மீளத்திரும்பியது இருள்யுகம்!

Tuesday, August 9th, 2016

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையால் நடத்தப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் தொடரான ராம் ஸ்லாம் இருபதுக்கு-20 தொடரில், போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நான்கு வீரர்களுக்கு, கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரிய போட்டி நிர்ணயம் காரணமாக, உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்திய ஹான்சி குரோஞ்சே பிறந்த நாடான தென்னாபிரிக்கா, மீண்டுமொருமுறை அந்த இருள்யுகத்தை உணரும்படியாக, இந்தத் தடைகள் அமைந்துள்ளன.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ராம் ஸ்லாம் தொடரில், போட்டிகளை நிர்ணயிப்பதற்கு முயன்றமை, அதற்கான சதியில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றங்களுக்காகவே இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட் விக்கெட் காப்பாளரான தமி தொலக்கிலே மற்றும் ஜுவான் சைம்ஸ், எதி எம்பலட்டி, பியூமெலெலா மத்ஷிக்வே ஆகியோருக்கே தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதில், தொலக்கிலேவுக்கு 12 ஆண்டுகளும் சைம்ஸூக்கு 7 ஆண்டுகளும் எம்பலாட்டிக்கும் மத்ஷிக்வேவுக்கும் தலா 10 ஆண்டுகளும் தடைகளாக விதிக்கப்பட்டுள்ளன. இதில், மத்ஷிக்கேவின் தடையில் 3 ஆண்டுகள், ஒத்திவைக்கப்பட்ட தடை என அறிவிக்கப்படுகிறது. தடைகள் அனைத்தும், இவ்வாண்டு ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கின்றன.

இதில், தொலக்கிலே மீது, “விசாரணைக்கு அவசியமான சாட்சியங்களை அழிப்பதன் மூலமாக, விசாரணைக்குத் தடை செய்தல் அல்லது தாமதம் செய்தல்” என்ற குற்றமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தத் தடைகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகார்ட், போட்டி நிர்ணயங்கள் எவையும் இடம்பெற்றமைக்கான ஆதாரங்களை இதுவரை காணவில்லை என்ற போதிலும், போட்டிகளை நிர்ணயிப்பதற்குப் பணத்தைப் பெற்றுக் கொண்டமை அல்லது எதிர்காலத்தில் அவ்வாறு செய்வதற்கான உறுதியை வழங்கியமை என்பன, இவர்கள் மீதுள்ள குற்றங்கள் எனத் தெரிவித்தார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை, இவ்வீரர்கள் நால்வரும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை, அவர்களில் தொலக்கிலே தவிர்ந்த ஏனைய மூவரினது மன்னிப்புக் கோரல்களையும் வெளியிட்டுள்ளது. தொலக்கிலே, மன்னிப்புக் கோரவில்லையா அல்லது வேறு ஏதும் காரணங்களால் அவரது மன்னிப்புப் பகிரப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

Related posts: