வரி விதிப்பை மேலும் அதிகரித்தால் தக்க பதிலடி: அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!

Tuesday, September 11th, 2018

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா வரி விகிதங்களை மேலும் அதிரித்தால் அதற்கான தக்க பதிலடி கிடைக்கும் என சீனா உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் திங்கள்கிழமை கூறியதாவது: சீன இறக்குமதி பொருள்களுக்கு வரி விதிப்பை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன இறக்குமதிப் பொருள்கள் மீது புதிய வரிகளை விதிக்க தயாராகும் பட்சத்தில் சீனாவும் தனது உரிமையை பாதுகாத்துக் கொள்ள தக்க பதிலடி நடவடிக்கையில் நிச்சயம் ஈடுபடும் என்றார்.

தொழில்நுட்ப கொள்கையில் ஏற்பட்ட போட்டி காரணமாக சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் 5,000 கோடி டாலர் மதிப்பில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரியை விதித்தன. இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் மேலும், 20,000 கோடி டாலர் மதிப்பிலான வரி விதிக்க தயாராகி வருகிறது.

இதனிடையே, டிரம்ப் கடந்தவாரம் கூறுகையில், கூடுதலாக 26,700 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருள்களுக்கு வரிகளை விதிக்க பரிசீலித்து வருவதாக கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே சீனா இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

Related posts: