வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினா? சிறைக்கு செல்லும் அபாயம்!

Friday, July 27th, 2018

வாட்ஸ்ஆப் குழுபில் அட்மினா? சர்வ அதிகாரமும் உங்கள் கையில் என நினைத்துவிட வேண்டாம். மாறாக, நீங்கள் சிறைக்குச் செல்லும் அபாயமும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதே நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது.

ராஜ்கார் மாவட்டத்தில் வாட்ஸ் ஆப் குழுவின் அட்மின் (நிர்வாகி) ஒருவருக்கு நடந்த உண்மைச் சம்பவம் இது. வாட்ஸ் ஆப் குழு ஒன்றின் அட்மின் ஜுனைத்கான் ஐந்து மாதங்களாக சிறையில் இருக்கிறார்.

பகிரப்பட்ட செய்தி என்ன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. அதுமட்டுமல்ல, அந்த செய்தியை அவர் பகிரவும் இல்லை. ஆட்சேபத்திற்குரிய செய்தியை பகிர்ந்த 21 வயது ஜுனைத்கான் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என உள்ளூர் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டபோது, ஜுனைத் வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினாக இருந்தார் என்று போலீசார் கூறுகின்றனர்.

உண்மையில் அந்த வாட்ஸ் ஆப் குழுவை ஜுனைத் உருவாக்கவோ, அட்மினாகவோ இருந்ததோ இல்லை. குழுவை உருவாக்கியவர் குழுவில் இருந்து வெளியேறியதால், குழுவிற்கு ஒரு அட்மின் தேவை என்பதால் தானாகவே அவர் அட்மினாக்கப்பட்டார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தினால், வாட்ஸ்ஆப் நிர்வாகிகளின் சட்டப்பூர்வ பொறுப்புகள் மற்றும் இந்த செயலியில் அட்மினின் பங்கு குறித்த விவாதங்கள் புதிய கோணத்தில் எழுந்துள்ளது. முறைகேடான நடவடிக்கைகளில் யாரோ சிலர் இறங்கும்போது, தொடர்பே இல்லாத ஒருவர், அட்மினாக இருப்பதாலேயே தண்டிக்கப்படுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விராக் குப்தாவிடம் கருத்து கேட்டறிந்தோம். “பயங்கரவாத செயல்கள் அதிகமாக நடைபெறும் ஜம்மு காஷ்மீரின் ஒரு மாவட்டத்தில் வாட்ஸ் ஆப் குழுவின் அட்மின் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மறுபுறம், வாட்ஸ்ஆப் தளத்தின் சட்டப் பொறுப்பு குறித்து அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.”

இந்த சூழ்நிலையில் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாமல், வாட்ஸ் ஆப் குழு ஒன்றின் அட்மின் ஒருவரை ஐந்து மாதங்களாக சிறையில் வைத்திருப்பது சட்டப்பூர்வமானதல்ல என்று அவர் கூறுகிறார்.

இந்த நிலையில், வாட்ஸ் ஆப் குழுவின் அட்மின் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்; ஆனால், வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்ற கேள்விகளும் எழுகின்றன

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தின் தாலேன் என்ற ஊரில் வசிக்கும் ஜுனைத் கான் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்துவருகிறார். 2018, பிப்ரவரி 15ஆம் தேதியன்று ஆட்சேபத்திற்குரிய செய்தி அனுப்பியதாக அவர் கைது செய்யப்பட்டார்.

“பிரச்சனைக்குரிய அந்த செய்தியை மைனரான ஒருவர் பகிர்ந்திருந்தார். ஆனால் புகார் எழுந்தவுடனே குழுவின் நிர்வாகி வெளியேறிவிட்டார், அதன்பிறகு வேறு இருவரும் குழுவில் இருந்து வெளியேறிவிட்டார்கள். இதனால்தான் ஜுனைத் எதுவும் செய்யாமலேயே அந்த வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினாக மாறினார்” என்று ஜுனைதின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

“இந்த நிகழ்வுகள் நடந்த சமயத்தில் ஜுனைத் ஊரிலேயே (தாலேன்) இல்லை. உறவினர் குடும்பத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு அழைப்பு கொடுப்பதற்காக ரத்லாமிற்கு சென்றிருந்தார்.”

“ஊருக்கு ஜுனைத் திரும்பி வந்த பிறகு, அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் பாய்ந்தது; அதோடு தேசத்துரோக குற்றச்சாட்டும் பதியப்பட்டது. சிறையில் இருப்பதால் ஜுனைத், பி.எஸ்சி தேர்வு எழுத முடியவில்லை. வேறொரு தேர்வை சிறையில் இருந்தபடியே எழுதினார்.”

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, மத அல்லது அரசியல் ரீதியாக ஆட்சேபிக்கக்கூடிய செய்திகளை பரப்பினால் அதற்கு சட்டரீதியாக பொறுப்பேற்கவேண்டும்.

“இந்த வழக்கில் சலான் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக விசாரணை முடிவடைந்த பிறகே சலான் கொடுக்கப்படும். குற்றச்சாட்டுகள் சரியானவை அல்ல என குடும்பத்தினர் கருதினால், அவர்கள் அது தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். இதற்கு பிறகு விசாரணை நடத்த வேண்டுமானால் அது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்தான் மேற்கொள்ளப்படும்” என்று உள்ளூர் காவல்துறை அதிகாரி பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது 20 கோடி மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் ஆப் செயலியில் பகிரப்படும் தகவல்களின் அடிப்படையில் பல வழக்குகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களை பயன்படுத்தி வன்முறைகளை தூண்டுவதை தடுப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரசு கூறுகிறது. இருந்தபோதிலும், இந்த சட்டங்களை பயன்படுத்தி தனிமனிதர்களின் கருத்து சுதந்திரத்தை காவல்துறையினர் மீறுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Related posts: