கருத்துக் கணிப்பில் முன்னிலை பெற்றுள்ள ஹிலாரி!

Wednesday, August 31st, 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் களம், நாளுக்கு நாள் சூடு பிடித்துள்ளதையடுத்து, தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மான்மவுத் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளிண்டனுக்கு 46 சதவீதம் ஆதரவும், டொனால்டு டிரம்புக்கு 39 சதவீதமும் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதில் 7 வீதம் கூடுதல் ஆதரவுடன் ஹிலாரி முன்னிலைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கட்சியினர் ஆதரவு என்ற வகையில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஜனநாயக கட்சியில் 85 வீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது.

டொனால்ட் டிரம்புக்கு குடியரசு கட்சியில் 78 வீதத்தினரின் ஆதரவு கிடைத்துள்ளது. மேலும் எந்த சார்பும் இல்லாதவர்கள் மத்தியில் ஹிலாரிக்கு 37 வீதம் ஆதரவும், டிரம்புக்கு 32 வீதம் ஆதரவும் உள்ளது.

இதேவேளை, த்ரி எமர்சன் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட மற்றொரு கருத்துக்கணிப்பில், ஓஹியோ மாகாணத்தில் இருவரும் சம பலத்தில் தலா 43 வீத ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. மிச்சிகனில் ஹிலாரிக்கு டிரம்பை விட 5 வீதம், பென்சில்வேனியாவில் 3 வீதம் கூடுதல் ஆதரவு உள்ளது.

மேலும், ஹப் போஸ்ட், யூ கவ் நடத்திய மற்றொரு கருத்துக்கணிப்புகளில், குடியரசு கட்சியினரில் 54 வீதம்பேர் கட்சியின் வேட்பாளர் டிரம்ப் சரியான தேர்வு இல்லை என கருத்து கூறி அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எனினும், ஜனநாயக கட்சியில் 56 வீதம் பேர் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: