவதில்லை. இந்நிலையில் குறைந்தது மூன்று முஸ்லிம் உறுப்பினர்களாவது தமது முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பில் தமது பிரதேசத்தின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருப்பார்கள்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக 29 பேர் உள்ளனர். இவர்களில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனோ கணேசன் சுவாமிநாதன், திகாம்பரம் ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாகவும் விஜயகலா மகேஸ்வரன், இராதாகிருஷ்ணன் ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாகவும் உள்ளனர். எம்.பிக்களாக செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கவீந்திரன், வியாளேந்திரன், சரவணபவன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சிவமோகன், சித்தார்த்தன், ஸ்ரீதரன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, துரைரட்ணசிங்கம், யோகேஸ்வரன் ஸ்ரீநேசன், அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தனும் உள்ளனர்.

இதில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி மட்டும் இடையிடையே விஷேட கூற்றுக்கள் ஊடாக வடக்கு மக்களின் சில அடிப்படைப் பிரச்சினைகளை சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்து அதற்கான பதில்களையும், தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

மலைய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரவிந்தகுமார், திலகராஜ், வேலுகுமார், வடிவேல் சுரேஷ, முத்து சிவலிங்கம், தொண்டமான் ஆகியோரும் உள்ளனர். இவர்களில், அரவிந்தகுமார், திலகராஜ், வேலுகுமார், வடிவேல் சுரேஷ் ஆகியோர் தமது பொறுப்பை உணர்ந்து விவாதங்களில் தவறாது பங்கேற்கின்ற போதும், வாய்மூலம் விடைக்கான வினாக்கள் என்னும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாத நிலையே உள்ளது.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களைத் தவிர்த்து, எம்.பிக்களாக உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட சிறப்புரிமைகளைப் பயன்படுத்துவது அரிதிலும் அரிது. அதேநேரம், சிங்கள எம்.பிக்கள் அல்லது முஸ்லிம் எம்.பிக்கள் கொண்டுவரும் விவாதங்கள் பிரேரணைகளில் வீரமுழக்கமிடுவதில் இவர்கள் தவறுவதில்லை.

பெரும்பாலானவர்கள் மேடைப் பேச்சாளர்கள் போலவே நாடாளுமன்றத்தில் செயற்படுகின்றனர். ஒவ்வொரு விவாதத்தின் போதும் தமக்கு ஒதுக்கப்பட்ட உரைக்கான நேரத்திற்கு சபைக்குள் காட்டி தமது உரை முடிந்தவுடன் ஏதோ வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிவிட்ட புழகாங்கிதத்துடன் உடனடியாகவே சபையைவிட்டு வெளியேறிச் செல்கின்றனர். பெரும்பாலான விவாத நேரங்களில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் ஆசனங்கள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.

அதேவேளை, முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியூதீன், ஹலீம், பைஸர் முஸ்தபா, கபீர் காசிம் போன்றவர்கள் அமைச்சரவை அமைச்சர்களாகவும், பௌஸி இராஜாங்க அமைச்சராகவும் ஹிஸ்புல்லா, ஹரீஸ், அமீர் அலி, பைஸல் ஹாசிம் போன்றவர்கள் பிரதி அமைச்சர்களாகவும் உள்ளனர். இவர்களைத் தவிர்த்து, எம்.பிக்களாக இம்ரான், முஜிபுர் ரஹ்மான், நவவி, சல்மான், மக்ரூப், மன்சூர், மரிக்கார், இஸாக், காதர் மஸ்தான், அலிசாஹிர் மௌலானா, தொபீக் போன்றவர்கள் உள்ளனர். இவர்களில் முஜிபுர் ரஹ்மான், சல்மான், மஹ்ரூப் மரிக்கார், இஸாக் போன்றவர்கள் தமது மக்களுக்கான கடமையைச் சிறப்பாகச் செய்கின்றனர்.

மனுக்கள் சமர்ப்பணம், வாய்மூல விடைக்கான வினா நேரம், தனிநபர் பிரேரணை, ஒத்திவைப்பு வேளை பிரேரணை, விஷேட கூற்று ஆகியவற்றின் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாதே தவிர, ஏனைய பொருளாதார, வாழ்வாதார, அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் பொது நிகழ்வுகள், பிரசார மேடைகள், நாடாளுமன்ற விவாதங்களில் வீரமுழக்கமிடுவதாலும், ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடுவதாலும் எந்தவொரு பயனும் கிடைக்கப் போவதில்லை. வெறுமனேவந்து நாடாளுமன்றக் கதிரைகளைச் சூடாக்கிவிட்டு, விவாதங்களில் பேசிவிட்டுச் சென்றுவிட்டால் மட்டும் போதாது. தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க நாடாளுமன்றத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிஞ்சித்தும் அக்கறையில்லை என்றே கூறவேண்டியுள்ளது. ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்தேனும், இவர்கள் திருந்துவதாகவும் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்குரிய சிறப்புரிமைகள், வசதிவாய்ப்புகள் தொடர்பில் மக்களுக்குச் சரிவர இதுவரை தெரியவராததாலேயே பலரும் மீண்டும் மீண்டும் எம்.பிக்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். தமது பிரச்சினைகளுக்குப் நாடாளுமன்றத்தின் ஊடாக இலகுவாகத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடிந்தும், அதுதொடர்பில் தமது பிரதிநிதிகள் அக்கறையின்றி இருப்பதும் மக்களுக்குத் தெரிய வந்தால், இவர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதே முயல் கொம்பாகவே இருக்கும். எனவே, தம்மை மக்கள் ஏன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்பதை உணர்ந்தும், தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கும் மக்கள் தமக்குக் கொடுத்த உயர்நிலை வாழ்க்கைக்கு பிரதி உபகாரமாகவேனும் அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையாவது நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு ஊடாக நிறைவேற்றிக் கொடுக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும்.

Untitled-1 copy

(நன்றி தினக்குரல்)

Related posts: