ஒரு கோயிலில் இருக்கும் நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்ப்பது இல்லை அதே நிலைமையில் தான் கூட்டமைப்புக் கட்சிகளும் – பத்தி எழுத்தாளர் காலகண்டன்

Monday, June 27th, 2016

“தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளமானவைகளாகும். அவை பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவானதும் திட்டவட்டமானதுமான முடிவுகளுக்கு வர முடியவில்லை. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொருவரைக் குற்றஞ்சாட்டிக் குறைகூறி வருகின்றன. மீள்குடியேற்றம், இராணுவப் பிடியிலிருந்து மக்களின் நிலங்கள், வீடுகள் விடுவிப்பு, சிறையில் இருந்து வருவோரை வெளியே கொண்டுவருதல், காணாமற் போனோர் பற்றிய பிரச்சினைக்குத் தீர்வுகாணல், சுன்னாகம் நன்னீர் கிணறுகளில் மின் உற்பத்தியின் கழிவு எண்ணெய் கலக்க விடப்பட்டமை, திருகோணமலை சம்பூரில் இந்திய நிலக்கரி அனல் மின் நிலையம் கட்டப்படுதல், வடக்குக் கிழக்கிற்கான 65,000 இரும்பு பொருத்து வீட்டுத் திட்டம் போன்ற உடனடிப் பிரச்சினைகளில் கூட்டமைப்பால் உருப்படியான செயற்பாட்டை முன்னெடுக்க முடியவில்லை. இவை யாவற்றிலும் இழுத்தடிப்புக் கதைகளையும், திசை திருப்பும் நடவடிக்கைகளையுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வருகின்றது” என பத்தி எழுத்தாளர் காலகண்டன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்.தினக்குரல் பத்திரிகையில் உள்நாட்டு விவகாரம் பகுதிலில் பத்தி எழுத்தாளர் காலகண்டன் எழுதியுள்ள கட்டுரையை எமது இணையத்தள வாசகர்களுக்காக முழுமையாக பதிவிடுகின்றோம்.-

கோவில்களில் நவக்கிரகங்கள் ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், அவை ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று பார்ப்பதில்லை. அவற்றுக்குப் பூஜைகளும் நடக்கும். வழிபாட்டாளர்களும் சுற்றிவந்து வழிபட்டுச் செல்வர். அவை ஏன் அப்படி இருக்கின்றன என்றோ, இவற்றால் வழிபடுவோருக்கு நன்மைகள் உள்ளனவா என்றோ யாரும் கேட்பதில்லை. இதே நிலையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது இருந்து வருகின்றது. நான்கு கட்சிகள் இணைந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் எட்டுத் திசைகள் நோக்கியவாறு இருந்து வருகின்றன.

தேர்தல்களில் நிற்கவும் வாக்குறுதிகள் வழங்கவும் வாக்குகளை வாரிப்பெறவும் இக்கூட்டமைப்பினர் முன்நிற்பர். அவ்வேளைகளில் தமிழ்த் தேசியத்தின் பெயரில் இன உரிமை, இன விடுதலை, பேரினவாத எதிர்ப்பு என்பன பீரங்கி முழக்கங்களாக பீறிட்டு நிற்கும். அந்த முழக்கங்களின் பின்னால் பிரதேசம், சாதியம், பணம், அந்தஸ்து என்பன மறைந்து நிற்கும். அங்கே மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் யாவற்றையும் வழிநடத்தி நிற்பதைச் சாதாரண தமிழ் மக்கள் அறிந்து கொள்வதில்லை. யாவும் நமக்காக.

அதாவது, தமிழர்களுக்காக இடம்பெறுகின்றன என்ற ஒரு வகை அரசியல் அப்பாவித் தனத்துடன் அதிகமான தமிழ் மக்கள் தமிழர் கூட்டமைப்பினரின் காதுகளில் பூச்சுற்றும் வித்தையினைக் கண்டுகொள்வதில்லை. யாவும் தமிழினத்தின் பெயரில் நடந்தேறும். இப்போது தேர்தல் எதுவும் இல்லாத சூழல். அத்தகைய இடைவெளியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் தத்தமக்கு வேண்டியவற்றை சொத்து, சுகங்கள் பதவிகளாகத் தேடி அவற்றைப் பாதுகாப்பதில் முனைப்பாக இருந்து வருகின்றார்கள். அண்மையில் நல்லாட்சி அரசாங்கத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் நாட்டு மக்களின் கவனங்களைப் பெற்றுக் கொண்டன.

ஒன்று தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களையும் பாதிக்கக் கூடிய 15 வீத வற்வரி வசூலிப்புக்கு முடிவு செய்து மே மாதம் இரண்டாம் திகதியிலிருந்து நடைமுறைப் படுத்தப்படுகிறது.

அதேவேளை, முப்பது அமைச்சர்களின் அன்றாடப் பாவனைக்காக 118 கோடியே 25 இலட்சம் ரூபா பெறுமதியில் சொசுகு வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு பாராளுமன்றத்தில் குறை நிரப்புப் பிரேரணை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்க நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதை போன்றதாகியது.

இங்கே சுட்டிக்காட்ட விரும்புவது யாதெனில், மேற்படி இரண்டு மக்கள் விரோத செயற்பாடுகளிலும் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டு வரும் சூழலில் எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்றப் பிரதிநிதிகளோ பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தை தானும் பேசவில்லை. எடுத்ததற்கெல்லாம் தீர்மானம் நிறைவேற்றும் வடக்கு மாகாண சபை இவ்விரு விடயங்களிலும் வாயே திறக்கவில்லை. முதலமைச்சர் கூட மௌனமே சாதித்தார்.

அவ்வாறு அவர்கள் நடந்து கொள்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. வற்வரி பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பிரச்சினை கிடையாது. தமிழர்களிடையே இருந்துவரும் சாதாரண உழைக்கும் தமிழ் மக்களைப் பற்றியோ அவர்களது வாழ்க்கை நெருக்கடிகளைப் பற்றியோ தமிழ்த் தலைமைகள் இன்று மட்டுமன்றி என்றுமே அக்கறை காட்டியது கிடையாது. வசதியும் வாய்ப்புகளும் கொண்ட தமிழர்களின் பக்கமே தமிழ்த் தலைமைகள் இருந்து வருகின்றமையால் வற்வரி உயர்வும் பொருட்களின் விலைகள் அதிகரிப்பும், அவர்களுக்குப் பிரச்சினையாக இல்லை. இரண்டாவது சொகுசு வாகனத்திற்கு 118 கோடியை அரசாங்கம் ஒதுக்கியதும் கூட்டமைப்பினருக்குப் பிரச்சினை இல்லை.

அவர்களும் சொகுசு வாகனங்களைப் பெற்றும் உள்ளனர். பெறுவதற்கு விண்ணப்பித்தும் உள்ளனர். யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆறு கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை மிகவும் குறைந்த சுங்கவரியுடன் இறக்குமதி செய்ததற்காகப் பரவலான பேச்சு அடிபடுகின்றது. அதேவேளை, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் இரண்டரை வருட காத்திருப்பிற்குப் பின் அவசர அவசரமாக சொகுசு வாகனம் பெறுவதற்கு வரிசையில் நின்று விண்ணப்பித்த கதை பொய்க் கதையல்ல. ஏற்கனவே சுட்டிக்காட்டியது போன்றே கூட்டமைப்பினர் நடந்து கொள்வதற்கு இவை சோற்றுப் பத உதாரணங்களாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகளில் தமிழரசுக் கட்சி மாவை சேனாதிராஜா தலைமையில் தனிவழி சென்று கொண்டிருக்கின்றது. இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மாவையாருடன் இணைந்து நின்று ஏனைய கட்சிகளை ஓரங்கட்டுவதில் பின்புலப் பாத்திரம் வகிக்கின்றனர். இடையிடையே கூட்டமைப்பின் கூட்டம் என அறிவித்துக் கொள்வர். ஆனால், அங்கு உருப்படியாக எதுவும் பேசுவதில்லை. சாதாரணமாகவே ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொள்வதில் சிரமப்படும் கூட்டமைப்புக் கட்சிகளின் தலைவர்கள் கூடும்போதும் மட்டும் மனம் விட்டுப் பேசுவார்களா? தமிழ் மக்கள் எதிர்நோககும் பிரச்சினைகள் ஏராளமானவைகளாகும்.

அவை பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவானதும், திட்டவட்டமானதுமான முடிவுகளுக்கு வர முடியவில்லை. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொருவரைக் குற்றஞ்சாட்டிக் குறை கூறி வருகிறது. மீள்குடியேற்றம், இராணுவப் பிடியிலிருந்து மக்களின் நிலங்கள், வீடுகள் விடுவிப்பு, சிறையில் இருந்து வருவோரை வெளியே கொண்டு வருதல், காணாமற் போனோர் பற்றிய பிரச்சினைக்குத் தீர்வு காணல், சுன்னாகம் நன்னீர் கிணறுகளில் மின் உற்பத்தியின் கழிவு எண்ணெய் கலக்க விடப்பட்டமை, திருகோணமலை சம்பூரில் இந்திய நிலக்கரி அனல் மின் நிலையம் கட்டப்படுதல், வடக்குக் கிழக்கிற்கான 65,000 இரும்பு பொருத்து வீட்டுத் திட்டம் போன்ற உடனடிப் பிரச்சினைகளில் கூட்டமைப்பால் உருப்படியான செயற்பாட்டை முன்னெடுக்க முடியவில்லை.

இவை யாவற்றிலும் இழுத்தடிப்புக் கதைகளையும், திசை திருப்பும் நடவடிக்கைகளையுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வருகின்றது. அரசியல் தீர்வு இவ்வருட நடுப் பகுதிக்குள் வந்துவிடுமென ஆரூடம் கூறி வந்த சம்பந்தனும், சுமந்திரனும் இப்போதைக்கு அது வரமாட்டாது என்று கூறுவதுடன், தமக்கு வசதியான ஏதாவது கைகளில் கிடைத்தால் அதனை வைத்து ஏதோ வெட்டிப் பிடுங்குவது போன்று இடையிடையே காட்சி காட்டுகின்றார்கள். அதில் ஒன்றே எம்.ஏ.சுமந்திரனின் அமெரிக்க, ஜெனீவாப் பயணம். அங்கு சென்று ஆற்றிய உரைகளையும் சந்தித்த சந்திப்புக்களையும் ஊடகங்கள் வெளியிட்டு ஜெனீவாவில் தமிழருக்குச் சார்பாக ஏதோ நடைபெறப்போகிறது என்ற ஒரு மாயத் தோற்றம் காட்டப்படுகின்றது. ஆனால், எதுவும் நடக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதியானதாகும்.

ஏனெனில், ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையானது மேற்குலகம் சார்ந்த முடிவுகளையே மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. வெறும் அழுத்தப் பேச்சுக்களாலும் அல்லது கவனயீர்ப்புக் கதைகளாலும் நல்லாட்சி அரசாங்கத்தின் போக்கினை மாற்றியமைத்துவிட முடியாது.

முன்னைய மஹிந்த அரசாங்கம் வெளிப்படையாகவே முன்னெடுத்து வந்த மேற்குலக நலன்களுக்கு அதிகம் விட்டுக் கொடுக்காது நின்று வந்த நிலையானது முடிவில் படுதோல்விக்கே வழிவகுத்தது. ஆனால், அதே ஆட்சியின் பாதையில் சிற்சில வித்தியாசங்களுடன் இன்றைய நல்லாட்சியானது பயணித்து வருகின்றது. அன்று மஹிந்த ஆட்சியில் எதிர்ப்புக் கொடி தூக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று மைத்திரி – ரணில் ஆட்சியில் இணக்க அரசியல் ஊடாகக் கடந்த காலத்தை மறந்து விசுவாசிகள் போன்று நடந்து கொள்கின்றனர்.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம். கடந்த பதினெட்டாம் திகதி அன்று யாழ்ப்பாணத்தின் துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்புத் திறப்பு விழா நடைபெற்றது. அதனை ஜனாதிபதி திறந்து வைத்தார். முதலமைச்சர் கலந்து கொண்ட அந்நிகழ்வில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவும் ஏனையோரும் கலந்து கொண்டனர். இதே விளையாட்டரங்கின் பெயருக்குரியவரான முன்னாள் யாழ். மேயர் பாராளுமன்ற உறுப்பினர் அல்பிரட் துரையப்பா நாற்பது வருடங்களுக்கு முன்பு தமிழரசுக் கட்சித் தலைமையால் துரோகி என விரல் சுட்டப்பட்டதன் காரணமாகவே அக்கட்சியின் தம்பிமாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதே துரையப்பாவின் பெயரிலான விளையாட்டரங்கை 70 மில்லியன் ரூபா செலவில் புனரமைத்துக் கொடுத்தது இந்தியா. திறந்து வைத்தவர் ஜனாதிபதி. சமநேரத்தில் இந்தியப் பிரதமர் இத்திறப்பு விழாவை டில்லியில் இருந்தவாறே பார்த்து மகிழ்ந்து உரையாற்றிக் கொண்டார். இதனை ஒரு கணம் பின்னோக்கிப் பார்த்து சிந்தித்த போது அன்று தமிழரசுக் கட்சிக்கு துரையப்பா தமிழ்த் துரோகி. இன்று அதே தமிழரசுக் கட்சிக்கு மதிக்கப் பெறும் ஒரு கனவான். தமிழரசுக் கட்சியினதும், தமிழ்த் தேசியவாதத்தினதும் முன்னுக்குப் பின்னான முரண்பட்ட நிலைப்பாட்டினை எவ்வாறு விளங்கிக் கொள்வது? இத்திறப்பு விழாவிற்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தனது வீட்டில் மகளது பிறந்ததின நிகழ்வுக்கு அழைத்துச் சென்று ஜனாதிபதியால் வாழ்த்துப் பெற வைத்திருக்கிறார். இவற்றிலும் தமிழரசுக் கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுகள் தனிப்பட்ட விவகாரங்கள் என்று நியாயப்படுத்தல்கள் கூறலாம். ஆனால், தமது பாராளுமன்ற ஆசனம் பெறும் அரசியலை தமிழ் மக்களுடைய அரசியலாகக் காட்டி எத்தனை பேரைத் துரோகிகளாக முன்னிறுத்தி வந்தது தமிழரசுக் கட்சி.

அன்றைய அரசாங்கங்களுடன் இணைந்து நின்று பதவிகள் பெற்று தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி அவசியம் எனக்கூறி நின்ற தமிழ் அரசியல்வாதிகள் சிலரைத் துரோகிகள் என அடையாளப்படுத்தி அத்தகையோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. அரசியல் தீர்வும் தமிழர்களின் உரிமைகளும் பெறப்படாதவரை அபிவிருத்தி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியவர்கள் தமிழரசுக் கட்சியினர். அதே பல்லவியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூறி வந்தது. அதன்காரணமாகவே துரையப்பாவிற்குப் பின் டக்ளஸ் தேவானந்தாவைத் துரோகியாகக் கண்டனர்.

ஆனால், இன்று அதே டக்ளசுடன் ஒருவரே நிற்பது எதன் அடிப்படையில் என்று கேட்பது நியாயமானதாகும். அது மட்டுமன்றி இன்று மாவட்ட அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி எனக் கூறி இணைத் தலைமை வழங்குவதில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்து நிற்கின்றனர். இந்நிலையில் இவர்கள் அன்று கூறிய அதே வார்த்தைகளை இன்று கேட்க வேண்டியுள்ளது. அரசியல் தீர்வு வந்துவிட்டனவா? தமிழர் உரிமைகள் கிடைத்து விட்டதா? என்ற கேள்விகள் எழுகின்றன. பல பத்தாயிரம் உயிர்கள் பலி கொள்ளப்பட்ட பின்பு கேட்டவை எதனையும் பெற முடியாத நிலையில் இணக்க அரசியல் எனக் கூறி நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம்தான் என்ன?

வடக்கின் முதலமைச்சர் மட்டுமே இடையிடையே தமிழர்களின் உரிமைகள் பற்றியும் இழைக்கப்படும் அநீதிகள் பற்றியும் பெற வேண்டியவை பற்றியும் பேசி வருகின்றார். அவரும் முற்றுமுழுதாக எதிர்நிலை நின்று எதிர்ப்புக் குரல் கொடுக்கும் நிலை இல்லை. காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இல்லை. அத்துடன் முதலமைச்சரைச் சுற்றி நிற்போரும் அவரது நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுப்பதாக இல்லை. வடக்கு மாகாண சபை தனித்தமிழ் பெரும்பான்மையுடன் இருந்த போதிலும் அது செயல்திறன் வீச்சுடன் இல்லாமைக்கு சுய ஈடேற்றச் சிந்தனையும் சொத்து சுகம் தேடும் போக்குகளும் பாதவிப் பேராசைகளுமே ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைத்து வருகின்றன.

நன்றி தினக்குரல்.

27 copy

Related posts: