தவறு ஏதாவது இருந்தால் நிரூபித்துக் காட்டட்டும்!

Jaffna-Hospital-strike-newsfirst-626x3801 Wednesday, October 11th, 2017

தனிப்பட்ட ரீதியில் எனக்குப் பிரச்சினை உள்ளது என்றும் அதை மறைப்பதற்காகவே போராட்டத்தை ஒழுங்கமைத்தேன் என்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் எந்த அடிப்படையில் கருத்து தெரிவிக்கின்றார். அப்படி ஏதாவது இருந்தால் நிரூபித்துக் காட்டுமாறு அவரிடம் பகிரங்கமாகச் சவால் விடுக்கிறேன் என திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மு.உதயசிறி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முன்னேற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பான 11 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவை கடந்த சனிக்கிழமை மருத்துவமனை முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டது. அதன் செயலாளரான உதயசிறி தொடர்பில் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி கருத்துத் தெரிவித்திருந்தார். உதயசிறி அவரது தவறை மறைப்பதற்காகவும் வேறு காரணங்களுக்காகவுமே குறித்த போராட்டத்தை நடத்தினார் என்றும் பணிப்பாளர் குற்றஞ் சாட்டியிருந்தார். இது தொடர்பில் உதயசிறி அனுப்பியிருந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

எனக்கு தனிப்பட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை. இறப்பு விசாரணை அதிகாரி என்ற வகையில் எனது மேலதிகார மையங்களான நீதிமன்றிலோ அல்லது நீதி அமைச்சிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை. எந்த விசாரணைக்கும் நான் உட்படவில்லை. அழைப்பும் அனுப்பப்படவில்லை. எனக்குத் தனிப்பட்ட ரீதியில் பிரச்சினை உள்ளது என்றும் அதை மறைப்பதற்காகவே நான் போராட்டத்தை ஒழுங்கமைத்தேன் என்றும் மருத்துவமனை பணிப்பாளர் எந்த அடிப்படையில் கருத்துத் தெரிவிக்கின்றார்? நான் போதனா மருத்துவமனைக்கு மட்டும் இறப்பு விசாரணை அதிகாரி அல்ல. அதற்கு வெளியேயும் இறப்பு விசாரணை அதிகாரியே. மருத்துவமனை நிர்வாகமோ, சுகாதார அமைச்சோ என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது.

சுகாதார அமைச்சில் இருந்து வந்தவர்கள் என்னை விசாரணைக்கு அழைப்பதற்கு எந்த அதிகாரமும் அற்றவர்கள். நீதி அமைச்சின் நிர்வாக அலகுக்குக் கீழ் வேலை செய்பவரை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எந்த அடிப்படையில் விசாரிக்க முடியும்?

தேவையற்ற பொய்யான தகவலைத் தெரிவித்து மக்களைக் குழப்புவதாகப் பணிப்பாளர் என்மீது குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் போதனாவின் பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பிருந்தே இந்தப் பிரச்சினை தொடர்பாக நான் குரல் கொடுத்து வருகின்றேன். 2012 ஆண்டு சுபேதர் பெர்ணான்டோ றஜிதா என்பவரும் அவருடைய இரட்டைக்குழந்தைகளின் இறப்புத் தொடர்பாகவும் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் வழக்கு தொடர்ந்ததோடு மருத்துவத் தவறுகள் காரணமாக இறந்ததாக நம்பப்படும் 11 இறப்புகள் தொடர்பாகவும் வழக்குத் தொடர்ந்தேன். –என்றுள்ளது.


மெக்ஸிக்கோ மக்களுக்கு நியூயோர்க்கிலிருந்து ஜனாதிபதி அனுதாபம்!
தற்கொலைக்கு கைப்பேசி பாவனையே அதிக காரணம் - ஆய்வில் அதிர்ச்சி!!
தேர்தல் முடிவுகளை மாவட்ட மட்டத்தில் வெளியிட முடியாது - தேர்தல் ஆணைக்குழு!
வலி. வடக்கில் அதிபர்களுடன் மாத்திரம் இயங்கும் 5 பாடசாலைகள் - பெற்றோர் கவலை !
அரச வைத்திய சாலை நோயாளர்களுக்கு பற்றுச்சீட்டு அறிமுகம்!